தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Periya Puranam

சைவம் (50) - சிவசம்பந்தமுடையது. இராஜாங்கத்தமர்ந்த வைதிக
சைவசமயம். மற்றைச் சமயங்கள் யாவும் இதனங்கங்களாம். பலதிறப்பட்ட
ஆன்மாக்களுக்கு உய்வினைத் தருவதோருயர்ந்த நெறி. "வேதப்பயனாம்
சைவம்" - சண்டீசர் - புரா - (9).

சோழ நாடு - புனனாடு (50) - காவிரி நாடு (51 - 62) - நீர்நாடு
(67) - பொன்னி நாடு (502) - சோழ மரபில் வந்த மன்னர்களால்
ஆளப்பட்டது.

சோழார் (51) - செம்பியர் (97) - வளவன் (116) - சென்னி (404) -
செம்பியர் (502) - தமிழ் மூவேந்தர் மரபுகளில் ஒன்று. திருநீற்றின் உரிமை
பெற்றாராய்ச் சைவத்துறையின் வழிவழிக் குடியாக வந்த அரசர்கள்.

ஞானம் - ஞானமே முதலர் நான்கு (356) - சைவ நாற்பாதங்களு
ளொன்று. "பரந்த வான்கலை முழுதுமா கமநூற் பகுதி யும்பல சமயசாத்
திரமுந், தெரிந்து தேர்ந்ததில் வாய்ந்தமுப் பொருளின் செய்தி யேபொரு
ளெனமனந் தெளிந்து, புரிந்து போந்நுள சிற்றறி வனைத்தும்போக்கி யவ்வறி
வெனச்சிவ போதம், விரிந்து தோன்று நெஞ்சுடைய வித்தகரே
மேன்மையான நம் மெய்ப்பதம் பெறுவர்." - திருவாதவூரடிகள் புராணம்.

தத்தன் (475 - 482 - 484) - மெய்ப்பொருணாயனாரது
மெய்க்காவலாளன். தன் தலைவரான நாயனார் சொற்கடவா தொழுகும்
பணியாளன். சரிதச் சுருககம் (பக் - 608) காண்க.

தமிழ் வரைப்பு (85) - தமிழ் உலகம். தமிழ் நாடு. செந்தமிழ்
நாடென்றும், கொடுந்தமிழ் நாடென்றும், இலக்கணங்களில் வரையறுத்த
எல்லைக்குட்பட்ட தமிழ் வழங்கும் நிலம். இது ஒரு காலத்து வடக்கு
இமயமலைவரையும் தெற்குக் கடலின் மேலும் பல்லாயிரங்காத அளவும்
பரவியிருந்ததென்று சரிதங்கூறுப. கடல்கோள்களினாலும் அன்னிய
மொழியாளர் படையெடுப்புக்களினாலும் இதனெல்லை இஞ்ஞான்று குறுகி
நிற்கின்றது என்ப.

தருமம் (107 - 129) - அறக்கடவுள். இஃது இறைவன் மேற்
கொள்ளும் நீதியுருவம். "இன்னவுரு வின்னநிற மென்றுணர்வ தேலரிது
நீதிபலவுந் தன்னதுருவாமென மிகுத்ததவ நீதியொடு தானமர்பு" என்ற
ஆளுடைய பிள்ளையார் தேவாரங் காண்க. இறைவனது விடை
தருமசொரூபமான தென்பர்.

திருக்கூட்டம் (347 - 349 - 495 - 498) - திருத்தொண்டர்கள்
சேர்ந்து கூடியுள்ள தொகுதி.

திருத்தொண்டத் தொகை (35 - 47- 48- 358 - 499 - 501)-
திருத்தொண்டத் தொகைத் தமிழ் (146) - திருத்தொண்டத் தொகைப்
பதிகம் (340 - 347) - "தென்றமிழ்ப்பயன்" (358) - "தில்லைவா ழந்தணர்த
மடியார்க்கு மடியேன்" என்று திருவாரூர்ப் பெருமான் அடியெடுத்துக்
கொடுக்க ஆரூரர் பாடியருளிய பதினொரு திருப்பாசுரங்கள் கொண்ட
பதிகம். அறுபான் மும்மைத் தனியடியார்களையும் ஒன்பது
தொகையடியார்களையும் போற்றுவது. இதுவே இப்புராணத்திற்கு
முதனூலும் பதிகமுமாக வுள்ளது. திருமலைச் சிறப்பு, தடுத்தாட்கொண்ட
புராணம் முதலியவற்றில் இதன் விரிவு காண்க.

திருத்தொண்டா - புனிதா (141) சிவபெருமானது அடிமறவாத
பெரியோர். இவர்களது வரலாறும் பண்பும் இப்புராணங்கூறும். சிறப்பாகத்
திருக்கூட்டச் சிறப்பு என்ற பகுதியிற் பேசப் பெறுவர்.

திருத் தொண்டர் புராணம் (10) - ஆசிரியர் சேக்கிழார் சுவாமிகள்
இப்புராணத்திற்கு இட்ட பெயர்.

திருநீலகண்டம் (363 - 365 - 366) - விடமணிந்து தேவர்களைக்
காத்த இறைவனது கண்டம். இதன்பேரால் ஆணை நிகழ்ந்த வரலாறு
திருநீலகண்டநாயனார் சரிதத்திற் காண்க. இப்பெயரால் அமைந்து, கொங்கு
நாட்டிற் பனிநோய் தீர்த்த ஆளுடைய பிள்ளையார் திருநீலகண்டப் பதிக
வரலாறு அவர் புராணத்தினுட் காண்க.

புதுப்பிக்கபட்ட நாள் : 25-09-2017 15:59:54(இந்திய நேரம்)