தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

1.5 காப்பியத்தின் பிற சிறப்புகள்

1.5 காப்பியத்தின் பிற சிறப்புகள்

கிறித்தவ சமயக் காப்பியமாக விளங்கும் இரட்சணிய
யாத்திரிகத்துக்கு, பிற காப்பியங்களுக்கு அமையாத பல பிற
சிறப்புகள் உள்ளன. அவற்றுள் சிலவற்றைக் காண்போம்.

1.5.1 முற்றுருவகப் பண்பு

இரட்சணிய யாத்திரிகம், ஒரு முற்றுருவகக் காப்பியம் என்று
முன்னரே குறிப்பிட்டோம். ஒரு பாடலிலோ சில பாடல்களிலோ
இவ்வாறு முற்றுருவகத் தன்மை அமைவதுண்டு; ஆனால் முழு
நூலுமே முற்றுருவகமாக அமைவது அரிது. அவ்வாறு தமிழில்
அமைந்த காப்பியம் இரட்சணிய யாத்திரிகம் மட்டுமே. பிரபோத
சந்திரோதயம்
என்னும் வடமொழி நாடக நூலின்
தமிழ்ப் பெயர்ப்பிலும் இத்தன்மை     காணப்படுவதாக
டாக்டர் வ. ஞானசிகாமணி கூறுகின்றார்.

யாத்திரிகத்தைப் பொறுத்தவரை, காப்பியக் கதை முழுவதுமே,
தூய இறைவனை இந்த மாய உலகில் வாழ்ந்தபடி நாடி நிற்கும்
ஒரு மனித மனத்தின் போராட்டங்களை உருவக நடையில்
விவரிப்பதுதான். இக்காப்பியத்தில்     மனிதப் பண்புகளே
கதைமாந்தர்களாக உருவகிக்கப்படுகின்றனர் என்பதை முன்னரே
கண்டோம். ஆன்மிகன், மென்னெஞ்சன், சகாயன், நிதானி,
அவநம்பிக்கை, அழிம்பன், மெய்விசுவாசி, மறைக்கிழவன்,
அறிவீனன், முழுப்பொய்யன், வியாக்கியானி என அனைத்துக்
கதைமாந்தர்களுமே இவ்வாறு அமைந்தவர்கள் தாம். கதை
மாந்தர்கள் மட்டுமல்ல, கதையில் வரும் பல இடங்களும்
ஊர்களும் கூட இவ்வாறு உருவக இயல்புடையனவே. சான்றாக,
எழிற் சத்திரம், நாசபுரி, மாயாபுரி, தருமபுரி, தரும சேத்திரம்,
துன்பமலை, ஆனந்த சைலம் முதலிய இடப் பெயர்களைச்
சுட்டலாம். கதைமாந்தரும் இடங்களும் மட்டுமல்ல, காப்பியத்தில்
இடம் பெறும் நிகழ்ச்சிகளும் உருவக அடிப்படை உடையனவே.
சான்றாக, கிறித்தவனும் அழிம்பனும் செய்யும் போர், நன்மை,
இறையறிவு, ஒளி, நல்லறம் ஆகியவற்றைத் தீமை, அவித்தை,
இருள், பாவம் என்பன எதிர்த்துப் போரிடுதல் போன்றது என
ஒரு பாடல் குறிப்பிடுகிறது.

1.5.2 வழிநூலில் தனிவழி

ஜான் பனியனது பில்கிரிம்ஸ் பிராகிரஸ் என்னும் நூலை
முதல் நூலாகக் கொண்டே, ஆசிரியர் இக்காப்பியத்தை வழி
நூலாகப் படைத்தார். எனினும் முழுக்க முழுக்க அந்நூலை இவர்
அப்படியே மொழிபெயர்ப்புச் செய்யவில்லை. நம் நாட்டுச்
சூழலுக்கும் தம் கவியாற்றலுக்கும் ஏற்பப் பல்வேறு மாற்றங்களைச்
செய்து. ஒரு முதல் நூல் போலவே தோன்றுமாறு படைத்துள்ளார்.
முன்னது உரைநடை நூல். அந்த ஆங்கில நூலின் தமிழ் மொழி
பெயர்ப்பான மோட்சப் பிரயாணம் என்பதும் உரைநடை நூலே.
அதன் ஆசிரியர் சாமுவேல் பவுலய்யர் ஆவார். கிருஷ்ண
பிள்ளையோ அதனைச் செய்யுள் வடிவில் காப்பியமாக்கினார்.
வால்மீகியின் கதையைத் தமிழ் நெறிப்படுத்தி அமைத்த
கம்பரைப்போல, ஜான் பனியனிடம் கதையையும் கருத்தையும்
வாங்கிக் கொண்டு, தாம் அதைப் புதிய வடிவில் பொலிவுற
அமைத்தார். முதல் நூலில் உள்ள மரியாதை, நாத்திக சாத்திரி
முதலிய பாத்திரங்களை இவர் நீக்கிவிடுகிறார். பிரபஞ்சன்,
தூர்த்தன், காமமோகிதன்
முதலிய புதிய பாத்திரங்களைப்
படைத்துக் கொள்கிறார். முதல் நூலில் உள்ள கதை மாந்தர்கள்
சிலர் பெயரையும் செயலையும் மாற்றியும் அமைத்துக் கொள்கிறார்.
சான்றாக, மூலநூலில் கிறித்தவன் என இருப்பதை, வேதியன்,
ஆன்ம விசாரி, மறைவாணன். சூரியன்
முதலிய பல
பெயர்களால் வழங்குகிறார். உண்மை (faithful) என்று
மொழியெர்ப்பில் உள்ளதை நிதானி என்று வழங்குகிறார்.

1.5.3 தமிழ்ப் பண்பாட்டு நெறி

முன்னரே கூறியது போன்று. கம்பரின் அடிச்சுவட்டில்.
கிறித்தவக் கம்பர் கிருஷ்ண பிள்ளையும் இக்காப்பியத்தைப் பல
நிலைகளிலும் தமிழ்ச் சூழலுக்கும், தமிழ்ப் பண்பாட்டுக்கும், தமிழ்ச்
சமய, இலக்கிய மரபுகளுக்கும் ஏற்ப அமைத்துப் பாடியுள்ளார்.

தேவாரப் பாடல்கள்

சிறப்பாக, தமிழ்ப் பக்தி மரபுக்கேற்ப, காப்பியத்தில் பல
இடங்களில் தேவாரப் பாடல்கள் பலவற்றை நெஞ்சை உருக்கும்
வகையில் பாடியுள்ளார். ஒரு சான்று இங்குத் தரப்படுகிறது:

சத்தாய் நிஷ்களமாய் ஒருசாமியமும் இலதாய்ச்
சித்தாய் ஆனந்தமாய்த் திகழ்கின்ற திரித்துவமே
எத்தால் நாயடியேன் கடைத்தேறுவன் என்பவம்தீர்ந்து
அத்தா உன்னையல்லால் எனக்கார்துணை யாருறவே?

(தேவாரம் எண்.1. ஆதிபருவம், உபாதி மலைப்படலம்)

(நிஷ்களமாய் = குற்றமில்லாததாய். ஒருசாமியமும் = ஒப்பு
ஒன்றும். சித்தாய் = பேரறிவாய். திரித்துவமே =
மூவரும்ஒருவராய் விளங்கும் இறைக்கோட்பாடு. கடைத்தேறுவன்
= மீட்பு அடைவேன். அத்தா = தலைவா)

தாயே தந்தைதமர் குருசம்பத்து நட்பெவையும்
நீயே எம்பெருமான் கதிவேறிலை நிண்ணயம்காண்
ஏயே என்றிகழும் உலகோடெனக் கென்னுரிமை
ஆயே உன்னையல்லால் எனக்கார்துணை யாருறவே?

(தேவாரம் எண்.8 ஆதிபருவம், உபாதிமலைப்படலம்)

(தமர் = உறவினர். சம்பத்து = செல்வம். நிண்ணயம் =
உறுதியானது. ஆயே = தாயே)

அக இலக்கிய மரபு

அவ்வாறே, கிறிஸ்துவின் சிலுவைத் தியாகத்தை வருணிக்கும்
போது, தமிழ் அக இலக்கிய மரபைப் பின்பற்றி, அதனை மடல்
ஊர்தலுக்கு ஒப்பிடுகிறார். தன் காதலியின்பால் தான்கொண்ட
மாறாக் காதலை அவளது உற்றாருக்கும் ஊராருக்கும் உணர்த்த,
பனங்கருக்கால் செய்யப்பட்ட குதிரையில் ஏறி, அது தன்
உடலைக்கிழிக்கக் கிழிக்க, காதலன் ஊர்வலம் வரும் செயலே
மடல் ஊர்தல் எனப்படுவது, இது தமிழ் இலக்கிய மரபுக்கே
உரியது.

சமய இலக்கியத் தொடர்கள்

அவ்வாறே “கடவுளின் வார்த்தை” என இறைமகன் இயேசு
அழைக்கப்படுவதை விளக்கும் போது, அவரைப் “பிரணவ
தெய்வம்” (ஓம்) எனப் பாடுகிறார். சீவகங்கை, சரண பங்கயம்
முதலிய சொற்களையும்; சரணாகதித் தத்துவம், மும்மலம், நயன
தீட்சை, பரிச தீட்சை, மார்ச்சால நியாயம், அபயவரத
அஸ்தம்
முதலிய சைவ சமயக் கோட்பாடுகளையும் கிறித்து நெறி
உண்மைகளை விளக்கிடத் தயங்காமல் பயன்படுத்துகிறார்.
இவ்வாறாக, காப்பியத்தில் தமிழ் மணமும் தமிழ்ப் பண்பாட்டு
நெறிகளும் மிளிரச் செய்கிறார்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 02:10:14(இந்திய நேரம்)