Primary tabs
அறிவு காட்சி சென்றனன் - மனத்தில் நன் ஞானமும் நற்காட்சியும் அறிந்து நம்பினவனாகி, திருவறத்து -ஜினதருமத்தில், ஒருவன் ஆனான் - ஒப்பற்றவனானான், வென்றவர் சரண் அடைந்தார் - வினைகளைவென்ற முனிவர்களின் திருவடிகளை அடைந்தவர், விளைப்பது - விளைவித்துக் கொள்வது, வென்றியன்றோ - வினைகளை வெல்லும் வெற்றியேயன்றோ?(எ-று.)
யசோமதி மன்னன் திருவறத்தை மேற்கொண்டாளென்க. கன்றிய வினை - அடிப்பட்ட தீவினை. செல்லுதல் என்பது அறிதல் என்னும் பொருளில்வந்தது. செல்லுதற்பொருளில் வருஞ் சொற்களெல்லாம் அறிதற் பொருளையும் தரும் என்பது வடநூற் கொள்கை. ‘சென்றான்‘ (சூளா.1.)
(இ-ள்.) அருள்பெருகு உவகை தன்னால் அமைவு இலன் - அருட்குணம் மிகுதலால் உண்டாகிய உவகையால் (தந்தையாகிய தனது நிலையில்) அமையானாகிய அவ்யசோமதி, வெருள் செயும் வினைகள் தம்மை - (தான் செய்த) அச்சந்தரும் தீய வினைகளை, வெருவிய மனத்தன் ஆகி - அஞ்சிய உள்ளத்தனாகி, மருள் செயும் உருவம் மாட்சி மகனொடு - கண்டார் மருளச் செய்யும் உருவப் பெருமையினையுடைய மகனோடு, மங்கை தன்னை - புதல்வியையும் (நோக்கி), அளியன் - இரங்கத் தக்க யான், நும்மை - நும்மிருவரையும், தெருளலன் முன்பு செய்த - தெளியாமல் நுமது முன்பிறவிகளிற் செய்த, சிறுமைகள் - பிழைகளை, பொறுக்க என்றான் - பொறுத்தருள்வீராக என்றான்.
மன்னன், மக்களைப் பிழைபொறுக்க வேண்டினா னென்க.முன்பிறவி - மயில் நாய் ஆடு முதலிய பிறவிகள், உருவ மாட்சி இருவருக்குங் கொள்ளலாகும். (83)