Primary tabs
4.0 பாட முன்னுரை
இசுலாமிய அடிப்படையில் தோன்றிய காப்பியங்கள் பல.
அவை
பெருங்காப்பியங்கள், சிறுகாப்பியங்கள் என ஏறத்தாழ
இருபத்தாறு காப்பியங்கள் உள்ளன.
இசுலாமியக் காப்பியமாக முதலில் தோன்றியது கி.பி. 1648-இல்
எழுதப்பட்ட கனகாபிசேக மாலை என்னும் நூல் ஆகும்.
இருப்பினும் இசுலாமியத் தமிழ்க் காப்பியங்களுள்
சீறாப்புராணமும்,
சின்னசீறாவும் தலைசிறந்த காப்பியங்களாகக்
கருதப்படுகின்றன.
இவை இசுலாமிய இரட்டைக் காப்பியங்கள் என
அழைக்கப்படுகின்றன.
சீறாப்புராணம், சின்ன சீறா ஆகிய இரண்டும் இசுலாமிய
சமயத் தீர்க்க தரிசி (இறைத் தூதர்) ஆகிய நபிகள் நாயகத்தின்
வாழ்க்கை
வரலாற்றைக் கூறும் காப்பியங்கள் ஆகும். இவை
இறைவன்
ஒருவன் என்ற கொள்கையை வற்புறுத்துகின்றன;
நன்மைக்கும்
தீமைக்கும், உண்மைக்கும் பொய்மைக்கும் இடையே
ஏற்படும்
போராட்டங்களைப் பாடுகின்றன; ஒழுக்க நெறிகளைக்
கூறுகின்றன.
சீறாப்புராணத்தின் தொடர்ச்சியாக முடிவு பெறாத பகுதியை
முடித்துப் பாடுவது சின்னசீறா
ஆகும். எனவே சீறாப்புராணமும்
சின்ன சீறாவும் சேர்ந்து நபிகள் நாயகத்தின் வாழ்க்கை
வரலாற்றை நிறைவு செய்கின்றன.
இசுலாமிய நெறித் தோன்றலின் இறுதித் தூதராகிய நபிகள்
நாயகத்தின் வாழ்க்கை வரலாற்றைக் கூறும் இக்காப்பியங்களின்
சிறப்பினையும் அவை தமிழ்க்காப்பிய இலக்கியத்தை
வளப்படுத்தியமையையும்
இப்பாடம் கூறுகிறது.