Primary tabs

உம்மை இறந்தது தழீஇயிற்று.
‘உடையதிழந் துயிரிரங்கி யிருந்தார்’
என்றக்கால், கழிவினை விளக்கும், ஈண்டு இரக்கம். (62)
354. இலம்பா டொற்க மாயிரண்டும் வறுமை.
வரலாறு :
‘இலம்படு புலவர்’ (மலைபடு - 576)
என்றக்கால், வறுமைப்படும் புலவர் என்பதாம்.
‘ஊரை யொற்கந் தீர்க்கும்’
என்றக்கால், வறுமை தீர்க்கும் என்பதாம். (63)
355. ஞெமிர்தலும் பாய்தலும் பரத்தற் பொருள.
வரலாறு:‘தண்பெரும் பந்தர்த் தருமணல் ஞெமிரிய’ (நற்றிணை-143)
என்றக்கால், பரப்பிய என்பதாம்.
‘புண்ணுமிழ் குருதிப் புனல் பாய்ந்து’
என்றக்கால், பரந்து என்பதாம். (54)
356. கவர்வுவிருப் பாகும்.
வரலாறு:‘கொள்ளை மாந்தரி னானாது கவரும்’ (அகம்-3)
என்றக்கால், விரும்பும் என்பதாம். (65)
357. சேரே திரட்சி.
வரலாறு:
‘சேர்ந்துசெறி குறங்கு’
என்றக்கால், திரண்டு செறி குறங்கு என்பதாம். (66)
358. வியலென் கிளவி யகலப் பொருட்டே.
வரலாறு:
‘வியலிரு வானம்’என்றக்கால், அகலிரு வானம் என்பதாம். (67)
359. பேநா முருமென வரூஉங் கிளவி
யாமுறை மூன்று மச்சப் பொருள.
வரலாறு:
‘மன்ற மராஅத்த பேஎமுதிர் கடவுள்’ (குறுந்-87)
என்பது, அச்சமுதிர் கடவுள் என்பதாம்.
‘நாம்வருந் துறைசேர்ந்து’என்பது, அச்சமுடைய துறை போந்து என்பதாம்.
‘உருமில் சுற்றம்’என்பது, அச்சமில் சுற்றம் என்பதாம்.
இசை யெல்லாங் குறிப்பு. (68)360. வயவலி யாகும்.
வரலாறு:
‘வாள்வரி வேங்கை வயப்புலி’என்பது, வலியுள்ள புலி என்பதாம். (69)
361. வாளொளி யாகும்.
வரலாறு:
‘கண்ணே,நோக்கி நோக்கி வாளிழந் தனவே’ (குறுந்-44)
என்பது, ஒளி யிழந்தன என்பதாம். (70)
362. துயவென் கிளவி யறிவின் றிரிவே.
வரலாறு:
‘அறிவு து