Primary tabs
வந்தமிலா வறுபத்து மூவரரு ளம்புவிமே
னந்தியிட மும்மலமு நல்லுலகோர் நீங்கியிடச்
சிந்தையருட் சிவமாகத் தெளிவித்தா னருட்சென்னி
மேராரு மிறைவனையு மெழிலாரு நம்பியையு
மாராத வன்பினுட னடிபணிந்தங் கருள்விரவச்
சோராத காதன்மிகுந் திருத்தொண்டர் பதந்துதிப்பாம்.
திருமுறைகண்ட
புராணம் முற்றிற்று
ஆகத்
திருவிருத்தம் - 46
திருப்பதிக்கோவை,
திருப்பதிகக்கோவை, திருமுறைகண்ட புராணம்
எனுமிவை ஆக்கியோர் பெயரில்லாமலே பல பதிப்புக்களிற்
பதிக்கப்பட்டுள்ளன. இவை உமாபதி சிவனார் திருவாக்கல்ல என்று
கூறுவாருமுண்டு. இங்கு இறுதிப் பாட்டிலே திருத்தொண்டர் பதந்துதிப்பாம்
(45) என்றது திருத்தொண்டர் புராணசாரத்தினைக் குறிக்குமெனத்
தோன்றுவதால்அதன் ஆசிரியராகிய உமாபதி சிவசாரியாரே திருமுறைகண்ட
புராணமுஞ் செய்தாராவர் என்ற கொள்கை வலியுறுகின்றது.