Primary tabs
மற்றும் பலவிதங்களிலும் அவர்கள் பேருதவி புரிந்துள்ளார்கள். தலக் குறிப்புக்களும் மற்றும் விவரங்களும் அவ்வப்போது அறிவித்து உதவிய பல அன்பர்களுமுண்டு. எனது உறவினர்களுள் ஒருவராகிய செட்டிபாளையம் கிராம முன்சீப் - திரு. முத்துக்கிருட்டிண முதலியார் இவ்வுரை முழுமையும் விடாமுயற்சியுடன் படித்து அவ்வப்போது வேண்டிய ஊக்கம் தந்ததுமன்றி மேற்கோள் நூலகராதியும் தேவார முதற்குறிப்பகராதியும் தொகுத்துதவினார். முன்பகுதிகளில் உதவிய எல்லாப் பெரியார்களுடைய உதவிகளையும் இதனிலும் பெற்றுள்ளேன். இவ்வெல்லா அன்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி செலுத்துகின்றேன். இவ்வெளியீட்டைக் காணும் நண்பர்கள் பலரும் இவ்வாறே தத்தமக்குத் தோன்றிய திருத்தங்களை அன்புடன் எழுதியனுப்புவார்களானால் பேருதவியாகும்.
4. படங்கள்
இப்பகுதியில் தேவாரம் பெற்ற தலங்களுள் ஒரு பெரும் பகுதிக்கேனும் படங்கள் எடுத்துப் பதிக்க வேண்டுமென்று அடியேன் எண்ணினேன்; ஸ்ரீலஸ்ரீ மகா சந்நிதானங்களும் அவ்வாறே ஆணையிட்டருளினார்கள். ஒரு நூறு தலங்களுக்கு மேலாகக் குறித்துக் கொண்டார்கள். ஆனால் ஐரோப்பியப் போரின் கடிய முடுகிய நிலையினால் காகிதத்துக்கு மிகுதியும் பஞ்சம் வந்தது போலவே, படம் எடுத்துப் பதிவாக்கும் சாதனங்களும் அருகிவிட்டமையால் அம்முயற்சி கூடாமற்போய் ஒரு சில தலங்களையே படங்களாகக் காண இயல்வதாயிற்று. கிடைத்த சிலவற்றையுங் காகிதப் பஞ்சத்தினால் தனிப் பக்கங்களில் இடம்பெற அழகாக அச்சிட வசதியில்லாமல் பலவற்றை ஒரோர் பக்கத்தில் அமைத்துப் பதிக்க வேண்டி வந்தது. அப்பர் சுவாமிகளது தலயாத்திரைப் படங்கள் இரண்டு இதனுள் வருகின்றன. அவை யாத்திரை செய்வோர்க்குப் பெரிதும் பயன்படுவன. இவை விரிவான முறையில் அமைக்கப்பட்டபடியால் அன்பார் திரு. மலையப்ப கவுண்டர் அவர்கள் ஆர்வத்துடன் எழுதியனுப்பிய படங்களைப் பதிக்க இயலாமையாயிற்று.
5. அன்பர்களின் ஆதரவு
முன் பகுதியில் அன்ரர்கள் பலரும், நகராண்மை - நாட்டாண்மை முதலிய தலத்தாபன அதிகாரிகளும், பள்ளிகூட அதிகாரிகளும், இப்பதிப்பை வாங்கி வைக்க முற்படுவார்களாயின் அதுவே இவ்வெளியீட்டுக்குப் பேருதவியாகும் என்று விண்ணப்பித்திருந்தேன். சில அரசாங்கக் கல்லூரிகளிற் புத்தகசாலைகளுக்கு இப்பதிப்பைப் பெற்றுள்ளார்கள். தஞ்சைச் சில்லா நாட்டாண்மைக் கழகத் தலைவர் - திரு. V. நாடிமுத்துப் பிள்ளை, M.L.A., அவர்கள் இவ்வெளியீட்டுப் புத்தகங்களைத் தம் கீழ் உள்ள உயர்தரப் பள்ளிக்கூடங்களில் வாங்கி வைக்க உத்தரவு கொடுத்துள்ளார்கள். இவ்வாறே தமிழ்நாடு முழுவதிலும் உள்ள ஏனைய தாபனங்களிலும் கல்லூரிகளிலும் வாங்கி வைக்க முற்படுவார்களாயின் பேருபகாரமாகும். தமிழ் நாட்டு ஏனை அன்பர்களும் ஊக்கமளிப்பார்களாக.
6. இவ்வெளியீட்டுக்குப் "பண்டு மின்றும் மென்றும்" எவ்வகையாலும் உதவி புரியும் எல்லா அன்பர்களுக்கும் எனது வணக்கமும் நன்றியும் உரியனவாக்குக.
பேரூர்
‘பாலறாவாயர் நிலையம்'
26-11-1943
அடியேன்
C.K. சுப்பிரமணிய முதலியார்
பதிப்பாசிரியர்.