Primary tabs
இதனை வலம் வந்தபோது
சிவபெருமானது எதிர்காட்சி கொடுக்கத் தரிசித்துக்
"கயிலையினில் வீற்றிருந்தபடி கண்டுகொண்டே"னெனப் பாடியருளிய தன்மை
வாய்ந்தது. தலவிசேடம் திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் புராணத்துட்
காண்க. இதன் பெயர்கள் ஊழிக்காலக்கிரமத்தில் வந்தன.
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
- வன்றொண்டன் - (47 - 48 - 216 -
274 - 293 - 306 - 315 - 318 - 346 - 348) - நாவலர்கோன் - (27 -
224 - 271 - 325 - 326) - நம்பியாரூரன் - (29 - 50 - 150 - 165 - 201
- 209 - 343 - 349) - நம்பி - (39 - 179 - 189) - ஈசனுக்கினியான் (161) -
நாவலர் பெருந்தகை (181) - நாவனகரூரன் (183) - திருநாவலூரான் - (184 -
189) ஆரூரர் - (194 - 197 - 232 - 273) - நாவலூரர்கோ (208) நாவலர்
பெருமான் (220) - நாவலர் தனிநாதன் (223) - தமிழ்நாதன் (232) -
திருநாவலூராளி (233) நாவனகரார் பெருமான் (244) - வள்ளலார் (258) -
தம்பிரான் தோழன் - (275 - 317) - தமிழ் நாவலர் தம்பெருமான் (276) -
ஆளுடைய நம்பி (285) - நாவலர் காவலர் - (287) - உடையநம்பி (295) -
நாவலூரான் - (303) - நாவலூர் மன்னன் (327) - திருமுனைப் பாடி நாடர்
(344) - ஊரன் (498) - ஆரூரன் (325).
சைவ சமயகுரவர் நால்வரி லொருவர். தோழ மார்க்கத்தை
அநுட்டித்துக் காட்டிய ஆசாரியர். திருத்தொண்டர் புராணம் என்னும்
இப்பெரும் காப்பியத்திற்குத் தலைவர். கயிலாயத்தில் சிவபெருமானது
அழகே உருவாய் வெளிப்பட்டுத் தோன்றியவர் என்பர்.
திருப்பாற்கடலினின்று மெழுந்த ஆலகால விடத்தைச் சிறிதளவாகத்
திரட்டிவந்து சிவபெருமானிடம் தந்தமையால் ஆலாலசுந்தரர் என்னும்
பெயர் பெற்றவர். மாதவஞ்செய்த தென்றிசை வாழ்ந்திட இவர் மண்ணுலகிற்
போந்த காரணம் திருமலைச் சிறப்பிலும் (31), இவர் வாழ்க்கை
தடுத்தாட்கொண்ட புராணத்திலும் (224), எயர்கோன்கலிக்காம நாயனார்
புராணம், கழறிற்றறிவார் நாயனார் புராணம், வெள்ளானைச் சருக்கம்
இவற்றிலும் காண்க. இவர் கயிலையினின்றும் பூவுலகிற் போந்து
திருத்தொண்டத்தொகையருளி மீளக் கயிலையடைந்த வரலாற்றின் விரிவே
இப்புராணமாம்.
சூரியன்
- ஞாயிறு (26) -
செங்கதிரவன் (10) வெங்கதிரோன் (98)
கதிரவன் (159) - இரவி
(227) ஏழ்பரித்தேரோன் (303) - பகல்
(307) -
கதிரோன் (326) - ஒன்பது கோள்களில்
இராச கிரகம் எனப்படுவர்.
உலகிற்கு ஒளியும் சூடும் தந்து தழைக்கச் செய்து காப்பவர். சிவபெருமானது
வலது கண்ணாவார். இவரினின்றும் வருவது சோழ மரபு.
செங்குன்றூர்
(492) - இது மலைநாட்டு வைப்புத் தலம்.
செங்கண்ணூர் என்று தற்காலம் வழங்கப் பெறுகின்றது. விறன்மிண்ட
நாயனார் திருவவதாரஞ் செய்த திருத்தலம். சிலப்பதிகாரக் கதாநாயகியாகிய
கண்ணகி இங்கு நின்றும் கோவலனுடன் விமானத்தில் ஏறி விண்ணுலக
மடைந்தாளென்று கூறப்படுகின்றது. தில்லை மூவாயிரவர்போன்று இங்கு
மூவாயிரம் வேதியர்கள் வாழ்ந்தனரென்று நம்மாழ்வார்
பாசுரத்தானறியப்படும். தலவிசேடம் காண்க (பக்-632).
சேதிநாடு
(466 - 467 - 490) - சேதியர் (474)
- நடுநாட்டின் ஓர்
உட்பிரிவு. மலாடர் நாடு என்றும் கூறுப. தற்காலம் திருக்கோவலூர் தாலூகா
இதன் பரப்பாகும். மெய்ப்பொருணாயனார் ஆண்ட திருநாடு.
சேரநாடு
(492) - சேரமன்னர்களால் ஆளப்பட்டது. மலைநாடு -
முன்னாளில் தமிழ் நாடாயிருந்தது. சென்ற 600 ஆண்டுகளாக மலையாள
நாடாயிருந்து வருகின்றது.
சேரர் (492) - தமிழ் மூவேந்தர் மரபுகளில் ஒரு மரபு.
சைய மால்வரை
(53) - பரத கண்டத்தின் மேற்குத் தொடர்ச்சி
மலையில் காவிரி நதிக்குப் பிறப்பிடமாயுள்ள ஒரு மலை.
குடகு நாட்டிலுள்ளது.