13 ஆபுத்திரன் திறம் அறிவித்த காதை

 
 

[ மணிமேகலைக்கு அறவணர் ஆபுத்திரன் திறம் கூறிய பாட்டு ]

 

 

 

மாபெரும் பாத்திரம் மடக்கொடிக்கு அருளிய

ஆபுத் திரன்திறம் அணியிழை கேளாய்:

வார ணாசிஓர் மறைஓம் பாளன்

ஆரண உவாத்தி அபஞ்சிகன் என்போன்

5

பார்ப்பனி சாலி காப்புக்கடை கழிந்து

கொண்டோன் பிழைத்த தண்டம் அஞ்சித்

தென்திசைக் குமரி ஆடிய வருவோள்

சூல்முதிர் பருவத்துத் துஞ்சுஇருள் இயவிடை

ஈன்ற குழவிக்கு இரங்காள் ஆகித்

10

தோன்றாத் துடவையின் இட்டனள் நீங்க,

தாய்இல் தூவாக் குழவித்துயர் கேட்டுஓர்

ஆவந்து அணைந்துஆங்கு அதன்துயர் தீர

நாவால் நக்கி நன்பால் ஊட்டிப்

போகாது எழுநாள் புறம்காத்து ஓம்ப,

15

வயனங் கோட்டில்ஓர் மறைஓம் பாளன்

இயவிடை வருவோன் இளம்பூதி என்போன்

குழவி ஏங்கிய கூக்குரல் கேட்டுக்

கழுமிய துன்பமொடு கண்ணீர் உகுத்துஆங்கு

ஆமகன் அல்லன் என்மகன் என்றே

20

காதலி தன்னொடு கைதொழுது எடுத்து

நம்பி பிறந்தான் பொலிகநம் கிளைஎனத்

தம்பதிப் பெயர்ந்து தமரொடும் கூடி

மார்புஇடை முந்நூல் வளையா முன்னர்

நாஇடை நன்னூல் நன்கனம் நவிற்றி

25

ஓத்துஉடை அந்தணர்க்கு ஒப்பவை எல்லாம்

நாத்தொலைவு இன்றி நன்கனம் அறிந்தபின்,

அப்பதி தன்னுள்ஓர் அந்தணன் மனைவயின்

புக்கோன் ஆங்குப் புலைசூழ் வேள்வியில்

குரூஉத்தொடை மாலை கோட்டிடைச் சுற்றி

30

வெரூஉப்பகை அஞ்சி வெய்துயிர்த்துப் புலம்பிக்

கொலைநவில் வேட்டுவர் கொடுமரம் அஞ்சி

வலையிடைப் பட்ட மானே போன்றுஆங்கு

அஞ்சிநின்று அழைக்கும் ஆத்துயர் கண்டு

நெஞ்சுநடுக்கு உற்று நெடுங்கணீர் உகுத்துக்

35

கள்ள வினையில் கடுந்துயர் பாழ்பட

நள்இருள் கொண்டு நடக்குவன் என்னும்

உள்ளம் கரந்துஆங்கு ஒருபுடை ஒதுங்கி

அல்இடை ஆக்கொண்டு அப்பதி அகன்றோன்

கல்அதர் அத்தங் கடவா நின்றுழி

40

கடத்திடை ஆவொடு கையகப் படுத்தி

ஆகொண்டு இந்த ஆர்இடைக் கழிய

நீமகன் அல்லாய் நிகழ்ந்ததை உரையாய்

புலைச்சிறு மகனே போக்கப் படுதிஎன்று

45

அலைக்கோல் அதனால் அறைந்தனர் கேட்ப,

ஆட்டிநின்று அலைக்கும் அந்தணர் உவாத்தியைக்

கோட்டினில் குத்திக் குடர்புய்த் துறுத்துக்

காட்டிடை நல்ஆக் கதழ்ந்து கிளர்ந்துஓட,

ஆபுத் திரன்தான் ஆங்குஅவர்க்கு உரைப்போன்

50

நோவன செய்யன்மின் நொடிவன கேண்மின்;

விடுநில மருங்கின் படுபுல் ஆர்ந்து

நெடுநில மருங்கின் மக்கட்கு எல்லாம்

பிறந்தநாள் தொட்டும் சிறந்ததன் தீம்பால்

அறம்தரும் நெஞ்சோடு அருள்சுரந்து ஊட்டும்

55

இதனொடு வந்த செற்றம் என்னை

முதுமறை அந்தணிர் முன்னியது உரைமோ

பொன்அணி நேமி வலங்கொள்சக் கரக்கை

மன்உயிர் முதல்வன் மகன்எமக்கு அருளிய

அருமறை நன்னூல் அறியாது இகழ்ந்தனை

60

தெருமரல் உள்ளத்துச் சிறியை நீஅவ்

ஆமகன் ஆதற்கு ஒத்தனை அறியாய்

நீமகன் அல்லாய் கேள்என இகழ்தலும்,

ஆன்மகன் அசலன் மான்மகன் சிருங்கி

புலிமகன் விரிஞ்சி புரையோர் போற்றும்

65

நரிமகன் அல்லனோ கேச கம்பளன்

ஈங்குஇவர் நுங்குலத்து இருடி கணங்கள்என்று

ஓங்குஉயர் பெருஞ்சிறப்பு உரைத்தலும் உண்டால்

ஆவொடு வந்த அழிகுலம் உண்டோ

நான்மறை மாக்காள் நன்னூல் அகத்துஎன,

70

ஆங்குஅவர் தம்முள்ஓர் அந்தணன் உரைக்கும்

ஈங்குஇவன் தன்பிறப்பு யான்அறி குவன்என

நடவை வருத்தமொடு நல்கூர் மேனியள்

வடமொழி யாட்டி மறைமுறை எய்திக்

குமரி பாதம் கொள்கையின் வணங்கித்

75

தமரில் தீர்ந்த சாலிஎன் போள்தனை

யாது நின்ஊர் ஈங்குஎன் வரவுஎன

மாமறை யாட்டி வருதிறம் உரைக்கும்

வார ணாசிஓர் மாமறை முதல்வன்

ஆரண உவாத்தி அரும்பெறல் மனைவியான்

80

பார்ப்பார்க்கு ஒவ்வாப் பண்பின் ஒழுகிக்

காப்புக் கடைகழிந்து கணவனை இகழ்ந்தேன்

எல்பயம் உடைமையின் இரியல் மாக்களொடு

தெற்கண் குமரி ஆடிய வருவேன்

பொன்தேர்ச் செழியன் கொற்கையம் பேர்உர்க்

85

காதவம் கடந்து கோவலர் இருக்கையின்

ஈன்ற குழவிக்கு இரங்கேன் ஆகித்

தோன்றாத் துடவையின் இட்டனன் போந்தேன்

செல்கதி உண்டோ தீவினை யேற்குஎன்று

அல்லல்உற்று அழுத அவள்மகன் ஈங்குஇவன்

90

சொல்லுதல் தேற்றேன் சொற்பயம் இன்மையின்

புல்லல்ஓம் பன்மின் புலைமகன் இவன்என.

ஆபுத் திரன்பின் அமர்நகை செய்து

மாமறை மாக்கள் வருங்குலம் கேண்மோ

முதுமறை முதல்வன் முன்னர்த் தோன்றிய

95

கடவுள் கணிகை காதலஞ் சிறுவர்

அருமறை முதல்வர் அந்தணர் இருவரும்

புரிநூல் மார்பீர் பொய்உரை யாமோ

சாலிக் குண்டோ தவறுஎன உரைத்து

நான்மறை மாக்களை நகுவன் நிற்ப,

100

ஓதல் அந்தணர்க்கு ஒவ்வான் என்றே

தாதை பூதியும் தன்மனை கடிதர

ஆ கவர் கள்வன்என்று அந்தணர் உறைதரும்

கிராமம் எங்கணும் கடிஞையில் கல்இட

மிக்க செல்வத்து விளங்கியோர் வாழும்

105

தக்கண மதுரை தான்சென்று எய்திச்,

சிந்தா விளக்கின் செழுங்கலை நியமத்து

அந்தில் முன்றில் அம்பலப் பீடிகைத்

தங்கினன் வதிந்துஅத் தக்கணப் பேர்ஊர்

ஐயக் கடிஞை கையின் ஏந்தி

110

மையறு சிறப்பின் மனைதொறும் மறுகிக்

காணார் கேளார் கால்முடப் பட்டோர்

பேணுநர் இல்லோர் பிணிநடுக்குற்றோர்

யாவரும் வருகஎன்று இசைத்துஉடன் ஊட்டி

உண்டுஒழி மிச்சில்உண்டு ஓடுதலை மடுத்துக்

115

கண்படை கொள்ளும் காவலன் தான்என்.

 

ஆபுத்திரன் திறன் அறிவித்த காதை முற்றிற்று.