61-70

61. மருதம்
தச்சன் செய்த சிறு மா வையம்,
ஊர்ந்து இன்புறாஅர்ஆயினும், கையின்
ஈர்த்து இன்புறூஉம் இளையோர் போல,
உற்று இன்புறேஎம்ஆயினும், நற்றோர்ப்
பொய்கை ஊரன் கேண்மை
செய்து இன்புற்றனெம்; செறிந்தன வளையே.

தோழி தலைமகன் வாயில்கட்கு உரைத்தது. - தும்பிசேர்கீரன்

62. குறிஞ்சி
''கோடல், எதிர் முகைப் பசு வீ முல்லை,
நாறு இதழ்க் குவளையொடு இடையிடுபு விரைஇ,
ஐது தொடை மாண்ட கோதை போல,
நறிய நல்லோள் மேனி
முறியினும் வாய்வது; முயங்கற்கும் இனிதே.

தலைமகன் இடந்தலைப்பாட்டின்கண் கூடலுறும் நெஞ்சிற்குச் சொல்லியது.- சிறைக்குடி ஆந்தையார்

63. பாலை
''ஈதலும் துய்த்தலும் இல்லோர்க்கு இல்'' எனச்
செய் வினை கைம்மிக எண்ணுதி; அவ் வினைக்கு
அம் மா அரிவையும் வருமோ?
எம்மை உய்த்தியோ? உரைத்திசின்- நெஞ்சே!

பொருள் கடைக்கூட்டிய நெஞ்சிற்குச் சொல்லியது. - உகாய்க்குடி கிழார்

64. முல்லை
பல் ஆ நெடு நெறிக்கு அகன்று வந்தென,
புன் தலை மன்றம் நோக்கி, மாலை
மடக் கண் குழவி அலம்வந்தன்ன
நோயேம் ஆகுதல் அறிந்தும்,
சேயர்-தோழி!-சேய் நாட்டோரே.

பிரிவிடை ஆற்றாமை கண்டு, ''வருவர்'' எனச் சொல்லிய தோழிக்குக் கிழத்தி உரைத்தது. - கருவூர்க் கதப்பிள்ளை

65. முல்லை
வன் பரற் தெள் அறல் பருகிய இரலை தன்
இன்புறு துணையொடு மறுவந்து உகள,
தான் வந்தன்றே, தளி தரு தண் கார்-
வாராது உறையுநர் வரல் நசைஇ
வருந்தி நொந்து உறைய இருந்திரோ எனவே.

பருவம் கண்டு அழிந்த தலைமகள் தோழிக்கு உரைத்தது. - கோவூர் கிழார்

66. முல்லை
மடவமன்ற, தடவு நிலைக் கொன்றை-
கல் பிறங்கு அத்தம் சென்றோர் கூறிய
பருவம் வாராஅளவை, நெரிதரக்
கொம்பு சேர் கொடி இணர் ஊழ்த்த,
வம்ப மாரியைக் கார் என மதித்தே.

பருவம் கண்டு அழிந்த தலைமகளைத் தோழி, ''பருவம் அன்று'' என்று வற்புறீஇயது - கோவர்த்தனார்

67. பாலை
உள்ளார்கொல்லோ-தோழி!-கிள்ளை
வளை வாய்க் கொண்ட வேப்ப ஒண் பழம்
புது நாண் நுழைப்பான் நுதி மாண் வள் உகிர்ப்
பொலங் கல ஒரு காசு ஏய்க்கும்
நிலம் கரி கள்ளிஅம் காடு இறந்தோரே?

பிரிவிடை ஆற்றாத தலைமகள் தோழிக்கு உரைத்தது. - அள்ளூர் நன்முல்லையார்

68. குறிஞ்சி
பூழ்க் கால் அன்ன செங் கால் உழுந்தின்
ஊழ்ப்படு முது காய் உழையினம் கவரும்
அரும் பனி அற்சிரம் தீர்க்கும்
மருந்து பிறிது இல்லை; அவர் மணந்த மார்பே.

பிரிவிடைக் கிழத்தி மெலிந்து கூறியது. - அள்ளூர் நன்முல்லையார்

69. குறிஞ்சி
கருங் கட் தாக் கலை பெரும் பிறிது உற்றென,
கைம்மை உய்யாக் காமர் மந்தி
கல்லா வன் பறழ் கிளைமுதல் சேர்த்தி,
ஓங்கு வரை அடுக்கத்துப் பாய்ந்து உயிர் செகுக்கும்
சாரல் நாட! நடு நாள்
வாரல்; வாழியோ! வருந்துதும் யாமே!

தோழி இரவுக்குறி மறுத்தது. - கடுந்தோட் கரவீரன்

70. குறிஞ்சி
ஒடுங்கு ஈர் ஓதி ஒள் நுதற் குறுமகள்
நறுந் தண் நீரள்; ஆர் அணங்கினளே;
இனையள் என்று அவட் புனை அளவு அறியேன்;
சில மெல்லியவே கிளவி;
அனை மெல்லியல் யான் முயங்குங்காலே.

புணர்ந்து நீங்கும் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - ஓரம்போகியார்