தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்


தமிழ்ஒளியை நான் ஒரு இளைஞராகச் சந்தித்தேன். அவர் பேச்சில் 
கவிதை மணமும் உணர்ச்சி வேகமும் என்னை ஈர்த்தன.

திராவிட இயக்கத் தோழரான திரு மா.சு. சம்பந்தம், அவரை என்னிடம்
நேரிடையாக அழைத்து வந்து, “உங்கள் வாழ்த்தை இந்த இளங்கவிஞர்
விரும்புகிறார்” என்று கூறினார்.

அவருக்கு நான், “இப்போது இளங்கவிஞர்கள் பலர் வேகமாக 
வளர்கின்றனர்; அவர்களிடையே உங்களுக்குத் தனி உயர்வு வேண்டுமானால்,
காவியங்கள் எழுதுங்கள்” - என்று கூறினேன்.

‘வீராயி’ என்ற காவியத்தை அதன்பின் அவர் எழுதி வெளிட்டபோது, 
அதன் படி ஒன்றை என்னிடம் தந்தார்.

அவருடைய கவிதை அதுவரைக்கும் பாரதி, பாரதிதாசனைப் பின்பற்றிய
கவிதைகளே, அப்பெருங் கவிஞர்களுக்கு மதிப்புக் கொடுக்கும் கவிதைகளே.
ஆயினும், அதற்குப்பின் அவர் எழுதிய கவிதைகள்தாம் இருபதாம் 
நூற்றாண்டிற்கே புதுமையான ஒரு பண்பை, முத்தமிழ்க் கவிஞன் 
இளங்கோவின் முழுமைச் சிறப்பை அவருக்கு அளித்துள்ளன. இதுதான் 
அவருடைய மூன்றாவது வகைக் கவிதையாகும். “விதியோ, வீணையோ?” என்ற
இசை நாடகத்தை இதற்குச் சான்றாகக் கூறலாம்.

பாரதியின் கவிதைகள் சித்தர் மரபின் கவிதைகள் எனலாம். பாவேந்தரின்
கவிதைகள் சங்க இலக்கியத்தின் பெருமைகளை நமக்கு மீண்டும் தந்தன. 
ஆனால், சிலம்புக் கவிஞன் இளங்கோ, சிந்தாமணி ஆசிரியர் திருத்தக்கதேவர்
ஆகியோருடைய கவிதை மாயங்களை (அதிசயங்களை) இன்றைய தமிழகத்திற்குத்
தமிழ்ஒளியின் கவிதைகள் மூலமாக மீட்டுக் கொணர்கின்றன.

‘மக்கள் கவிதைத்’ தொகுப்பில், ‘மேதினமே வருக!’ என்னும் முதற்பாட்டு,
பாவேந்தரின் ‘சஞ்சீவிபர்வதத்தின் சாரல்’ என்ற சிறந்த சிறுகாவியத்தை 
நடையிலும், கற்பனைச் சிறப்பிலும், பாநடை அழகிலும் நினைவூட்டுகின்றது.

சிறப்பாகப் பாரதி, பாரதிதாசன் ஆகிய இருவரிடமும் காணப்படும் ஒரு 
சிறப்பு இதில் இடம் பெறுகிறது. தமிழ்க் கவிதையில் தனித்தமிழ்ச் சொற்களுக்கு
இருக்கும் இனிமை சர்க்கரைப் பாகானால், அவர்கள் பயன்படுத்தும் பிறமொழிச்
சொற்களுக்கும் அவ்வினிமை உண்டு. சர்க்கரைப் பாகிடையில் இடம்பெறும்
கற்கண்டுத் துண்டுகள் போல் அவை விளங்குகின்றன.


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 11-09-2016 10:39:01(இந்திய நேரம்)