பகுத்தறிவு பகலவன்
பாடம்
Lesson
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்.
என்பது வள்ளுவர் வாக்கு. செய்வதற்கு அரிதான செயல்களையும் எளிதாக அனைவரும் ஏற்கும் வண்ணம் செய்யக் கூடியவர்கள் பெரியவர்கள் ஆவர். அரிய செயல்களைச் செய்ய இயலாதவர்கள் சிறியர் எனப்படுவர். பெரியார் என்பதற்கு வள்ளுவம் காட்டும் இலக்கணம் இதுவாகும்.
செயற்கரிய செயல்களைச் செய்து முடித்தவர் ஈ.வெ.இராமசாமி ஆவார். அதனால் அவரைத் தமிழ் மக்கள் பெரியார் என்று அன்போடு அழைக்கின்றனர்.
தமிழ்ச் சமுதாயத்தில் இருந்த மூடப்பழக்க வழக்கங்கள், ஏற்றத்தாழ்வுகள், அறியாமைகள், சாதிக்கொடுமைகள் ஆகியவற்றைத் தான் ஒருவராகவே முன்இருந்து ஒழிக்கப் பாடுபட்டவர் பெரியார் ஈ.வெ.இராமசாமி. இவரது தொண்டால் தமிழ்ச் சமுதாயம் சீர்திருத்தம் அடைந்து புதிய விழிப்பையும் முன்னேற்றத்தையும் பெற்றது.
வாழ்க்கை வரலாறு

பெரியார் ஈவெ.இராமசாமி 1879ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 17ஆம் நாள் ஈரோட்டில் பிறந்தார். இவரின் பெற்றோர் சின்னத்தாயம்மை, வெங்கடப்பர் ஆவர்.
இவர் அந்தக் காலத்தில் இருந்த திண்ணைப் பள்ளிக்கூடத்தில் தம் தொடக்கக் கல்வியைக் கற்றார். ஏறக்குறைய ஐந்து ஆண்டுகள்வரை இப்பள்ளிப் படிப்பு அவருக்குக் கிடைத்தது. அதன்பின் அவரால் படிப்பைத் தொடர முடியவில்லை.
சிலகாலம் சென்றபின் இவருக்கும் நாகம்மை என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. ஒரு பெண் குழந்தை இவருக்குப் பிறந்தது. அக் குழந்தை அதிக நாள் உயிரோடு இல்லை.
மிகப் பெரும் செல்வந்தரான இவரது தந்தையார் ஏற்படுத்தியச் சில கட்டுப்பாடுகள் இவருக்குப் பிடிக்கவில்லை. எனவே, வீட்டில் இருந்து துறவு பூண்டு இவர் வெளியேறினார். இந்தியாவின் பல இடங்களுக்கும் இவர் சென்றார். ஒவ்வொரு இடமும் ஒவ்வொரு பட்டறிவைத் தந்தது. காசி போன்ற பல நகரங்களில் பல துன்பங்களை இவர் அடைந்தார். காசி நகரில் துறவிக்கோலத்தில் வாழ்ந்தார். அன்னசத்திரங்கள் பல இருந்தும் அங்கெல்லாம் இவர் நுழையக் கூடாது என்று தடை செய்யப் பெற்றார். இதற்குக் காரணம் அக்காலத்தில் மக்களிடத்தில் நிலவிய ஏற்றத் தாழ்வுகள், சாதி (வர்ண பேதங்கள்) வேற்றுமைகள் ஆகும். இவற்றை இவர் ஒழிக்க வேண்டும் என அப்போதே மனத்தில் உறுதி செய்து கொண்டார்.
மீண்டும் குடும்ப வாழ்வே சிறப்பு என்ற நிலையில் ஈரோட்டிற்கு வந்தார். அப்போது இவரது தந்தையார் இவரது வருகையால் மகிழ்ந்தார். தன் தொழில் நிறுவனங்களை ஒப்படைத்து நிருவாகம் செய்யப் பணித்தார்.
சமூகப் பணிகள்
மாபொரும் தொழில் அதிபராக இவர் விளங்கினார். தம் தொழிலோடு சமுதாய பணிகளும் ஆற்றினார். ஈரோட்டில் ஒருமுறை ஏற்பட்ட பிளேக் நோயை முற்றிலும் ஒழிக்க இவர் பொருளாலும் உடலாலும் உதவி செய்து உழைத்தார். பிளேக் நோயினால் இறந்த மக்களை எவரும் தொடஅஞ்சியபோது இவர் அவர்களின் உடல்களைத் தம்முதுகில் சுடுகாட்டிற்கு எடுத்துச் சென்றார் ; நல்அடக்கம் செய்து உதவினார்.
சமுதாயத்தில் உள்ள மூடப்பழக்க வழக்கங்களை எதிர்ப்பதில் இவருக்கு ஈடு இணை இவரே எனலாம். ஈரோட்டின் நகராட்சி மன்றத் தலைவராக இவர் பொறுப்பு ஏற்றார். இவைஒத்த மேலும் 28 வகையான பதவிப் பொறுப்புகள் ஒரே காலத்தில் இவரைத் தேடி வந்தன.
இவருடன் அயோத்திதாசர் என்ற தமிழறிஞர், இராஜாஜி என்ற அரசியல் அறிஞர் ஆகியோர் பலர் நட்பு கொண்டு மகிழ்ந்தனர். இவர் இராஜாஜியின் பழக்கத்தால் நாட்டு விடுதலைக்காகப் போராட இந்திய தேசிய காங்கிரசு என்ற இயக்கத்தில் இணைந்தார். காந்தியின் தொண்டர் ஆனார். ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்து கொண்டார். இதன் காரணமாகத் தம் தொழிலில் இழப்பு ஏற்படவேண்டிய நிலை இவருக்கு வந்தது. எனினும் தான் கொண்ட கொள்கையில் மாறாது இவர் செயல் ஆற்றினார்.
மேலும், இவர் கதர் துணிகளை வீடுகள் தோறும் வீதிகள் தோறும் சுமந்து சென்று விற்றுக் கதரைப் பரப்பினார். அதுமுதல் தாமும் தம் இல்லத்தார் அனைவரும் கதரையே அணியச் செய்தார்.
சொல்லும் செயலும்
ஒருமுறை காந்தியடிகள் இவரது இல்லத்தில் தங்கினார். அப்போது பெரியாரின் மனைவி நாகம்மையாரும் தங்கை சின்னத்தாயும், குடிக்கும் கணவர்களால் மனைவிகள்படும் துன்பத்தைக் காந்தியடிகளிடம் எடுத்துக் கூறினர். இதனைக் கேட்ட காந்தியடிகள் மதுவிலக்கு என்ற கொள்கையை உருவாக்கினார். இந்தியாவிலேயே முதன் முதலில் இக்கொள்கைப் போராட்டத்திற்கு இம்மகளிரே தலைமை ஏற்றனர். பெரியார் தம் தோப்பில் கள் இறக்குவதற்குப் பயன்பட்ட நூற்றுக்கணக்கான தென்னை மரங்களை வெட்டி வீழ்த்தினார். சொல் வேறு செயல்வேறு என்ற நிலை பெரியாரிடத்தில் அறவே எப்போதும் எதிலும் இருந்தது இல்லை.
இவர் தமிழ்நாட்டுக் காங்கிரசு கட்சியின் தலைவர் ஆனார். ஆனால் அவ் அமை்ப்பில் இருந்த சில ஏற்றத்தாழ்வுகள் இவரை அக்கட்சியில் நீடிக்க முடியாதபடி செய்தன. இவர் நீதிக்கட்சி என்ற கட்சிக்குத் தலைவராகவும் விளங்கினார்.
மக்களில் சிலரைத் தீண்டத் தகாதவர் என்று ஒதுக்கி வைக்கும் வன் கொடுமை அப்போது இந்தியா முழுவதும் இருந்தது. இதனை ஒழித்தே ஆகவேண்டும் என்று முனைப்போடு பெரியார் செயல்பட்டார். தற்போது கேரள மாநிலத்தில் உள்ள வைக்கம் என்ற ஊரின் கோயிலிலும் தெருக்களிலும் குறிப்பிட்ட சில பிரிவினர் உள்ளே நுழையக் கூடாது என்றும் கட்டுப்பாடு இருந்தது. அதனை நீக்கும் போராட்டத்திற்குப் பெரியார் தலைமை ஏற்றார். ஓராண்டுக் காலம் போராட்டம் நடத்தி, அனைத்துப் பிரிவினரும் அந்தக் கோயிலுக்குச் செல்லலாம், தெருக்களில் நடக்கலாம் என்ற வெற்றியைப் பெற்றுத் தந்தார். அதனால் இவர் வைக்கம் வீரர் என்று அழைக்கப்பெற்றார்.
பெரியாரும் பெருந்தொண்டும்
மக்கள் மனிதத்தன்மையுடன் வாழவேண்டும் என்ற நோக்கில் பெரியார் சுயமரியாதை (தன்மான) இயக்கம் ஒன்றைத் தோற்றுவித்தார். அதன் முதல் மாநாட்டைக் காஞ்சிபுரத்தில் நடத்தினார். புரட்சி என்ற ஆங்கில இதழ்களையும் குடியரசு, விடுதலை, பகுத்தறிவு ஆகிய இதழ்களையும் இவர் நடத்தினார். இவற்றின் வழியாகப் புரட்சிக் கருத்துகளை இவர் மக்களிடம் கொண்டு சென்றார். பின்னாளில் திராவிடர் கழகம் என்ற சமுதாயத் தொண்டு அமைப்பை உருவாக்கினார்.
இவரது பல போராட்டங்கள் காரணமாக இவர் பலமுறை சிறை சென்றார். இவரின் புரட்சிக் காரணமாகத் தமிழ்நாட்டில் மக்களிடையே ஏற்றத்தாழ்வு குறைந்தது. மேலும் பெண்கள் விடுதலை பெற்றனர். பெண்களுக்கு எதிரானப் பல கொடுமைகளை இவர் களைந்தார்.
சுயமரியாதைத் திருமணம் என்ற சீர்திருத்தத் திருமணத்தை எவ்வித அடிமைத்தனமும் இல்லாமல் கொண்டு வந்தார். சமுதாயத்தில் ஆணுக்குப் பெண் சரிசமம் என்ற நிலையை இத்திருமணம் ஏற்படுத்தியது.
உலகின் பல நாடுகளுக்கு இவர் சுற்றுப்பயணம் செய்து அந்நாடுகளின் முன்னேற்றத்தை அறிந்து வந்தார். பெரியாரின் இப்பயணங்களால் தமிழகம் மேலும் முன்னேற்றம் அடைந்தது.
1938ஆம் ஆண்டு நடைபெற்ற பெண்கள் மாநாட்டில் இவருக்குப் பெரியார் என்ற பட்டம் தரப்பெற்றது. செய்வதற்கு அரிய செயல்களை செய்துவந்த இப் பெரியவருக்கு இப்பட்டம் மிகப் பொருத்தமுடையது என்று உலக வரலாறு பறைசாற்றி வருகிறது. யுனெசுகோ விருது 1970இல் இவருக்கு அளிக்கப் பெற்றது. இவ்விருது “புத்துலக தீர்க்கதரசி; தென்கிழக்கு ஆசியாவின் சாக்ரடீஸ்; சீர்த்திருத்த இயக்கத் தந்தை; அறியாமை, மூடநம்பிக்கை, அர்த்தமற்ற சம்பிரதாயம், இழிந்த வழக்கங்கள் ஆகியவற்றுக்கு எதிரி” என்று பெரியாரைப் புகழ்ந்து குறிப்பிடுகின்றது.
இவரின் கொள்கைகளால் பலர் ஈர்க்கப் பெற்றனர். அவர்களுள் குறிப்பிடத்தக்கவர் சி.என்.அண்ணாதுரை ஆவார். இவர் அறிஞர் அண்ணா என்று அன்புடன் அழைக்கப் பெறுகிறார்.இவர் தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற காலத்தில் பெரியாரின் பல கொள்கைகள் தமிழக அரசால் செயலாக்கப் பெற்றன. இவற்றில் தமிழ்நாடு என்ற பெயர் வைப்பு, சுயமரியாதைத் திருமணச் சட்ட வடிவம், இருமொழிக் கொள்கை ஆகியவற்றைச் சொல்லலாம்.
இவ்வாறு தொடர்ந்து பணியாற்றிவந்த பெரியார் 1973ஆம் ஆண்டு திசம்பர் 24ஆம் நாள் தம் 95ஆம் வயதில் இயற்கை எய்தினார். எனினும் அவர் ஏற்றி வைத்த பகுத்தறிவுச் சுடர் காலந்தோறும் பகலவனாய்ச் சுடர்விட்டு வெளிச்சம் கொடுக்கின்றது.
பெரியார் பற்றி அறிஞர்களின் கருத்துகள்
பெரியாரின் கருத்துகள் பல்துறை அறிஞர்களையும் கவர்ந்தன. அவற்றை அவர்களும் போற்றினர். அவ்வாறு பெரியாரைப் போற்றிய அறிஞர்கள் சிலரின் கருத்துகள் பின்வருமாறு:
அறிஞர் அண்ணா
“சாக்ரடீஸ், லெனின், பிராட்லா, பெர்னாட்ஷா, ரூசோ முதலிய அறிஞர்களும், புரட்சிகாரர்களும் எதற்காக உலகில் போற்றப்படுகிறார்களோ அவ்வளவையும் ஒருங்கே திரட்டி ஓருருவில் பார்க்க வேண்டுமானால் அது பெரியார்தான்” என்று அறிஞர் அண்ணா பெரியாரைப் பாராட்டுகிறார்.
வ.ரா
செய்ய வேண்டும் என்று தோன்றியதைத் தயங்காமல் செய்யும் தன்மை “பெரியாரிடம் காணப்படுவதைப்போல தமிழ்நாட்டில் வேறு எவரிடமும் காணப்படுவதில்லை. தமிழ்நாட்டின் வருங்காலப் பெருமைக்குப் பெரியார் அவர்கள் முன்னோடும் பிள்ளை (முன்னே செல்பவர்) ஆவார்” என்று எழுத்தாளர் வ.ரா. பெரியாரைப் புகழ்கிறார்.
ஜவகர்லால் நேரு
“தற்கால மேலையுலகப் பகுத்தறிவாளர், நாத்திகர் ஆகியவர்களின் கருத்துகளை எல்லாம், மின்மினிகளென ஒளி மழுங்கிவிடச் செய்யும் நாத்திகக் கதிரவன் ஒளியாகப் பாரதத்தின் இந்த அறிவியக்கம் விளங்குகிறது” என்று பெரியார் தொடங்கிய இயக்கத்தைப்பற்றி ஜவகர்லால் நேரு பாராட்டியுள்ளார்.
புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்
தொண்டு செய்து பழுத்த பழம்
தூய தாடி மார்பில் விழும்
மண்டைச் சுரப்பை உலகுதொழும்
மனக் குகையில் சிறுத்தை எழும்
அவர்தான் பெரியார்
என்று பெரியாரைப் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் புகழ்கிறார்.
திரு.வி.கலியாணசுந்தரனார்
“உரிமை வேட்கை, அஞ்சாமை முதலியன பெரியாரின் தோற்றத்திலேயே பொலிதல் வெள்ளிடைமலை” என்று அவரின் உருவ நலனையும் உள்ள நலனையும் தமிழ்த்தென்றல் திரு.வி.க. போற்றுகிறார்.
வ.உ.சிதம்பரனார்
“பெரியார் எல்லாத் தலைவர்களையும்விட மிகச் சிறந்த தியாகி” என்று பெரியாரைப் போற்றுகிறார் வ.உ.சி.
இவ்வாறு பலராலும் போற்றப்பெறும் சமுதாய அறிவியல் (Social Scientist) அறிஞராகப் பெரியார் விளங்குகிறார்.