Primary tabs
வீட்டுஉரி மொழியாய் விளம்பிய நிலையில், இந்
நாட்டு மொழியொடு நயந்து இவண் நாட்டின
புறநிலைக் காப்பியப் பொருளாய், வினைஒழி
அறநிலைக் காப்பிய மாக, வண் தமிழாய்
வீரமா முனியென மேல்வட திசையினின்று
ஈரமா தயைஉணர்ந்து இவண்ஒரு குருஉறீஇ,
சறுவே சுரன்தான் தந்த திருமறை
சறுவர்க்கு உணர்த்தித் தருங்கதி செலுத்தும்
தயிரிய சாமி தவறா மொழியுடன்
உயிர்இயல் பயனே உரைத்த திருக்கதை''
மேலும்,
''மற்ற நாட்களில் நீ கோவிலுக்கு வராவிட்டாலும்
பரவாயில்லை; ஞாயிற்றுக்கிழமை வராவிட்டால் பரவாய் இருக்கும்''
என்கிறார் ஒருவர். கேட்டவன், சிரிப்பையும் அடக்கிக் கொண்டு,
''அப்படியெல்லாம் நான் பார்ப்பது கிடையாது'' என்ன, அவர், ''வேறு நீ
எப்படியெல்லாம் பார்ப்பது கிடைக்கும்?'' என்கிறார். வெடிச் சிரிப்பு
அவருக்குத் திகைப்பூட்டுகிறது. வேற்று நாட்டவர் ஒருவர் வாயில்
தமிழ் படும் பாடும், தமிழ் கையில் அவர் படும் பாடும் இதனால்
விளங்கும்.
இந்த
அளவிற்கு இராவிடினும், தமிழை அறக் கற்று இலக்கணமும்
வகுத்த வீரமாமுனிவரிடமும், அவரை இன்னாரென்று காட்டுவனபோல்,
புதுமையான சொல்லாட்சிகள் காப்பியம் முழுவதும் ஆங்காங்குக் காணக்
கிடக்கின்றன. அதன் முதற் பன்னிரு படலங்களை எடுத்துக் கொண்டு
சில பார்ப்போம் :
(1)
'கிள' என்ற வினையடியினின்று, தொழிற் பெயர், வினைமுற்று,
வினையெச்சம், பெயரெச்சம் என்ற அமைப்பு முறையில், கிளத்தல்,
கிளந்தான், கிளந்து, கிளந்த என்ற வடிவங்கள் அமையும். முனிவர்,
கிளற்றுதல், கிளற்றினான், கிளற்றி, கிளற்றிய என்று அமைப்பார்
(பாயிரம் 6). 'பொரு' என்ற வினை வடிவம், பொருதல், பொருதான்,
பொருது, பொருத எனற்பாலன, அவரிடத்துப் பொருதுதல், பொருதினான்,
பொருதிய என அமையும் (1 : 20; 1 : 68).