Primary tabs
இசுலாமிய சமயத்தைச் சேர்ந்த சீறாப்புராணம் இசுலாமியக் கோட்பாடு, கடமைகள், இறைத் தூதின் பெருமை ஆகியவற்றை எடுத்துரைக்கிறது.
4.2.1 இசுலாமியக் கோட்பாடு
இறைவன் ஒருவனே. முகம்மது அவனுடைய தூதர் என்று கூறுவது கலிமா என்னும் இசுலாமிய மூலமந்திரம். இதனை உறுதியாக ஏற்பது ஈமான் என்னும் நம்பிக்கை. இந்த நம்பிக்கையைச் செயல்படுத்துவது அமல் ஆகும். இவை மூன்றும் மிகச்சிறப்பாகப் பொருந்துவதே இசுலாமாகும். இதனை,
அருத்தமே யுரைகலி மாஅந் நிண்ணயப்
பொருத்தம்ஈ மான்நடை புனைத லாம்அமல்
திருத்தமே இவைஇசு லாமில் சேர்தலே
(தொழுகை வந்த வரலாற்றுப் படலம் 2 (1297)
(கலிமா = மூலமந்திரம்; ஈமான் = நம்பிக்கை; அமல் = செயல்படுத்துதல்)
எனப்பாடுகிறார்.
இறைவன் ஒருவனே. இறைவனின் தூதர் முகம்மது நபி என்ற மூலமந்திரத்தின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். மேலும் தொழுகை, ஏழை வரி, நோன்பு, புனித யாத்திரை செய்தல் என்பன போன்ற நற்செயல்களும் இணைந்ததே இசுலாம் என்பதை இப்பாடலில் உமறுப் புலவர் தெளிவுபடுத்துகிறார்.
4.2.2 கடவுள் கோட்பாடு
சீறாப் புராணக் கடவுள் வாழ்த்துப் பாடல்களில், முதல் மூன்று பாடல்களும் உருவமற்ற ஓர் இறைவனைப் பணிந்து வணங்குவதைத் தெரிவிக்கின்றன. எடுத்துக்காட்டாய் முதல்பாடலில்,
தெளிவினும் தெளிவதாய்ச் சிறந்த
மருவினும் மருவாய் அணுவினுக்கு அணுவாய்
மதித்திடாப் பேரொளி யனைத்தும்
(கடவுள் வாழ்த்துப் படலம் - 1)
(மரு = மணம்)
என்று இறைவனைப் பற்றிக் குறிப்பிடப்படுகிறது.
● எல்லாம் வல்ல இறைவன் ஒருவனே
அழகுக்கெல்லாம் மலோன அழகன். காணப்படுகின்ற அனைத்துப் பொருள்களிலும் உள் உறைந்து திகழ்கின்ற உண்மைப் பொருள். தெளிந்த அறிவினும் சிறந்த அறிவுடையவன். மணக்கும் பொருள்களிலும் சிறந்த மணமாய் விளங்குபவன். அணுவினுக்கும் நுண்ணிய தூளானவன். ஒப்பற்ற ஒளிகள் அனைத்தினும் மலோன ஒளியானவன். உலகினைக் காத்து இரட்சிக்கின்ற இறைவனை மனத்தின் கண் இருத்துவோம் என்ற கருத்துகளை இப்பாடல் கூறுகிறது. இறைவன் ஒருவனே என்ற இசுலாமியக் கடவுள் கொள்கையை இப்பாடல் எடுத்துரைக்கிறது.
மேலும் தீன்நிலை கண்ட படலத்தில், இந்த உலகம் அனைத்தையும் படைத்த ஆண்டவனின் உண்மைத் தூதர் முகம்மது ஆவார். அவருடைய அறிவுரைகளைப் பின்பற்றி நடந்தால் சுவர்க்கம் எனும் வீடுபேற்றை அடைவர் என்றும் குறிப்பிடுகிறார்.
4.2.3 இசுலாமியக் கடமைகள்
இசுலாமிய சமயத்தைப் பின்பற்றும் இசுலாமியர்களின் தலை சிறந்த கடமைகள் ஐந்தாகும். அவை ஐம்பெருங்கடமைகள் என்று அழைக்கப்படுகின்றன.
மேற்குறிப்பிட்ட ஐந்தும், சீறாவில் பல இடங்களில் இடம் பெற்றுள்ளன.
ஒரே பாடலில் கலிமா, ஐந்துவேளை தொழுகை, நோன்பு, சக்காத்து, ஹஜ் ஆகியவை பற்றியும் குறிப்பிடுகிறார். அக்கருத்து,
நிறைந்தஅல்லாச் செகத்தின் மேல்தன்
தூதராய் உமையிருக்க அனுப்பினதுங்
காலம்ஐந்தும் தொழுக என்றுங்
காதலுடன் சக்காத்து நோன்பு கச்சும்
பறுல்எனவே கழறும் ஐந்தும்
(லுமாம் ஈமான் கொண்ட படலம் 5 (4682))
(தீதுஇலா = தீமை இல்லாத, அல்லா = அல்லாஹ் -பரம்பொருளாகிய ஓர் இறை, செகம் = உலகம், தொழுகை = ஐந்துவேளை தொழுகை, சக்காத்து = ஈகை (ஏழைவரி), நோன்பு = இரமளான் எனும் அரபு மாதத்தில், முப்பது நாள்கள் பகல் பொழுதில் உண்ணாமல் பருகாமல் இருத்தல், கச்சு = ஹஜ்ஜூ = துல்ஹஜ் எனும் அரபு மாதத்தில், பொருள் வசதியும் உடல்நலமும் உடைய முசுலீம்கள் அனைவரும் வாழ்நாளில் ஒருமுறையேனும் கட்டாயமாக மேற்கொண்டு செல்லும் மக்கா புனிதப்பயணம், பறுல் = இறைவன் விதித்துள்ள கட்டாயக் கடமை)
என்னும் பாடலிலுள்ளது.
● கட்டாயக் கடமைகள்
இப்பாடல் தீமை இல்லாத தூய்மையான திருக்குர்ஆனின் உட்பொருளானவன், ஒளிவடிவானவன், எங்கும் நிறைந்தவன் அவனே அல்லாஹ். அகில உலகம் அனைத்திற்கும் அந்த இறைவனின் இறுதித் தூதராக அனுப்பப்பட்டு, வந்தவர் நபிகள் நாயகம் என்று குறிப்பிடுகிறது. மேலும் ஐந்து வேளையும் தொழுகை செய்தல், அன்போடு ஈகை அளித்தல், நோன்பு இருத்தல், ஹஜ் என்னும் புனிதப் பயணம் மேற்கொள்ளுதல் ஆகிய ஐந்தும் இசுலாமியர்களின் கட்டாயக் கடமைகளாகும் என்ற கருத்தை வழங்குகிறது.
4.2.4 நபியின் பெருமை
அராபிய நாட்டின் மக்காவில் ஆமீனாவிற்கும், அப்துல்லாவிற்கும் முகம்மது நபி பிறந்தார். நபிகள் நாயகத்தின் பிறப்பை உமறுப் புலவர், மக்கள் குலம் ஈடேற வழிகாட்டியாகப் பிறந்தார் என்கிறார்.
● பிறப்பின் சிறப்பு
இவ்வுலகில் நபிகள் நாயகம் வெயிலிலே நிழலாகவும்; பாவம் எனும் நோய்க்கு மருந்தாகவும்; இசுலாமிய மார்க்கம் செழிக்க நல்ல மழையாகவும்; மிகப்பெரிய உலகத்திற்கு ஒருமணி விளக்காகவும்; குறைசிக் குலத்திற்கே சிறப்புத் தருபவராகவும் பிறந்தார். இதனை,
படர்தரு தருநிழல் எனலாய்
ஈனமும் கொலையும் விளைத்திடும் பவநோய்
இடர்தவிர்த் திடும்அரு மருந்தாய்த்
தீனெனும் பயிர்க்கோர் செழுமழை எனலாய்
குறைஷியின் திலதமே எனலாய்
மானிலந் தனக்கோர் மணிவிளக்கு எனலாய்
முகம்மது நபிபிறந் தனரே
(நபி அவதாரப்படலம் - 92)
(பானு = ஞாயிறு; இடர் = துன்பம்; பவநோய் = பாவம் எனும் நோய்; ஈனம் = இழிவான செயல், தீன் = இசுலாமிய சமயம்; குறைஷி = அராபிய நாட்டு ஒரு குலத்தினர்; திலதம் = சிறப்பு)
என்று பாராட்டுகிறார் உமறுப் புலவர்.
● இருள் போக்கும் ஞாயிறு
ஞாயிறு, இறைவன் அளித்த விளக்கு. நபிகள் நாயகம் இறைவனால் அருட்கொடையாக அளிக்கப்பட்ட மணிவிளக்கு. ஞாயிறு தோன்றியதால் உலகின் இருள் ஒழிந்தது; ஒளிபிறந்தது. நபிகள் நாயகம் பிறந்ததால் அஞ்ஞானமும் துன்பமும் ஒழிந்தன; ஞானமும் இன்பமும் பிறந்தன என்று, நபியின் பிறப்பில் சிறப்புக் காண்கிறார் புலவர். நாயகம் ஏன் பிறந்தார்கள்? அவர்களது பிறப்பால் அடையப் போகும் நன்மை யாது என்பனவற்றையும் மிக அழகாகக் கூறுகிறார்.
● இருள்போக்கும் முழுநிலவு
உலக நெறிமுறைகள் தவறிவிட்டன; மயக்கும் மதங்கள் மிக அதிகமாகி விட்டன; துறவறம் போலித் தன்மையாகி விட்டது; இல்லற வழிமுறைகள் அழிந்தன; எனவே விளக்கு இல்லாத வீடுபோல் உலகம் இருளில் மூழ்கிக் கிடக்கிறது. இவற்றிற்குக் காரணமான இசுலாம் அல்லாத தன்மையாகிய குபிர் என்னும் அஞ்ஞானத்தை நீக்கி, அறநெறியாகிய இசுலாத்தை விளக்கக் குற்றமில்லாத முழு நிலவு போல முகம்மது நபி பிறந்தார் எனப் பாடுகிறார். இவ்வாறு முகம்மது நபி பிறப்பினால் ஏற்பட்ட சிறப்பினை முதலில் குறிப்பிடுகிறார்.
இங்ஙனமாகச் சீறாக் காப்பியத்தில் இசுலாமியத் திருத்தூதரான நபிகள் நாயகத்தின் பிறப்பின் உயர்வையும் பெருமையையும் அறிய வைத்துள்ளார்.