தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   5385


 

முண்மையுங்  கூறிற்றாம்.  ஆண்டுத்  தோழி  கூறுவனவும் ‘ஒன்றென
முடித்த’லாற் கொள்க.

“வாராய் பாண நகுகம் நேரிழை
கடும்புடைக் கடுஞ்சூல் நங்குடிக் குதவி
நெய்யோ டிமைக்கும்ஐயவித் திரள்காழ்
விளங்குநகர் விளங்கக் கிடந்தோட் குறுகிப்
புதல்வன் ஈன்றெனப் பெயர் பெயர்த் தவ்வரித்
திதலை யல்குன் முதுபெண்டாகித்
துஞ்சுதி யோமெல் அஞ்சில் ஓதியெனப்
பன்மாண் அகட்டிற் குவளை யொற்றி
உள்ளினென் உறையும் எற்கண்டு மெல்ல
முகைநாண் முறுவல் தோற்றித்
தகைமலர் உண்கண் கைபுதைத் ததுவே.”       (நற்.370)

இது நெய்யணி மயக்கம்பற்றித் தலைவன் கூறியது.

“நெடுநா வொண்மணி கடிமலை இரட்டக்
குரையிலைப் போகிய விரவுமணற் பந்தர்ப்
பெரும்பாண் காவல் பூண்டென வொருசார்த்
திருந்திழை மகளிர் விரிச்சி நிற்ப
வெறியுற விரிந்த அறுவை மெல்லணைப்
புனிறுநாறு செவிலியொடு புதல்வன் துஞ்ச
ஐயவி அணிந்த நெய்யாட்டு ஈரணிப்
பசுநெய் கூர்ந்த மென்மை யாக்கைச்
சீர்கெழு மடந்தை ஈரிமை பொருந்த
நள்ளென் கங்குல் கள்வன் போல
அகன்றுறை யூரனும் வந்தனன்
சிறந்தோன பெயரன் பிறந்த மாறே.”           (நற்.40)

இது, முன் வருங்காலத்து வாராது சிறந்தோன் பெயரன் பிறத்தலான்
வந்தானெனத் தோழி கூறினாள்.

“குவளை மேய்ந்த குறுந்தாள் எருமை
குடநிறை தீம்பால் படூஉ மூர
புதல்வனை ஈன்றிவண் நெய்யா டினளே.”

இதுவும் அது.

பயங்கெழு  துணையணை புல்லிய  புல்லாது  உயங்குவள்  கிடந்த
கிழத்தியைக்   குறுகிப்   புல்கு  என  முன்னிய நிறையழி பொழுதின்
மெல்லென்  சீறடி   புல்லிய  இரவினும்  - தலைவி தனது ஆற்றாமை
மிகுதியான்   தழுவி   ஆற்றுதற்குக்   குளிர்ந்த   பயன் கொடுத்தல்
பொருந்திய பல அணைகளைத் தழுவித் தன்னைப் புல்லுதல் பெறாதே

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2016 08:45:59(இந்திய நேரம்)