Primary tabs
அணி
- அழகு என்பர். தமிழிலக்கணத்தை ஐந்தாகப் பகுத்து
அவற்றில் இறுதியில் வைத்தெண்ணப்படுவது அணி யிலக்கணம் என்பது
மரபாம். உயாந்தோர் செய்யுட்கெல்லாம் இன்றியமையாதது அணி.
"பொருட்கிடனாக உணர்வினின் வல்லோரணிபெறச் செய்வன செய்யுள்"
என்பது சூத்திரம். எனவே தெய்வச் சேக்கிழார் பிரானருளிய - அன்று -
அவருள் நின்று இறைவன் அருளிய - இப்புராணப் பெருங்காப்பியச்
செய்யுட்கள் ஒவ்வொன்றும் ஒன்றும் பலவுமாகிய அணிகளுடையனவேயாம்.
வடமொழிக் காப்பியங்களுக்குப் பேருரை வகுக்கும் உரையாசிரியர்கள்
ஒவ்வொருபாட்டினும் அணிகள் எடுத்து வகுத்துக் காட்டுவர். ஆயின்
இவ்வுரையில் மிகச் சில பாட்டுக்களில் மட்டும் அணிகள்
காட்டப்பட்டுள்ளன. ஒவ்வொரு பாட்டுக்கும் அணிகள் காட்டிச்
செல்வதற்குரிய அறிவும் ஆற்றலும் போதிய காலமு மிடமும்
பெறாமையின் அம்மட்டிற் காட்டி மேற்செல்ல நேர்ந்தது. ஆயினும்
சேக்கிழார் செய்யுளணிகளில் ஒரு சிலவேனும் இவ்வுரையில் ஓர்
பாகத்தில் ஒருசேரக் காட்டுதல் நலமென்று பெரியோர் பணிக்க,
அதனைச் சிரமேற்கொண்டு இங்குச் சில குறிப்புக்கள் எழுதத் துணிந்தேன்.
தமிழில் உவமையணி ஒன்றேகொண்டு, அதற்கு உவமவியல்
என
ஓரியலும் வகுத்தனர் ஆசிரியர் தொல்காப்பியர். பின்னாளிற் தமிழிற்
பெரும்பாலும் வடமொழி கலந்து வழங்கியதாக, வடமொழி அலங்கார
சாத்திரமும் அவ்வாறே தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வழங்கலாயிற்று.
தண்டியலங்காரம், மாறனலங்காரம் முதலியவை வடமொழி
அலங்காரங்களின் மொழிபெயர்ப்புக்களே. பின்னர் வந்த இலக்கண
விளக்க நூலாரும் அவற்றை ஒட்டியே "தன்மை உவமை உருவகந் தீவகம"
என்ற சூத்திரத்திலே 35 அணிகளை உடன்படுத்தினார். இவற்றுட
பின்வருநிலை முதலிய சொல்லணிகளும், தீவகம் - நிரனிறை முதலிய
பொருள்கோணிலை பற்றிவைகளும், பிறவற்றையும், ஒழித்து எஞ்சியனவற்றில்
பெரும்பகுதி உவம விசேடங்களேயாம்.
சிலேடை, ஒப்புமைக்கூட்டம், தற்குறிப்பேற்றம்
முதலியவை உவம
இயல்பினையே தாங்கி நிற்கின்றன. ஆர்வம், விரோதம் முதலியவாகக்
கூறப்படும் சுவைகளை மெய்ப்பாடுகள் என வைத்து மெய்ப்பாட்டியலிற்
கூறினார் ஆசிரியர் தொல்காப்பியர். பெரிய புராணத்திற்கு இலக்கணமாவது
தொல்காப்பியமே. ஆயினும் திருஞானசம்பந்த சுவாமிகள் காலத்திற்கு
முன்பிருந்தே வடமொழியாட்சிகள் பல தமிழில் விரவி வழங்கினவாதலின்
ஆசிரியர் சேக்கிழார் அதனைப் பின்பற்றியே நூல் செய்து பல
அணிவகைகளையும் மேற்கொண்டு கூறியருளினர். தண்டியலங்கார
முடையார் தொல்காப்பியரைப் பெரும்பாலும் தழுவியே உவமைகளை
வகுத்துள்ளார். அதனுட் கூறியவற்றையும் உடன்பட்டு இப்பகுதியிற்
கண்டவற்றுள் இங்குச் சில அணிகளுக்கு மட்டும் உதாரணங்
காட்டப்படுகின்றது. இவ்வகையில் வல்ல பேரறிஞர்கள் பின்னும்
முயன்றால் எல்லா அணிகளுக்கும் இந் நூலினின்ற உதாரணம்
காட்டலாம். வல்லார் அது செய்து உதவுவார்களாக.
சொல்லணிகளுட் சில :-
1. கரும்பல்ல நெல்லென்னக் கமுகல்ல கரும்பென்ன - 65.
2. பண்டரு விபஞ்சி - 82.
3. மாடு போதகங்கள் - 83.
4. வீதிகள் விழவினார்ப்பும் - (84) முதலிய பாட்டுக்களுட் காண்க.