8. நடப்பதெல்லாம் நன்மைக்கே!

நடப்பதெல்லாம் நன்மைக்கே!

பாடஅறிமுகம்
Introduction to Lesson


மணி என்னும் இளைஞன் குறும்புத்தனம் மிக்கவன். வேடிக்கையான செயல்களைச் செய்து மற்றவர்களைக் கேலிக்கு உரியவர்களாக்குவது அவனுக்கு விருப்பமான செயல். அதனால் சிரிப்பும், சில சமயங்களில் சிரமங்களும் உண்டாகிவிடுகின்றன. அவனது போக்கைத் திருத்த முடியாத அவனுடைய தாய் திட்டுகின்றாள். “இப்படியெல்லாம் நீ தொடர்ந்துசெய்தாய் என்றால் உன்னை ஊரைவிட்டே துரத்திவிடுவார்கள்” என்று எச்சரிக்கிறாள். ஆனாலும், அவன் தனது குறும்பை நிறுத்திக் கொள்ளவில்லை. அம்மா சொன்னது மாதிரியே நடந்து விட்டது. மணியை ஊரைவிட்டுத் துரத்துகிறார்கள் ஊர்மக்கள். கானகத்தில் ஒரு முனிவரைச் சந்தித்து அவரிடமும் தனது குறும்புத்தனத்தைக் காட்டுகிறான் மணி. ஆயினும் அவர் அவனை வாழ்த்தி அனுப்புகின்றார். வழியின் ஊர்ப்புறத்தே உள்ள அம்மன் கோயிலில் தங்குகிறான். அப்போது, அந்நாட்டு இளவரசி தன் படைவீரர்களோடு அக்கோயிலுக்கு வழிபட வருகின்றாள். வழக்கம்போல, மணி தனது குறும்புத்தனத்தை வெளிப்படுத்தி விடுகிறான். உடனே காவலர்கள் அவனைக் கைது செய்கிறார்கள். சிறையில் அடைக்கப்பட்ட மணியைப் பார்க்க இளவரசியும் மன்னரும் வருகிறார்கள். அப்போதும் தனது குறும்புமொழி பேசுகிறான் மணி. அதனைக் கேட்ட மன்னர் ஓர் ஆணை பிறப்பிக்கின்றார். அதுகேட்ட மணி மயங்கி விழுகிறான். காரணம் என்ன? அடுத்து என்ன நடந்தது? என்று அறிந்து கொள்ள ஆவலாக இருக்கிறீர்களா? இந்தக் கதையைப் படியுங்கள்.