Primary tabs


வீயா யாணர் வளம் கெழு பாக்கத்துப்
பல் மர நீள் இடைப் போகி, நல் நகர்,
விண் தோய் மாடத்து விளங்கு சுவர் உடுத்த,
வாடா வள்ளியின் வளம் பல தரூஉம்
நாடு பல கழிந்த பின்றை நீடு குலைக்
காந்தள் அம் சிலம்பில் களிறு படிந்தாங்கு,
பாம்பணைப் பள்ளி அமர்ந்தோன் ஆங்கண்,
வெயில் நுழைபு அறியா, குயில் நுழை பொதும்பர்க்
குறுங் கால் காஞ்சி சுற்றிய நெடுங் கொடிப்
பாசிலைக் குருகின் புன் புற வரிப் பூக்
கார் அகல் கூவியர் பாகொடு பிடித்த
இழை சூழ் வட்டம் பால் கலந்தவை போல்,
நிழல் தாழ் வார் மணல் நீர் முகத்து உறைப்பப்
புனல் கால் கழீஇய பொழில்தொறும், திரள்கால்
சோலைக் கமுகின் சூல் வயிற்றன்ன
நீலப் பைங் குடம் தொலைச்சி, நாளும்
பெரு மகிழ் இருக்கை மரீஇ; சிறு கோட்டுக்
குழவித் திங்கள் கோள் நேர்ந்தாங்குச்
சுறவு வாய் அமைத்த சுரும்பு சூழ் சுடர் நுதல்,
நறவு பெயர்த்து அமைத்த நல் எழில் மழைக் கண்,