11. வான ஊர்தி

வான ஊர்தி

பாடம்
Lesson


வளவனும், இளமதியும் இன்று முதன் முதலாக வான ஊர்தியில் பறக்கப் போகிறார்கள். வளவன் அண்ணன், இளமதி தங்கை. இருவருக்கும் மிக்க மகிழ்ச்சி. இவர்களின் அப்பா அடிக்கடி வான ஊர்தியில் பயணிப்பவர். அவர் இந்தியாவின் பல ஊர்களுக்கும் வெளிநாடுகளுக்கும் அடிக்கடி வான ஊர்தியில் சென்று வருபவர். அவ்வாறு அவர் சென்று வரும்போது ஏற்பட்ட சுவையான அனுபவங்களை வளவனுக்கும் இளமதிக்கும் அவர் கூறுவார்.

வளவனுக்கும் இளமதிக்கும் அவர் வான ஊர்தியைப் பற்றிக் கூறும் போதெல்லாம் மிக்க மகிழ்ச்சியாக இருக்கும். எனவே, அவர்கள் ஒருநாள் அப்பாவிடம் நாங்களும் வான ஊர்தியில் பறக்க வேண்டும் என்று தங்கள் ஆசையைத் தெரிவித்தார்கள்.

அப்பாவும் இவர்களை ஒருநாள் அழைத்துப் போவதாகக் கூறினார். அந்த நாளும் வந்தது. அதுதான் இந்த நாள். அப்பா, அம்மா, வளவன், இளமதி ஆகியோர் இப்போது வான ஊர்திகள் இருக்கும் இடத்திற்கு வந்துவிட்டார்கள்.

சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள உள்ளூர் வான ஊர்தித் தளத்திற்கு அவர்கள் வந்துவிட்டார்கள். அம்மா, அப்பா ஆகியோர் சிறு பெட்டிகளை வைத்திருந்தனர். வளவனும் இளமதியும் அழகிய கரடி பொம்மைப் பைகளைத் தங்கள் முதுகில் சுமந்து இருந்தனர்.

வளவன் வான ஊர்தி நிலையத்தின் ஒவ்வொரு பகுதியையும் கவனித்துக் கொண்டே வந்தான். அங்கே உள்ள நீர் ஊற்றுகள், பெட்டிகளைச் சுமந்து செல்லும் சிறுவண்டிகள், அங்கும் இங்கும் ஓடும் மக்கள், இது போன்ற எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டே வந்தான். இளமதி அம்மாவின் கையை விடாமல் பிடித்துக் கொண்டாள். அப்பா வான ஊர்திகளின் வருகையைக் காட்டும் பட்டியலில் தாங்கள் போக வேண்டிய வான ஊர்தி எப்போது வரும் என்று பார்த்தார். தில்லி செல்லும் அவர்களின் வான ஊர்தி சரியான நேரத்திற்கு வர இருந்தது. அப்பா முன்னரே வாங்கி வைத்து இருந்த பயணச் சீட்டுகளைச் சரிபார்த்துக் கொண்டார்.

அவர்கள் அனைவரும் வான ஊர்தி நிலையத்தின் உள்ளே சென்றனர். அவர்கள் செல்ல வேண்டிய வான ஊர்தி வந்துவிட்டது. அந்த வான ஊர்தி புறப்படத் தயாராக இருப்பதாக அறிவிப்புச் செய்தார்கள். வளவனும் இளமதியும் வான ஊர்தியை நோக்கித் தம் பெற்றோருடன் சென்றனர். அங்கே இருந்த வான ஊர்தியின் வாயிலில் போடப்பெற்றிருந்த அதன் படிகளில் கால் வைத்து ஏறினர். அப்போதே ஒரு புதிய மகிழ்ச்சி வளவனுக்கும் இளமதிக்கும் ஏற்பட்டது.

வான ஊர்தியில் அனைவரும் ஏறியபின் அது கிளம்பத் தயாரானது. அதன் கதவு மூடப்பட்டது. பல்வேறு ஒலிகள் எழும்ப, வான ஊர்தி புறப்பட்டு விட்டது. சற்று நேரம் தரையில் வேகமாக ஓடிய வான ஊர்தி மேலே எழுந்தது. வளவன், இளமதி இருவரும் உள்ளே உள்ள இருக்கையில் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு சன்னல் வழியாக உலகைப் பார்க்கத் தொடங்கினர்.

அப்போது அப்பாவிடம் வளவன், வான ஊர்தி பற்றி எனக்குக் கொஞ்சம் சொல்லுங்கள் என்றான். அதற்கு அப்பா அங்கிருந்த வான ஊர்தி ஓட்டும் (வலவன்) நண்பர் ஒருவரிடம் சென்று வான ஊர்தியைப் பற்றி வளவனிடம் சொல்லும்படி கூறினார். அவரும் சொல்ல ஆரம்பித்தார். வானத்தில் வான ஊர்தி பறந்து கொண்டிருந்தது.

“தம்பி, மிக்க மகிழ்ச்சி. . . உங்கள் பயணம் சிறக்க எங்கள் வாழ்த்துகள். இதோ உங்களுக்கு வான ஊர்தியைப் பற்றி எனக்குத் தெரிந்த சில செய்திகளைக் கூறுகிறேன்” என்று கூறத் தொடங்கினார்.

வான ஊர்தி என்ற அறிவியல் கண்டுபிடிப்பு உடனே கண்டுபிடிக்கப்பெற்று விடவில்லை. ஏறக்குறைய ஒரு நூற்றாண்டு காலமாகப் பல ஆய்வுகள் மாற்றங்கள் நடைபெற்ற பிறகுதான் அது கண்டுபிடிக்கப் பெற்றது.

பறவைகளின் சிறகுகளைப் பார்த்திருக்கிறீர்கள் அல்லவா? இவைதான் வான ஊர்தியின் கண்டுபிடிப்புக்கு முக்கியக் காரணம்.“பறவையைக் கண்டான் விமானம் படைத்தான்” என்ற கவிஞர் கண்ணதாசனின் வரிகள் இவ்வகையில் மிக உண்மையானவை. பறவைகளின் சிறகுகள் மிகச் சிறப்பானவை. நுணுக்கமான அமைப்பு உடையவை.

பறவைகள் பறக்க, அவற்றின் சிறகுகள் பல வகைகளில் உதவி செய்கின்றன. அச் சிறகுகளில் சிறு சிறு எலும்புகள் உள்ளன. அந்த எலும்புகள் உள்புறத்தில் அதிக எடை இல்லாமல் அமைக்கப் பெற்றுள்ளன. எலும்புகளின் உள்பகுதியில் காற்றுப் புகும் நுண்ணறைகள் உள்ளன. இந்தக் காற்று பறவைகளுக்கு அதிகமான எடையைத் தருவதில்லை. அதே நேரத்தில் அவை தடையின்றிப் பறக்கும் அளவிற்கு வலிமை ஆனவை. எனவே, பறவைகள் சிறகுகளை விரித்து அவற்றை மேலும் கீழும் அசைத்துப் பறக்கின்றன. இந்த அமைப்பிலேயே முதன் முதலில் வான ஊர்தியை அமைக்க முயன்றனர். அவ்வாறு அமைக்க முயன்ற முதல் பறக்கும் பொறிக்கு ஆர்னிதோப்டர் என்று பெயர்.

இதனைத் தொடர்ந்து கிளமண்ட் ஆடர் என்பவர் ஒரு பறக்கும் பொறியைச் செய்தார். இது முன்னதைவிட ஓரளவிற்கு வெற்றி பெற்றது. அந்தப் பொறி இந்தப் படத்தில் இருப்பது போன்றுதான் இருந்தது.

Ader’s Flying Machine

1891 ஆம் ஆண்டு இந்தப் பொறி செய்யப்பட்டது. இது 164 அடி தூரம் மேலே எழுந்து பறந்தது.

இது கண்டுபிடிக்கப் பெற்ற ஏழு ஆண்டுகள் கழித்துப் பிரான்சு நாட்டில் ஒரு முயற்சி நடைபெற்றது. சடோரி என்பவர் ஓர் ஆயிரம் அடி செல்லும் பொறியை உண்டாக்கினார். எனினும் இவற்றில் சில குறைபாடுகள் இருந்தன.

இதனைத் தொடர்ந்து பேராசிரியர் எஸ்.பி. லாங்லி என்னும் அமெரிக்க நாட்டைச் சார்ந்தவர் நீராவியை எரிபொருளாகக் கொண்ட ஒரு பொறியைக் கண்டு பிடித்தார். பல தடைகளுக்குப் பின்னால் பல மைல் தூரம் ஓடக் கூடிய ஒரு பொறி கண்டுபிடிக்கப் பெற்றது.

இது வெற்றி பெற்ற ஒரு வான ஊர்தி என்றாலும் இதில் அதிக அளவு மக்கள் செல்ல முடியாது. இது ஒரு பெரிய குறையாகும்.

இதன்பிறகு பலவகை முயற்சிகள் நடைபெற்றன. லைலிஎன்தல், பிளிச்சர் ஆகியோர் இம்முயற்சியில் ஈடுபட்டுத் தம் உயிரை இழந்தனர். அந்த அளவிற்கு ஆராய்ச்சிகள் கொடுமையானவை; கடுமையானவை.

பின் பேராசிரியர் மோட்டாகோமரி என்பவர் கிளைடர் என்றவகை வான ஊர்திகளைக் கண்டறிந்தார். இது பலருடைய முன்னிலையில் சோதனை செய்யப்பெற்று வெற்றி பெற்றது.

இந்த முயற்சியில் மிக முக்கியமானவர்கள் விரைட்டு சகோதரர்கள்.ஆர்வில் விரைட்டும், வில்பர் விரைட்டும் (Orvile Wright and Wilbur Wright) உடன் பிறந்த அண்ணன் தம்பிகள்.

வளவா நன்றாகக் கேட்டு வருகிறாயா? நீயும் உன் தங்கை இளமதியும் போல அவர்கள் உடன் பிறந்தவர்கள். சரி. இளமதி என்ன செய்கிறாள்? பார். அவள் தூங்கி வழிகிறாள். பரவாயில்லை நீ கேள்.

இந்த அண்ணன் தம்பிகள் முன்னர் நடந்த அனைத்துச் சோதனைகளைப் பற்றி முதலில் தெரிந்து கொண்டனர். அவற்றில் என்ன என்ன குறைகள் என்பதையும் புரிந்து கொண்டனர். இவர்கள் அமெரிக்க நாட்டைச் சேர்ந்தவர்கள். வடக்கு கரோலினா பகுதியில் உள்ள மலை ஒன்றில் இவர்கள் வான ஊர்தி சோதனையில் ஈடுபட்டனர். இவர்கள் கண்டுபிடித்த ஒரு வான ஊர்தியின் வடிவத்தை இந்தப் படத்தில் பார், வளவா !

The first Wright Airplane
The first power-driven, man - carrying aeroplane to fly successfully.

இவர்கள் பல பல மாதிரிகளை உருவாக்கினர். 1903 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 17ஆம் நாள் காலையில் இவர்கள் ஒரு வான ஊர்திப் பொறியைக் கண்டறிந்து சோதனை ஓட்டம் விட்டனர். இது பழைய மாதிரிகளைக் காட்டிலும் குறைவான தூரமே சென்றது. இருந்தாலும் இதில் ஒரு மனிதரை விபத்து எதுவும் இல்லாமல் ஏற்றிச் செல்ல முடியும் என்ற வசதி இருந்தது.

இதனைத் தொடர்ந்து விரைட் சகோதரர்கள் மீண்டும் மீண்டும் முயன்றனர். 1905ஆம் ஆண்டு 12 மைல் தூரத்தை 18 மணித்துளிகளில் கடக்கும்படியான ஒரு பொறியை அவர்கள் வடிவமைத்தனர். இதன்மூலம் தற்போதைய வான ஊர்திகளின் தோற்றத்தை அவர்கள் தொடங்கி வைத்தார்கள்.

தற்போது பல வகைகளில் வான ஊர்திகள் வந்துவிட்டன. 300 முதல் 500 வரையிலான மக்களைச் சுமந்து செல்லும் வான ஊர்திகள் வந்துவிட்டன. 900 முதல் 1400 மீட்டர் உயரத்தில் இந்த வான்வெளிப் போக்குவரத்து வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது.

வான ஊர்திகளில் பல வகைகள் உள்ளன. உலங்கு வான ஊர்திகள் (Helicopters). ஒலியின் வேகத்தைவிட மிக வேகமாகச் செல்லும் மீஒலி விரைவு (Supersonic) வான ஊர்திகள், போருக்குப் பயன்படும் வகையில் செயல்படும் போர் வானூர்திகள் ஆகியன அவற்றுள் சில.

காற்றை முன்னும் பின்னும் உந்தித் தள்ளிப் பறக்கும் இந்த வான ஊர்திகள் தமிழகத்திலும் இருந்துள்ளன வளவா, இந்தச் செய்தி உனக்கு வியப்பாக இருக்கிறதா?

இராமாயணத்தில் இராவணன் பறக்கும் ஒரு பொறியை வைத்திருந்ததாகப் படித்திருக்கிறாய் அல்லவா? அதுபோலச் சீவகசிந்தாமணியில் விசையை என்பவள் ஒரு மயில்பொறியில் ஏறி வேறு ஒர் இடத்திற்குச் சென்றாள் என்று கேள்விப்பட்டிருக்கிறாய் அல்லவா?

அதைவிட மிகப் பழமையான தமிழ் இலக்கியத்தில் ஒரு வரி உண்டு. ஏறத்தாழ உன்பெயரையும் வான ஊர்தியின் பெயரையும் இணைத்து வரும் அந்தத் தொடரை உனக்குச் சொல்கிறேன் கேள். வலவன் ஏவா வானஊர்தி என்று பழைய தமிழ் இலக்கியத் தொடர் ஒன்று உண்டு. அதாவது மனிதர் யாரும் ஓட்டாமல் தானே இயங்கக் கூடிய வான ஊர்தியைப் புறநானூறு என்ற தமிழ் இலக்கியம் சொல்கிறது. அது பழந்தமிழகத்தில் இருந்துள்ளது.

இவ்வாறு பல கருத்துகள் உள்ளன வளவா! மற்றவற்றை நீயே தெரிந்து கொள். நன்றி வணக்கம் !

ஐயா மிக்க நன்றி. எனக்கு வான ஊர்தியின் கதையைத் தாங்கள் சொன்னதற்கு மிக்க நன்றி. அறிவியல் கண்டுபிடிப்புகளைக் கண்டறியத் தங்கள் உயிரையும் சிலர் இழந்துள்ளதைக் கேட்கும் போது எனக்கு வியப்பாக இருந்தது. இவற்றை எனக்குச் சொன்னமைக்கு மிக்க நன்றி.

வளவன் தன் இருக்கைக்கு வந்து அமர்ந்தான். அங்குத் தந்த இனிப்புகளைச் சாப்பிட்டான். சன்னல் வழியே வானத்தைப் பார்த்தான். கீழே உலகம் இருப்பதை எண்ணினான். அப்படியே இவனும் ஏதாவது புதிய ஒன்றைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று ஆசை கொண்டான். வான ஊர்தி பறந்து கொண்டே இருந்தது.