8. நடப்பதெல்லாம் நன்மைக்கே!

நடப்பதெல்லாம் நன்மைக்கே!

பாடம்
Lesson


அழகாபுரி என்பது அந்த ஊருக்குப் பெயர். பெயரில்தான் அழகு இருக்கிறதே தவிர, ஆக வறண்ட ஊர் அது. மழை பெய்தால்தான் ஊருக்கு நீர், விவசாயம், வாழ்க்கை எல்லாம். வானம் பார்த்த பூமி. ஆனாலும் அவ்வூர் மக்கள் உழைப்பில் கெட்டிக்காரர்கள். அந்த ஊரில்தான் மணி என்ற மாமனிதன் இருந்தான். மணி என்று கேட்டால் அந்த ஊரில் யாருக்கும் தெரியாது. ‘கிண்டல் மணி’ என்றால்தான் எல்லாருக்கும் தெரியும். ஏனெனில் யாரையும் கிண்டல் செய்வதில் வல்லவன். சூரியனிடம் இருந்து ஒளிவருவதுபோல இவனுக்குள் இருந்து எப்படியேனும் குறும்பு வந்து கொண்டேயிருக்கும். தூக்கத்தில் கூட இவன் ஏதேனும் குறும்பு செய்வதாய்க் கனவு கண்டுகொண்டுதான் இருப்பான். வேடிக்கை பார்ப்பவர்களுக்குச் சிரிப்புப் பொத்துக் கொண்டு வரும். அடிபடும் அளவிற்கு, வயிறு வலிக்கும் அளவிற்கு விழுந்து விழுந்து சிரிப்பார்கள். ஆனால் இவனது குறும்புக்கும் கிண்டலுக்கும் பாத்திரமாக ஒருவர் மாட்டுவாரேயானால் அவர் படும் வருத்தம்தான் மிகவும் சிரமமாக இருக்கும்.

ஒரு நாள் நள்ளிரவில், புலி வருது ,புலி வருது என்று சொல்லி ஊரைக் கூட்டி ஓடச் செய்துவிட்டான். அப்போது கத்தி, கம்பை எடுத்துக் கொண்டு வந்தவர்களைக் காட்டிலும் தற்காத்துக் கொள்வதற்காக ஓடி ஒளிந்தவர்கள்தாம் அதிகம். கொஞ்ச நஞ்சப் பேர்கள் ஊர் முழுக்கத் தேடியும் ‘புலியைக் காணோமே’ என்று சோர்ந்து போய்க் கேட்ட போது ‘இதுதான் புலி’ என்று பூனையைக் காட்டியிருக்கிறான். ‘எப்படி இந்தப் பூனை புலியாகும்?’ என்று கேட்டவர்களுக்கு, ‘இது வீட்டில் வாழும் புலி’ என்று கூறியிருக்கிறான். புலி விரட்ட வந்தவர்கள் இவனை விரட்டத் தொடங்கினார்கள். அப்போதும்கூட இவனது கிண்டல்தான் அவர்களை அமைதிப்படுத்தியது. ‘புலியை விரட்டத் துப்பில்லாதவர்கள் என்னை விரட்டுகிறார்கள்...’ என்று சொல்லிக் கொண்டே ஓடிவிட்டான்.

இப்படித்தான் புழுவைப் பாம்பு என்றும் பாம்பைப் புழு என்றும் சொல்லி மிரட்டியும் வேடிக்கை காட்டியும் பொழுது போக்கியிருக்கின்றான். அடக்கி ஒடுக்கிப் பள்ளிக்கு அனுப்பினால் சரியாகிவிடுவான் என்று நினைத்துப் பள்ளிக்கு அனுப்பி வைத்துப் பார்த்தார்கள். இவனது தொல்லை பொறுக்கமாட்டாமல் இவனுடைய ஆசிரியர் நெடுநாள் விடுப்புப் போட்டுப் போய்விட்டார்.

“இப்படியெல்லாம் நீ தொடர்ந்து செய்தாய் என்றால் உன்னை ஊரைவிட்டே துரத்திவிடுவார்கள்” என்று அம்மா திட்டிக் கொண்டிருந்தார். இரவு தூங்கப் போகும்போதெல்லாம் இப்படியான அறிவுரைகள்தாம். ஆனாலும் மணி எப்படி ஒத்துக் கொள்வான்? அவன் தனது கிண்டலை நிறுத்திக் கொள்ளவில்லை. “ஒரு மகாமேதையை இந்த ஊருக்கு மதிக்கத் தெரியவில்லை, போனால் போகட்டும்... என்னை என்ன அவர்கள் ஊரை விட்டுத் துரத்தப் போகிறார்கள்? நானே இந்த ஊரைவிட்டுக் கிளம்பிவிடுவேன்” என்று சபதம் கூறிக் கொள்வான். அன்றைக்கும் அப்படித்தான் அம்மாவிடம் சொல்லிவிட்டுப் படுத்தான். அன்று இரவு ஊர்க் கூட்டம் என்று அவனையும் அவனது அம்மாவையும் எழுப்பிக் கொண்டு போனார்கள். எல்லாருக்கும் இப்படித் தொல்லை கொடுத்த மணியை ஊரை விட்டே துரத்திவிடுவது என்று எல்லாரும் ஒருமனதாக முடிவு செய்ததைச் சொன்னார்கள். அதைத் தடுக்க அவனது அம்மா எவ்வளவோ கெஞ்சிப்பார்த்தார். அவர்கள் யாரும் ஒத்துக்கொள்ளவில்லை. வேறு வழியில்லாமல் மணி ஊரைவிட்டுக் கிளம்ப வேண்டியதாயிற்று.

கிளம்பினானே தவிர, அவனுக்கு எங்கு போவது என்று தெரியவில்லை. நடந்து கொண்டே இருந்தான். கிளம்புமுன் அவனது அம்மா கட்டிக்கொடுத்த உணவை வழியில் பசிக்கும்போது சாப்பிட்டுவிட்டான். பகல் கழிந்து இரவு வரப்போகிறது. இரவு உணவுக்கும், தங்குவதற்கும் எங்கே போவது? என்று யோசித்துக் கொண்டே நடந்தான்.

வழியில் ஒரு அடர்ந்த வனம். அப்பகுதியில் அரசமரம் ஒன்று அழகாக இருந்தது. அதன்நிழலில் ஓய்வெடுக்க விரைந்து நடந்தான். அங்கே ஒரு முனிவர் அமர்ந்து தவம் செய்து கொண்டிருந்தார்.அவரைப் பார்த்ததும் நமது மணிக்கு மகிழ்ச்சி. ‘அப்பாடா ஒருவர் கிடைத்துவிட்டாரே!’ என்று தோன்றியது. காலையில் இருந்து யாரையும் கிண்டல் செய்யவில்லையே...! வேகமாக நெருங்கினான். அந்த முனிவர் அமர்ந்தபடி கண்களை மூடித்தவம் செய்து கொண்டிருந்தார். அருகே போன அவன் அவரை, “ஐயா! என்று அழைத்துப் பார்த்தான். விழிப்பதாய்க் காணோம். பாவம் நம்மைப் போல எவ்வளவு நேரம் நடந்துவந்தாரோ படுக்கக்கூட முடியாமல் உட்கார்ந்து கொண்டே தூங்குகிறாரே என்று சொல்லிக் கொண்டே அவரைப் படுக்க வைக்கத் தொட்டான். உடனே அந்த முனிவர் விழித்துக் கொண்டார். எதிரே இவன் நிற்பதைக் கண்டார். ஏதோ சொல்ல வாய் திறந்தார்.அதற்குள் இவன் முந்திக்கொண்டு “ஏன் சாமி உட்கார்ந்து கொண்டு தூங்குகிறீர்களே, படுத்துக் கொள்ளக்கூடாதா?” என்று அப்பாவியாகக் கேட்டான்.அவரும் சிரித்துக் கொண்டே, “தூங்காமல் தூங்கிச் சுகம் பெறுகின்றேன்! என்று சொன்னார். அவனைப் பற்றி விசாரித்தார். “வேடிக்கையாகப் பேசுகிறாயே, எங்கே போகிறாய்?” என்று கேட்டார். “யாரும் போகாத இடத்திற்குப் போகிறேன்” என்றான். அவனுக்குத்தான் எங்கே போகிறோம் என்பதே தெரியாதே! சிரித்துக் கொண்டே, நடப்பதெல்லாம் நன்மைக்கே! நட என்று வாழ்த்தி வழியனுப்பினார். அவனும் வணங்கி விடைபெற்றுக் கொண்டான்.

நடந்து நடந்து சென்றதில், காடு கடந்து பக்கத்து ஊரை நெருங்குமுன்பே மாலைப்பொழுது வந்துவிட்டது. ஊருக்குள் நுழையும் முன்னர் ஒரு பழைய கோயில் இருப்பதைக் கண்டான். அங்கே யாரும் வரமாட்டார்கள்போல் தெரிந்தது. அன்று இரவு தங்குவதற்கு நல்ல இடம் என்று தெரிந்து கொண்ட அவன் அந்தக் கோயிலுக்குள் போனான். அழகான அம்மன் கோயில். ஆனால் யாரையும் காணோம். உனக்கு நான் துணை எனக்கு நீ துணை என்று அம்மனைப் பார்த்துச் சொல்லிக் கொண்டான். வசதியாகத் தனது துண்டை விரித்துச் சற்றே படுத்துக்கொண்டான். காற்று குளிர்ச்சியாக வீசியது. மெல்லத் தூக்கம் வந்தது. கண்களை மூடினான். சுகமாக இருந்தது.

கொஞ்ச நேரத்தில் பரபரப்புச் சத்தம். தேர் வந்து நிற்பதுபோல் கேட்டது. கூட்டமாக யாரோ வருகிறார்கள். திடுக்கிட்டு விழித்துப் பார்த்தான். அழகிய தேரிலிருந்து ஒரு பேரழகி இறங்கினாள். இருபுறமும் வலிய ஆயுதம் சுமந்த வீரர்கள். அழகிய ஆபரணங்கள் மின்ன அந்தத் தேவதை போன்ற அழகி வீரர்கள் புடைசூழக் கோயிலுக்குள் நுழைந்தாள். நமது மணிக்குச் சிரிப்பு வந்து விட்டது. சத்தமிட்டே சிரித்து விட்டான். பெரிய மண்டபம் அது. அதனால் அவன் சிரிப்பு பெரிதாக எதிரொலித்து விட்டது. திடுக்கிட்ட வீரர்கள், இவன் இருப்பதைக் கண்டு சுற்றி வளைத்துக் கொண்டார்கள். அவர்களுக்கு முன்பாக அவனை நோக்கி ஈட்டிகள் நீண்டிருந்தன. யார் நீ என்றான் ஒரு வீரன். எதற்காகச் சிரித்தாய்? என்று கோபமாய்க் கேட்டான் இன்னொரு வீரன். இந்தச் சத்தத்தைக் கேட்ட பேரழகி அவனை நோக்கி நடந்து வந்தாள். உடனே மணி, யார் இந்தக் கிழவி? என்றான் சத்தமாகச் சிரித்துக் கொண்டே. அவ்வளவுதான் அந்த அழகியின் முகம் குப்பெனக் கோபத்தால் சிவந்தது. உடனே வீரர்கள் பாய்ந்து மணியைப் பிடித்துக் கொண்டார்கள்.ஒருவன் உடைவாளை உருவி மணியை வெட்டுவதற்காக ஓங்கினான். அதனைத் தடுத்த அப்பேரழகி “இவனைக் கைது செய்து அரண்மனைக்கு இழுத்து வாருங்கள்” என்று ஆணையிட்டாள். “உத்தரவு இளவரசி” என்று பணிந்த அவ்வீரன் மணியின் கைகளில் விலங்கு மாட்டினான். மணி இன்னும் பலமாகச் சிரித்துக் கொண்டே, “பார்த்தாயா,முட்டாளே அநியாயமாக ஒரு ஞானியைக் கொல்லப் பார்த்தாயே... நான் கூறிய உண்மைக்காக உனது இளவரசி எனக்குப் பரிசு கொடுக்கப்போகிறார் பார்?” என்று கேலியாய்ச் சிரித்தான். அதனைப் பொறுக்க முடியாத வீரன் ஒருவன் “வாயை மூடடா மூடனே! நிச்சயம் உனக்குச் சிறை தண்டனைதான்! ஆயுளுக்கும் சிறையில் கிடந்து நீ சாகப்போகிறாய்...!” என்று மணியின் மண்டையில் ஓங்கி ஒன்று போட்டான். அவ்வளவு தான் மணி மயங்கி விழுந்தான்.

விழித்துப் பார்த்தால், அவன் இருக்கும் இடம் அரண்மனைச் சிறைக் கூடமாயிற்று. தூரத்தில் யாரோ வரும் ஓசை கேட்டது. மெல்ல எழுந்து உட்கார்ந்தான் மணி. கோயிலில் பார்த்த இளவரசியும் கூட யாரோ அவளது தந்தை போன்ற ஒருவரும் நடந்து வந்து கொண்டிருந்தனர். அந்த வீரர்கள் சொன்னது உண்மைதான் என்று மணி நினைத்துக் கொண்டான். மன்னன் மரண தண்டனை கொடுக்கப்போகிறான் என்று நினைத்துக் கொண்டான். கவலைக்கு முன்னதாக அவனது குறும்பு வெளிப்பட்டுவிட்டது. பிறவிக் குணம் மாறுமா? “என்ன இளரவரசி. இவர்தான் எனக்கு ஆயுள் தண்டனை கொடுக்கப்போகிறவரா?” என்று கிண்டலாய்க் கேட்டுக் கொண்டே அவருக்கு ஒரு ‘வணக்கம்’ வைத்தான் . மன்னன் திடுக்கிட்டு நின்றார். “அம்மா, குணவதி நான் நினைத்தது சரிதான். என் நெடுநாளைய ஆசை நிறைவேறப்போகிறதம்மா...!” என்று சொன்னார் அந்த மன்னர். “சரிதான், இந்தக் கிழவியைத் திருமணம் செய்து கொள்ள யாரேனும் ஒரு கிழவன் கிடைத்துவிட்டானா?” என்று மீண்டும் கிண்டலைத் தொடர்ந்தான் மணி. “ஆகா எப்படிச் சரியாகக் கூறிவிட்டார் பார்த்தாயா இந்த ஞானி. இவர்தானம்மா உனக்கேற்ற வாழ்க்கைத் துணை” என்று மன்னர் சொல்லி முடித்தாரோ இல்லையோ மணி மயக்கமடைந்து படுக்கையிலேயே விழுந்து விட்டான்.

பிறகு என்ன? நாடு விழாக்கோலம் பூண்டது. மணியின் அம்மாவும் அவனது கிராமத்தார்களும் அரண்மனைக்கு வரவழைக்கப் பெற்றார்கள். திருமணவிழா ஒரு வாரகாலம் சிறப்பாக நடைபெற்றது. பேரழகி குணவதி மணியின் மனைவியானாள். மன்னரின் மருமகன் என்று மணி ஆனான். அப்போதும் மணி தனது இயல்பை மாற்றிக் கொள்ளவில்லை. கிண்டலும் கேலியுமாய் அவன் பேசும் பாணியை மன்னர் மிகவும் இரசித்தார். உண்மையில் ஞானி என்றே மன்னர் புகழ்ந்தார். எப்படி என்று யாருக்கும் தெரியவில்லை. அந்த முனிவர் வாழ்த்தியது பலித்துவிட்டதோ? என்று மணி நினைத்துக் கொண்டான்.

காட்டில் சந்தித்த அந்த முனிவரைச் சென்று பார்க்கப் போனான் மணி. அன்போடு வரவேற்ற அம்முனிவர் நடந்தது கேட்டு ஆசி கூறினார். ‘மனத்தில் வஞ்சனை இல்லாமல் உள்ளபடியே பேசிவரும் உண்மையால் கிடைத்த வெற்றி’ என்றார். தொலைவில் உணரும் ஆற்றலினால் நடந்தது இன்னதென்று கண்டு அந்த முனிவர் விளக்கம் சொன்னார். “உலகப் பேரழகியான குணவதியின் அழகுக்கு ஆசைப்பட்டு அவளை மணக்கப் பலநாட்டு மன்னர்களும் போட்டி போட்டுக் கொண்டு வந்தனர். அழகிற்கும், அவளது அரண்மனை வசதிகளுக்கும் மயங்கி வருபவர்கள்மேல் அப்பெண்ணிற்கு மரியாதையில்லை. அதனால் அவளும் திருமணத்திற்கு ஒத்துக்கொள்ளவில்லை. ஆனால் நீயோ அவளது அழகை வியக்காமல் கிழவி என்று சொன்னாயே அதுதான் அவளுக்குப் பிடித்துவிட்டது” என்றார்.“கிழவி என்று சொன்னது கிண்டல் அல்லவா? அதனால் கோபம் அல்லவா வந்திருக்க வேண்டும்?” என்று மணி கேட்டான். “இல்லை, அழகு நிரந்தரமானது இல்லையே. இன்றைக்கு அழகியாக இருக்கிற அவள் நாளைக்குக் கிழவியாகப் போகிறவள் தானே. அந்த உண்மையை நீ உணர்ந்து சொல்லியிருக்கிறாய் என்று மன்னன் மகிழ்ந்து போனான். அது மட்டுமல்ல, கொல்ல வந்த வீரனைப் பார்த்துப் பயப்படாமல் நீ தன்னை ஒரு ஞானி என்று அழைத்துக் கொண்டதோடு இளவரசி பரிசு கொடுக்கப் போகிறார் என்று சொன்னதும் அவர்கள் நம்பும் உண்மை ஆயிற்று அல்லவா?” என்றார் முனிவர்.

“அது சரி மன்னனிடம் ஆயுள் தண்டனை கொடுக்க வருகிறார் என்று சொன்னேனே... அது..?” என்று தயங்கியபடி இழுத்தான் மணி. சிரித்துக் கொண்டே முனிவர் சொன்னார், “அதுதான் மன்னர் கொடுத்து விட்டாரே!” என்றார். எப்படி என்று புரியாமல் மணி திருதிருவென்று விழித்தான். மீண்டும் சிரித்தபடி முனிவர் சொன்னார்... “அதுதான் தனது மகளை உனக்கு மணமுடித்துவிட்டாரே..உன் ஆயுளுக்கும் அவளோடு வாழ வேண்டிய தண்டனைதானே...” என்று கூறியவரோடு சேர்ந்து மணியும் சிரித்தான். “மேலும் ஒர் ஐயம்?” என்றான் மணி. ‘சொல்’ என்பதுபோல் முனிவர் பார்த்தார். மணி கேட்டான், “இளவரசியைக் கிழவி என்றும் அவளுக்கு மணமகனாக வருபவனைக் கிழவன் என்றும் நான் சொன்னது கிண்டல் தானே...” என்றான். சிரித்துக் கொண்டே முனிவர் சொன்னார், “அது உண்மைதானே... அந்தக் கிழவிக்கு ஏற்ற கிழவனாக நீ ஆகிவிட்டாயே... ஒரு காலத்தில் நீங்கள் கிழவனும் கிழவியும் ஆகப்போகிறவர்கள் தானே..” என்றார். “அது மட்டுமல்ல. கிழவன், கிழவி என்றால் உரிமை உடையவர்கள் என்றும் தமிழில் ஒரு பொருள் உண்டு . உனக்கு அவளும் அவளுக்கு நீயும் உரிமை உடையவர்கள் தானே...” என்றும் விளக்கினார். “ஒன்று உறுதி மகனே.. நடப்பதெல்லாம் நன்மைக்கே என்று சொல்லி வாழ்த்தி முடித்தார் முனிவர். “நன்றி சுவாமி!” என்று வணங்கியபடி எழுந்தான் மணி.

விழித்துப் பார்த்தால், எதிரில் மணியின் அம்மா. “பொழுது விடிந்து எந்நேரம் ஆச்சு? இன்னுமா தூக்கம்? சோம்பேறி” என்று திட்டிக் கொண்டே ஒரு கோப்பை நீரை அவனது முகத்தில் கொட்டினாள் அம்மா.

“எழுந்து நடக்க வேண்டியதைப் பாரடா சோம்பேறி” என்று அம்மா சொன்னதும்,கனவில் முனிவர் சொன்னது நினைவுக்கு வந்தது. நடப்பதெல்லாம் நன்மைக்கே. இனி எப்படி நடக்க வேண்டும் என்று சிந்திக்கத் தொடங்கினான் மணி. கனவு பலிக்கும்; பலிக்க வேண்டும் அல்லவா?