Primary tabs
1335.
நீற்றா னிறைவா கியமே னியுட னிறையன் புறுசிந் தையினே சமிக
மாற்றார் புரமாற் றியவே தியரை மருளும் பிணிமா யையறுத் திடுவான்
"கூற்றா யினவா றுவிலக் ககிலீ ரெனநீ டியகோ திறிருப் பதிகம்
போற்றா லுலகே ழின்வருந் துயரும் போமா றெதிர்நின் றுபுகன்றனரால்.
- தேவாரம்
திருவதிகைவீரட்டானம் - பண் - கொல்லி
கூற்றா யினவா றுவிலக் ககிலீர் கொடுமை பலசெய் தனநா னறியேன்
ஏற்றா யடிக்கே யிரவும் பகலும் பிரியா துவணங் குவனெப் பொழுதும்
தோற்றா தென்வயிற் றினகம் படியே குடரோ டுதுடக் கிமுடக் கியிட
ஆற்றே னடியே னதிகைக் கெடில வீரட் டானத் துறையம் மானே.
1
3. அரசனழைக்க "நாம்யார்க்கும் குடியல்லோ" மென்று மறுத்தது
- புராணம்
1358.
"நாமார்க்குங் குடியல்லோ" மென்றெடுத்து நான்மறையின்
கோமானை நதியினுடன் குளிர்மதிவாழ் சடையானைத்
தேமாலைச் செந்தமிழின் செழுந்திருத்தாண் டகம்பாடி
யாமாறு நீரழைக்கு மடைவிலமென் றருள்செய்தார்.
93
- தேவாரம்
மறுமாற்றத் திருத்தாண்டகம்
நாமார்க்குங் குடியல்லோம் நமனை யஞ்சோம்
நரகத்தி லிடர்ப்படோம் நடலை யில்லோம்
ஏமாப்போம் பிணியறியோம் பணிவோ மல்லோம்
இன்பமே யெந்நாளும் துன்ப மில்லை
தாமார்க்குங் குடியல்லாத் தன்மை யான
சங்கரனற் சங்கவெண் குழையோர் காதிற்
கோமாற்கே நாமென்று மீளா வாளாய்க்
கொய்ம்மலர்ச்சே வடியிணையே குறுகி னோமே.
1
4. (1) நீற்றறையி லிடப்பெற்றது
- புராணம்
வெய்யநீற் றறையதுதான் வீங்கிளவே னிற்பருவந்
தைவருதண் டென்றலணை தண்கழுநிர்த் தடம்போன்று
மொய்யொளிவெண் ணிலவலர்ந்து முரன்றயா ழொலியினதா
யையர்திரு வடிநீழ லருளாகிக் குளிர்ந்ததே.
98
- தேவாரம்
தனிக்குறுந்தொகை
மாசில் வீணையும் மாலை மதியமும் - வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே - ஈச னெந்தை யிணையடி நீழலே.
1
- புராணம்
(2) விடங்கலந்த பாலடிசில் மிசைந்திருந்தது
1369.
நஞ்சமுத மாமெங்க ணாதனடி யார்க்கென்று
வஞ்சமிகு நெஞ்சுடையார் வஞ்சனையாம் படியறிந்தே
செஞ்சடையார் சீர்விளக்குந் திறலுடையார் தீவிடத்தால்
வெஞ்சமன ரிடுவித்த பாலடிசின் மிசைந்திருந்தார்.
104