Primary tabs
மூன்றாம் பகுதி - முதற் பாகம்
(திருநாவுக்கரசு நாயனார் புராணம்)
இரண்டாம் பதிப்பின் முன்னுரை
பெரிய புராணப் பேருரையில் திருநாவுக்கரசு நாயனார் புராணப் பகுதியாகிய இப்பாகத்தின் முதற்பதிப்பு 26-11-43ல் வெளிவந்தது. அதன்பின் இருபத்திரண்டு ஆண்டுகள் ஐந்து திங்கள் சென்று நாயனாரின் திருநட்சத்திரமாகிய சித்திரைத் திங்கள் சதய நன்னாளாம் இன்று இதன் இரண்டாம்பதிப்பு வெளிவருவது திருவருள் துணையாலாகும்.
இவ்வுரை வெளியீட்டின் இப்பகுதியின் பிரதிகள் பல்லாண்டுகளுக்கு முன்பே முழுவதும் செலவாகிவிட்டன. அப்பொழுது இதற்குப் பிற்பட்ட பகுதிகளை அச்சிட்டு வெளியிடும் வேலை மேற்கொள்ளப் பட்டிருந்ததால் அப்பணியில் பெரும் பொருளும் பேருழைப்பும் செலவிடவேண்டி வந்து மறுபதிப்பு வேலைகளைக் கவனிக்க இயலாதாயிற்று. பிறகு இவ்வுரை வெளியீட்டின் ஏனைய பகுதிகளிற் சிலவும் முற்றும் செலவாகி விரும்பிக் கேட்கும் பல அன்பர்களுக்கு உரை வெளியீட்டின் எல்லாப் பகுதிகளும் உதவக்கூடாத நிலையேற்பட்டது. இந்நிலையில் 1961-வது ஆண்டின் தொடக்கத்தில் உரையாசிரியர் சிவக்கவிமணி - C. K. சுப்பிரமணிய முதலியவார் அவர்கள் சிவபதம் அடைந்தார்கள். இவ்வெளியீட்டிற்கான தமிழ் அச்செழுத்துக்கள் கிடைப்பதும் அருமையாயிற்று. காகித விலையும் அச்சுக்கூலியும் பிற செவுகளும் பன்மடங்கு உயர்ந்து விட்டன. திருவருளினால் மறுபதிப்பு வேலைகள் ஒருவாறு தொடங்கப் பெற்றுச் சென்ற ஆண்டில் இப்பகுதியின் இரண்டாம் பாகம் வெளியாயிற்று. இப்பொழுது இம்முதற்பாகம் வெளிவருகின்றது.
இப்பகுதியின் இரண்டாம் பதிப்புக்காக உரையாசியர் அவர்களிடம் திருநெல்வேலி கணபத் மில்ஸ் அதிபர் திரு. S. S. அருணாசலம் பிள்ளை அவர்கள் ரூ.1000/- நன்கொடை யளித்திருந்தார்கள். சிறந்த சிவபூசா துரந்தரரும் திருநாவுக்கரசு நாயனாரிடம் எல்லையற்ற பக்தி யுள்ளவர்களுமாகிய இவர்களது பேருதவி இவ்வெளியீட்டிற்கு ஒப்பற்ற அருந்துணையாயிற்று. கோவை - கவியரசு - வித்துவான் - கு. நடேச கவுண்டர். P. O. L. அவர்கள் இவ்வுரை வெளியீடு முழுவதும் பயின்று பல அரிய குறிப்புக்களைப் புதிய பதிப்புக்களில் சேர்த்துக்கொள்ளும்படி அன்புடன் உதவினார்கள். அவை அன்பார்ளுக்குப் பெருவிருந்தாவன். அவற்றை இப்பதிப்பில் சேர்த்துள்ளேன். சென்னை, இராயப்போட்டை - திரு. மு. நாராயணசாமி முதலியார் அவர்கள் இப்பதிப்பைத் தமது முருகன் அச்சகத்தில் மிகச்சிறந்த முறையில் அச்சிட்டு உதவினார்கள். இம்மூன்று பெருமக்களுக்கும் எனது கடப்பாடுடைய நன்றி உரித்தாகுக,
இவ்வெளியீட்டின் ஏனைய பகுதிகளின் மறுபதிப்புக்களும் தொடர்ந்து விரைவில் வெளிவரத் திருவருள் துணைசெய்வதாக.
கோயம்புத்தூர்
26-4-65
க. மங்கையர்க்கரசி