Primary tabs
தேம்பாவணி
முழுவதற்கும் உரை வகுத்தல் என் வாழ்க்கைக்
கடமை என்ற ஓர் உணர்வு 1950 முதலே எனக்கு ஏற்பட்டது. அதற்கு
ஒரு பயிற்சி போலவே 'தேம்பாவணிச் சுருக்கம்' அமைந்தது. அது
அப்பொழுது தூத்துக்குடியில் இயங்கி வந்த தமிழ் இலக்கியக்
கழகத்தால் வெளியிடப்பட்டது. தொடர்ந்து, 'தேம்பாவணிக் கிளைக்
கதைகள்' உருவானது. அதனை அச்சிட முயலவில்லை. இப்பொழுது
அது தேவையற்றதும் ஆயிற்று.
'அச்சிட
யார் முன் வருவார்?' என்ற கொக்கியில் மாட்டிக்
கொண்டு என் உணர்வு உறங்கிப் போயிற்று. இடையே 'அருளவதாரம்'
அமைக்கும் பணியில் ஈடுபட்டமையால் அது மறந்து மறைந்து போயிற்று.
பாளையங் கோட்டை வீரமாமுனிவர் ஆய்வுக்கழகம் அப்பணிக்கு
என்னை ஆளாக்கிய போது நன்றியுணர்வே மேலோங்கி நின்றது.
கரும்பு தின்னக் கூலி தந்தது போல் ஆயிற்று அது.
இந்தக்
கரும்பு தங்கத் தகட்டாற் பொதிந்த கரும்பு. தகடு
தங்கமாயினும், கரும்பைச் சுவைக்க வேண்டுமாயின், இந்தத் தகட்டைக்
கடித்து உடைத்த பின்னரே அது இயலும். இப்பணியைத்தான் இப்புதிய
உரைப்பதிப்பு நிறைவு செய்ய முயன்றிருக்கிறது.
செய்யுளின்
ஓரடி முழுவதையும் ஒரே தொடர்போல் அமைத்துக்
காட்டியிருந்த முறையை மாற்றி, அடி ஒவ்வொன்றும் யாப்பு
மரபுக்கேற்பச் சீர் பிரித்து முதற்கண் மூலம் அப்படியே தரப்படுகிறது.
அடுத்து, பொருளுக் கேற்பச் சொற்கள் பிரிக்கப்பட்டு, ஏற்ற நிறுத்தக்
குறிகளோடு அடிபிறழாமல் தரப்படுகிறது. பின், சொற்பொருளும்
தொடர் முறையும் பொருந்த அமைந்த பொழிப்புரை இடம் பெறுகிறது.
இறுதியில் விளக்கம், இலக்கண அமைதி போன்றவற்றிற்கான
அடிக்குறிப்பு அமைகிறது. இது, ஓரளவு கற்றுணர்ந்தாரும் நூற்பொருளை
உள்ளவாறு உணர்ந்து இன்பம் துய்க்கப் பெரிதும் உதவுமென்று
நம்புகிறோம்.