10. சித்தன்ன வாசல்

சித்தன்ன வாசல்

பாடம்
Lesson


இன்று திங்கள் கிழமை.

ஏதேனும் ஒரு ஊருக்குப் போகலாம் என்று ஆசைப்பட்டேன். தனியாகக் கிளம்புவது என்பது எனக்கு மிகவும் பிடிக்கும். கூட்டத்தோடு போவது பிடிப்பதே இல்லை. கூட்டமான பேருந்தில் நான் ஏறுவது இல்லை. அப்படி ஏறிவிட்டால் அன்றைக்கு ஏதோ கெட்ட செயல் நடைபெற்றுவிட்டதாக நான் எண்ணுபவன். என்ன செய்வது? கூட்டமான பேருந்தில்தான் நாளும் பயணிக்க வேண்டி உள்ளது.

சென்னையில் கூட்டமில்லா பேருந்து என்று ஏதாவது ஓடுகிறதா? கூட்டமில்லாத தொடர்வண்டி என்று ஏதாவது இருக்கிறதா? ஒவ்வொரு நாளும் கூட்டம்தான். கூட்டத்திற்குமேல் கூட்டம்தான். இதில் இருந்து விலக வேண்டும். என்ன செய்யலாம்? சில நாள்கள் சுற்றுலாச் செல்ல முடிவு எடுத்தேன். எங்கு போகலாம்? புதுக்கோட்டையில் இருக்கும் நண்பன் சரவணன் அழைத்துக் கொண்டே இருக்கிறான். அங்கு போகலாம் என்று கிளம்பினேன். கூட்டம் அதிகமாக உள்ள இடத்திலிருந்து கூட்டம் அதிகம் இல்லாத இடத்திற்குப் போக இரவு கிளம்பினேன்.

6 பிப்பிரவரி 2007 செவ்வாய்க்கிழமை

காலை விடியலில் திருச்சி மாநகர எல்லையில் சேர்ந்தேன். மலைக்கோட்டைத் தொடர்வண்டி என்னைச் சுமந்து வந்து திருச்சிராப்பள்ளிக்குக் கொண்டுவந்து சேர்த்தது. இரவில் சென்னையில் தூங்கிய நான் காலையில் திருச்சியில் கண் விழிக்கின்றேன். இதுதான் உலகம். ஏறுமிடம் ஒன்று. இறங்குமிடம் ஒன்று. பயணத்தில் வாழ்க்கை பெரும்பாலும் கழிகின்றது.

அடுத்து, புதுக்கோட்டைக்குச் செல்லப் பேருந்தில் ஏறினேன். கடகடத்த பேருந்து ஒன்று அரை மணி நேரத்தில் புதுக்கோட்டை போனது. நண்பன் சரவணன் வரவேற்றான். அவன் வீட்டிற்குச் சென்று தங்கினேன். குளித்து முடித்து, உணவு உண்டபின் அவன் தன் இருசக்கர வாகனத்தை எனக்குத் தந்தான். அதில் ஏறி சித்தன்ன வாசல் செல்ல வழிகாட்டினான்.

தனிமைப் பயணம். வழி தேடி அன்ன வாசலுக்கு முன்னால் உள்ள சித்தன்ன வாசல் போய்ச் சேர்ந்தேன். வரவேற்பு வளைவு ஒன்று என்னை வரவேற்றது.

உள்ளே வண்டியை ஓட்டிச் சென்றேன். ஒரு பூங்கா என்னை அழைத்தது. அதனுள் சென்று சற்றுநேரம் இளைப்பாறினேன். அதன்பின் அங்குள்ளவர்களிடம் கேட்டு அறிந்து நான் பார்க்க வேண்டிய இடங்களைக் குறித்துக் கொண்டேன்.

அவ்வளவு கவனத்தோடு சித்தன்ன வாசல் குகைக்கோயில் அமைக்கப் பெற்றுள்ளது. இது மலையின் அடியில் உள்ளது. அடிப்பகுதியில் உள்ள பாறையைக் குடைந்து கோயில்போல அமைத்துள்ளார்கள். வெளிப்பக்கம் இரு தூண்கள் உள்ளன. உள்பக்கம் ஒரு அறை உள்ளது. இவற்றில் ஓவியங்கள் அழிந்தும் அழியாமலும் உள்ளன.

இடது பக்கத் தூணில் அழகான ஒரு அரசியும், அரசனும் ஓவியமாக வரையப் பெற்றுள்ளனர் (படம்-1). இவர்கள் பாண்டிய மரபினர் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அரசன் மிகச் சிறந்த மணிமுடியைத் தலையில் அணிந்துள்ளபடி காட்சி தருகிறார். அவரது ஒரு காதில் மீன்வடிவ காதணியையும் மற்றொரு காதில் வைரக் கற்கள் பதித்த காதணியையும் அவர் அணிந்துள்ளார். அவருக்குப் பின்பக்கத்தில் ஒரு பெண் காணப்படுகிறாள். அவள் அரசியின் தோற்றத்தோடு உள்ளாள். இவ்வரசன் அவனிபாத சேகரன் என்பவனாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். ஏனெனில் இங்குள்ள கல்வெட்டு ஒன்று கருவறையை அதாவது இந்தக் கோயிலின் உள்ளறையை கி.பி. 815ஆம் ஆண்டில் இருந்து கி.பி. 862ஆம் ஆண்டிற்குள் மேலும் செப்பனிடப் பெற்றதாகக் குறிப்பு கிடைக்கிறது. அப்போது ஆண்ட அவனிபாத சேகரன் காலத்தில் இளம் கௌதமனார் என்பவர் இந்தப் பணியைச் செய்ததாக அந்தக் கல்வெட்டுக் குறிப்பிடுகிறது. (அதன் கோட்டோவியம் இங்குத் தரப்பெறுகிறது.)

படம்-1

வலதுபக்கத் தூணில் ஓர் ஆடல்பெண் வரையப் பெற்றுள்ளாள். இவளது தலைஒப்பனை (அலங்காரம்) மிகவும் வியக்கத் தக்கதாக உள்ளது. இந்த ஓவியம் அசந்தா ஓவியத்தோடு ஒப்பிடத்தக்கது. இப்பெண்ணின் நடனக் காட்சி இந்திய ஓவியக்கலை வரலாற்றில் இன்றியமையாததாகக் கருதப்பெறுகிறது (படம்-2).

படம்-2

தூண்கள் இணையுமிடத்தில் ஒரு நீளக்கல்லில் இன்னும் சில ஓவியங்கள் உள்ளன. அவற்றில் குறிப்பிடத்தக்கவை தாமரை மொட்டுக்களின் ஓவியங்கள் ஆகும். தாமரை மலர் சிறுமொட்டாக இருந்து பெரிய மலராக மலரும்வரை உள்ள நிலைகளை அழகாகப் படிப்படியாக வரைந்து வைத்துள்ளனர்.

அதன்பின் சற்றுத் தள்ளிப் பார்த்தால் உலகப்புகழ் பெற்ற தாமரைக்குள ஓவியம் கண்ணில் படுகிறது (படம்-3). ஒரு குளம், அதில் தண்ணீர் நிரம்பியுள்ளது. அந்தத் தண்ணீரில் தாமரை மலர்கள், மொட்டுகள், இலைகள் உள்ளன. ஒரு மனிதன் தாமரை மலர்களைப் பறிக்கும்படி வரையப்பட்டுள்ளார். மற்றொருவர் தாமரை மலர்களை ஏந்தியுள்ள நிலையில் உள்ளார். மேலும், சில மீன்கள் அங்கே துள்ளி விளையாடுகின்றன. ஒரு நீண்ட மீன் தாமரைத் தண்டுகளுக்குள் தன் உடலை வளைத்துக் கிடக்கிறது. அதன் உடல்பகுதி தாமரைத் தண்டின் உள்ளும் வெளியுமாகக் கிடப்பது காட்சியை நேரே காண்பதுபோல உள்ளது.

இரண்டு எருமைமாடுகள் தண்ணீரைக் கலக்கிக் கொண்டுள்ளன. ஒருபுறம் யானை ஒன்று நிற்கிறது. ஒரு உயிர்த்துடிப்பு உள்ள குளத்தின் காட்சி அங்கு வரையப்பெற்றுள்ளது. இந்த ஓவியங்கள் பழைய ஓவியக் கலைக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டுகள் ஆகும். மேலும் இவ்வோவியங்கள் இயற்கைவண்ணம் கொண்டுத் தீட்டப் பெற்றவை என்பது அரிய வரலாற்றுச் செய்தியாகும். அவை இன்னும் ஓரளவு அழியாமல் இருப்பது மேலும் சிறப்பாகும்.

படம்-3

அடுத்து குகைக்குள் நுழைந்து பார்த்தால் மூவர் துறவியர் சிலைகள் உள்ளன. அவர்கள் உள்ள அந்தப் பகுதியிலும் சில ஓவியங்கள் வரையப் பெற்றுள்ளன. ஒரு பட்டுச் சேலையின் வடிவமைப்பைப்போல அது அமைக்கப் பெற்றுள்ளது. அதாவது, பட்டுச் சேலையின் ஓரத்தில் கரை எனப்படும் ஒரு அமைப்பு இருக்கும். அதில் பூவேலைப்பாடுகள் நிறைந்து இருக்கும். அதுபோல ஒரு காட்சி அமைப்பு அங்கு வரையப் பெற்றுள்ளது.

அப்பப்பா! கண் கொள்ளாக் காட்சி அங்குக் கிடைத்தது.

நேரம் ஆகிவிட்டது. இன்னும் ஒரு சிறப்பான இடத்திற்கு நான் போக வேண்டும். வேகவேகமாக நடந்துவந்து அங்குஇருந்து மலையின் மீது ஏறினேன். அந்த மலைக்குச் செல்ல ஒரு பாதை இருந்தது. அதில் கம்பிகள் இருந்தன. அவற்றைப் பிடித்துக் கொண்டு ஏறி மேலே சென்றேன். அங்கு ஒரு குகை இருந்தது. அது முன் பார்த்ததுபோலச் செயற்கையானது அல்ல ; இயற்கையானது.

மலையின் இடையே ஒரு பகுதி பிளவாகக் காணப்பெறுகிறது. இது இயற்கையாகவே அமைந்தக் குகை. இதனுள் ஒரு பத்துப் பதினைந்து பேர் படுத்து உறங்கலாம். அந்தக் குகையில் சில படுக்கைப் போன்ற அமைப்புகள் இருந்தன. அவற்றில் சமணத் துறவிகள் படுத்து இருந்ததாகக் கூறுகிறார்கள். அந்தப் படுக்கைப் போன்ற அமைப்புகள் தற்போது நாம் பயன்படுத்தும் மெத்தைப் போன்று இருந்தன. தலையணைப் பகுதிக்கு ஏற்ற வகையில் ஒரு மேடு செதுக்கப் பெற்றிருந்தது. மேலும், படுக்கைகளின் மேலே அந்தப் படுக்கைக்கு உரியவர் பெயரும் எழுதப் பெற்றிருந்தது. இந்த இடத்திற்குப் பெயர் ஏழடிப் பட்டம் என்பதாகும். இதில் படுத்துக் கொண்டு பார்த்தால் . . . . . ஆகா ! என்ன இனிமை ! விந்தை ! மேலே தெரிகிறது வானம். கீழே தெரிகிறது பூமி. இடையில் இருக்கிற உலகம் இந்த உலகம். தனிமைக்கு இது அல்லவா சிறப்பான இடம்!

இந்த இடம் கி.பி. மூன்றாம் நூற்றாண்டு முதலே சமணத் துறவிகள் தங்கும் இடமாக இருந்தது என்கின்றனர் ஆய்வாளர்கள். மேலும் இந்த இயற்கைக் குகை ஏழடி அளவு இருந்ததால் இதனை ஏழடிப் பட்டம் என அழைத்துள்ளனர்.

இவை இரண்டையும் பார்த்ததும் பசி எடுத்தது. கையில் இருந்த உணவை உண்டேன். சற்றுநேரம் ஏழடிப் பட்டம் நிழலில் இருந்து ஓய்வெடுத்தேன். அதன்பின் சுனை இருக்கும் இடம் நோக்கிச் சென்றேன்.

ஒரு கிலோ மீட்டர் தொலைவு மலையின் மீது நடந்து சென்றால் ஒரு சுனை காணப்படுகிறது. சுனை என்பது மலையின் மீது காணப்படும் இயற்கை நீர்த்தேக்கம் ஆகும். நிலத்தில் கட்டப் பெறுவது குளம். அதுவே மலையில் இயற்கையாக அமைந்தால் சுனை ஆகும். இதன் பெயர் நாவல் சுனை. இது தற்போது நவச் சுனை என்று அழைக்கப் பெறுகிறது. இச்சுனையைச் சுற்றிலும் நாவல் மரங்கள் அதிகமாக உள்ளன. இன்னமும் அவை உள்ளன. எனவே, இது நாவல் சுனை என்றழைக்கப் பெறுகிறது.

ஆனால், இந்த இடத்திற்கு வருவதற்குள் நான் பட்டபாடு பெரும்பாடு. ஏனெனில் வெயில், அதுவும் உச்சி வெயில். தலை, உடல் அனைத்தும் சூடாகி விட்டன. கொண்டுபோன தண்ணீரில் தலை உடல் ஆகியன நனைத்துக் கொண்டு அந்தச் சுனையையும் கண்டு களித்தேன்.

சித்தன்ன வாசல் அனைவரும் பார்க்க வேண்டிய இடம். என் செல்பேசி ஒலித்தது. சரவணன் பேசினான். ஒரு விருந்துக்கு ஏற்பாடு ஆகி உள்ளதாம். நான் தனிமையை விட்டுவிலக முடியாத மனநிலையில் இருசக்கர வாகனத்தில் ஏறினேன். சித்தன்ன வாசலில் இருந்து விடைபெற்றேன்.

இன்னும் பல சுற்றுலா இடங்கள் புதுக்கோட்டையில் உள்ளன. நார்த்தாமலை, மலையக் கோயில், குடுமியான் மலை இப்படிப் பல இடங்கள் புதுக்கோட்டையில் உள்ளன. எனவே, புதுக்கோட்டை வரலாற்று நினைவுச் சின்னங்களின் தீவு என்று அழைக்கப் பெறுகிறது. இந்த இடங்களையும் பார்த்துவிட மனம் விரும்புகிறது. அடுத்தப் பயணங்களில் அது நிறைவேறும்.