Primary tabs
சான்றோர் உரை
மூதறிஞர் - பன்மொழிப்புலவர்
கா. அப்பாத்துரையார்
அவர்கள்
வழங்கிய வாழ்த்துரை
நல்ல தோட்டக்காரன், தோட்டத்திலுள்ள பழமரங்களுக்கு மட்டுமே உரமிட்டு
நீர் வார்ப்பான்; களைச் செடிகளுக்கோ, நச்சுச் செடிகளுக்கோ வார்க்க மாட்டான்.
அது போல நல்ல அரசாங்கங்கள் உழைப்பவர்க்கு மட்டுமே தனிச் சலுகைகள்,
உழைப்பின் பலன்கள் வழங்கும். மனித இனம் அப்பொழுதுதான் வளரும்.
உழையாதவர்களுக்கும், சுரண்டுகின்றவர்களுக்கும் கொடுக்கின்ற ஊட்டம் வீணானது
மட்டுமல்ல; மனித இனத்தின் அழிவுக்கே வழி வகுக்கும்.
இந்தக்
கொள்கையுடன் மக்களுக்கும், தலைவர்களுக்கும் அரசாங்கங்களுக்கும்
நல்லுணர்ச்சியூட்டும் முற்போக்குச் சிந்தனையாளர்கள், உலகில் எந்த நாட்டையும்
விட இந்தியாவிலே மிகுதி. ஆனால், அதுபோலவே மனித இன அழிவுக்கு
வழிவகுக்கும் பிற்போக்குச் சிந்தனைகளை வளர்ப்பவர்களும் வேறு எந்த
நாட்டையும்விட இந்தியாவிலேதான் மிகுதி.
அறிவுத்துறையில் முற்போக்கு, பிற்போக்கு ஆகியவற்றிடையே உள்ள
குருச்சேத்திரப் போராட்டம் இந்தியாவிலேதான் நடந்தாக வேண்டும்.
நல்ல காலமாகப் புரட்சிகள் மேனாட்டில் நடந்தாலும் உருசியப் புரட்சியை
முதன்முதலில் வரவேற்றுப் பாடிய கவிஞன் பாரதி இந்தியாவிலேதான்
தோன்றினான். அவனைப் பின்பற்றிப் பாரதிதாசனும், பாரதிதாசன்
பரம்பரையும் இருபதாம் நூற்றாண்டைப் பேரளவில் ஒரு முற்போக்கு இலக்கிய
நூற்றாண்டாக ஆக்கியுள்ளனர். அவர்களிலே இன்றும் முதலாளித்துவ மாயையால்
நிழலடிக்கப்பட்டுள்ள கவிஞர் தமிழ் ஒளியும் ஒருவர்.
தேசியக் கவிஞர் பாரதி முற்போக்குக் கவிஞராய் இருந்ததுடன், விடுதலைப்
போராட்ட இயக்கத்தில் போர்க் களத்துக் கவிஞராகவே விளங்கினார்.