Primary tabs
பாவேந்தர் பாரதிதாசனும் அதுபோலச் சமுதாயச் சீர்திருத்த இயக்கப்
போராட்டத்தில் போர்க்களத்து வீரக் கவிஞராக விளங்கினார்.
கவிஞர் தமிழ் ஒளியோ இருவரையும் தாண்டி உலகத் தொழிலாளிகளின்
இயக்கமாகிய பொதுவுடைமைப் போர்க்களத்தில் களப்போர் வீரக்கவிஞனாக
விளங்கியுள்ளார்.
அவருடைய கவிதைகளில் சிலவற்றை அண்மைக் காலங்களில் பார்க்க
நேர்ந்தபோது நான், கடல் பார்க்க விரும்பியவன், நேரிடையாகப் பசிபிக்
மாகடலின் நடுவே கொண்டு விடப்பட்டுள்ளது போல் திணறினேன்.
இவ்வளவு பெரிய ஒரு கவிஞன் என் காலத்தில் என் அருகே வாழ்ந்த
போதும், அவன் பெருமையை அறிந்துகொள்ளாமல் எப்படி இருந்துவிட்டேன்
என்று நான் அங்கலாய்த்தேன்.
அவருடைய வாழ்க்கை ஒரு சோக நாடகம் என்று நண்பர்கள் எனக்கு
ஆறுதல் கூறினர். ஆனால் அவர் கவிதை சோக நாடகமன்று. தொழிலாளர்
உலகுக்கும் இலக்கிய உலகுக்கும் அது பெரிய நம்பிக்கை நட்சத்திரமாகும்.
கவிஞர் தமிழ் ஒளியின் கவிதைகளில் மூன்று வகைகளைக் காண்கின்றோம்.
முதலாவது, அவர் கவிதைகள் பல பாரதி, பாரதிதாசன் வழியில் நின்று
முற்போக்குக் கருத்துகளையும், தொழிலாளர் இயக்கச் செய்திகளையும் ஒரு
மனித இனக்காப்பியமாக வளம்பட வழங்குகின்றன, இதுவரையும், இந்தத்
துறையில் அவர், அவர்களைப் பின்பற்றியவர் மட்டுமல்ல, தாண்டிச் சென்று
தன் முழு மொழியாற்றலையும், கவிதையாற்றலையும் அதில் ஈடுபடுத்தினார் எனலாம்.
இரண்டாவது வகை, கவிதையின் கற்பனைத் திறனும், உவமை முதலிய
அணியழகுத் திறனுமாகும். இதில் அவர் இருபதாம் நூற்றாண்டுக் கவிஞர்கள்
அனைவரையும் மிஞ்சிவிட்டார் என்றே நான் கருதுகிறேன்.
இதில் எனக்கொரு பங்குண்டு என்பதிலும் நான் மிகவும் மகிழ்ச்சி
கொள்கிறேன்.
திராவிடக் கழகத் தொடக்கக் காலத்தில் நானும், என் துணைவியார்
அலமேலு அப்பாத்துரையும் நடத்தி வந்த சீர்திருத்தத் திருமணங்களில்,