Primary tabs
இதனிடையே
தேம்பாவணி ஆசிரியர் பற்றியும், அதன்
உரையாசிரியர் பற்றியும் ஆதாரமில்லாமற் கூறப்படும் அவதூறுகளைக்
குறிப்பிட்டு, தக்க ஆதாரங்களால் உண்மையை நிலையுறுத்தல்
இன்றியமையாததாகின்றது.
நூலாசிரியர்
: வீரமாமுனிவர் தமிழைக் கெடுத்தார் என்கிறார்,
திரு. பகீரதன் என்பவர். 'குமுதம்' அதற்கு எதிரான கருத்துக்களையும்
வெளியிடுவதுபோற் காட்டிக் கொண்டு, உருப்படியானவற்றை
இருட்டடிப்புச் செய்து, விவாதத்தைத் தொடங்கியவரையே நடுவராக்கி,
அவர் முடிவையே முடிவாக்கி, விவாதத்தை முடித்துக் கொள்கிறது.
எனினும், வீரமாமுனிவர் தமிழைக் கொடுத்தார், தமிழைப் பல
துறைகளிலும் வளமாக்கி நமக்குக் கொடுத்தாரென்பதே உண்மை.
'கொடுத்தார்' என்ற சொல்லிலுள்ள முதலெழுத்தின் காலை வாரியதன்
மூலம், முனிவரையே காலைவாரி விடச் செய்த முயற்சியே அது என்பதை,
முனிவர்தம் பல்துறைப் படைப்புகள், தமிழ் உள்ளளவும், காய்தல்
உவத்தலின்றி ஆய்வார்க்கு அங்கை நெல்லிக்கனி போற் காட்டி நிற்கும்.
திரு. பகீரதன் பரவாயில்லை: வீரமாமுனிவர் சில புதிய
படைப்புக்களை ஆக்கினாரென்ற உண்மையையேனும் ஒப்புக்
கொள்கிறாரே! ஓர் ஆதாரமுமின்றி, தேம்பாவணியை ஆக்கியவர்
வீரமாமுனிவரே அல்லரென்று ஓங்கி உரைப்பாரும் உளர். இவரெல்லாம்
நூலுக்குள்ளே நுழையாமலோ, நுழைந்தும் நுனிப்புல் மேய்பவராய் ஏதோ
ஒரு மயக்கத்தில் செத்தோம் பிழைத்தோமென்று வெளியேறி நின்றோ,
இவ்வாறெல்லாம் விளம்பர வெடிகுண்டு வீசுகின்றனரென்று எண்ண
இடம் தருகிறது.
தேம்பாவணிப் பாவுரை
பதிகம்,
நிறைமொழிக் குரவன், நிகர்இல் கேள்வியன்,
வீரமா முனி என்போன் வியன்தமி ழாக
நீர்அளாம் உலகுஎழ நீர்த்துஉரைத் தனன்"
என்கிறது.