Primary tabs
தமிழ்க் காப்பியங்களில் நாடு, நகரம், அவதாரம் போன்ற படலங்களைக் கற்பனை மிகுந்த பாடல்கள் பாடி அழகுபடுத்துவர். சின்ன சீறாவில் புலவருக்கு அந்த வாய்ப்புக் கிடைக்கவில்லை. எனவே காப்பியத்தின் இடையில் ஆங்காங்கே சில இடங்களில் கற்பனை நயம் தோன்றுமாறு பாடியுள்ளார்.
4.7.1 அன்னத்தின் மயக்கம்
கம்புகால் ஊன்றி ஊர்ந்து
மருமலி கமல வாவி
வண்டலில் உயிர்த்த முத்தைப்
பொருவரும் பசிய சூட்டுப்
பொற்புறும் எகினம் அண்டத்
திரளென அணைத்து உறங்கும்
செறிவள மதீனாத் தன்னில்
(சின்ன சீறா; நூம் கிறக்கிலுக்கு
நிருபம் அனுப்பின படலம் : 2-15)
(முகை = மொட்டு; கமல வாவி = தாமரைக் குளம்; எகினம் = அன்னம், பீலி = நத்தை, கம்பு = சங்கு, மரு = மணம், பசிய சூட்டு = பச்சைக் கொண்டை, அண்டம் = முட்டை)
என்னும் பாடலில் எடுத்துரைக்கிறார்.
4.7.2 நானில மக்கள்
குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம் ஆகிய நான்கு நிலங்களில் வாழும் மக்களையும், அவர்தம் தொழில்களையும் பின்வருமாறு பனீ அகமது மரைக்காயர் பாடுகிறார்:
குறிஞ்சியில் வாழ்ந்தோர் குறவர். கொடுமை தரும் மறவர் பாலையில் வாழ்ந்தனர். இடையர் (பொதுவர்) பசுமாடுகளையும் எருமைகளையும் எப்பொழுதும் வைத்திருப்பார்கள். முல்லையில் அவர்கள் வாழ்ந்தனர். வெறி ஊட்டும் மது உண்டு களித்திருக்கும் மள்ளர் மருதநிலத்தைச் சார்ந்தவர் என்பது கருத்தாகும். இதனைப்
பருப்பதக் கடறும் வெய்ய
மறவர்வாழ் பாலைக் காடும்
மறிஉடைப் பொதுவர் செங்கண்
நெறிமருப்பு எருமை ஆன்ஆ
நிதம்பயில் முல்லைக் காடும்
வெறிமது அருந்தும் மள்ளர்
விளைத்தசொல் பழனக் காடும்
(சுதாம் படலம் 45:509)
(பருப்பதக் கடறு = கல்லும் முள்ளும் நிறைந்த மலைப்பகுதி, பொதுவர் = ஆயர், நெறி மருப்பு = வளைந்த கொம்பு, ஆன், ஆ = காளை, பசு, மள்ளர் = மருத நிலத்து மக்கள்)
என நான்கு நில வகை மக்களைக் கூறிப் பாடுகிறார்.
4.7.3 கடலும் பெண்ணும்
அலை ஆடும் கடலை நடனம் ஆடும் ஒரு பெண்ணாக உருவகம் செய்துள்ளார் பனீஅகமது மரைக்காயர். முத்துகள் அந்தப் பெண்ணின் பற்களாம், செந்தாமரை மொட்டுகள் அவளது மார்பகங்களாம், பாசிக் கொத்துகள் அவளது கூந்தலாம், சிவந்த பவளக் கொடிகள் அவளது விரல்களாம், சங்கு அவளது கழுத்தாம், அலைகள் அவள் கைகளாம், காற்று அவள் கால்களாம். புலவரின் இந்த உருவகத் திறன் சிறப்பாக அமைந்துள்ளது:
மரைமுகை முலையும் பாசிக்
கொத்தெனும் குழலும் துப்பின்
கொடியெனும் விரலும் பேழ்வாய்
நத்துஎனும் களமும் கொண்ட
நளிர்கடல் என்னும் மாது
சித்திரத் திரைக்கை காட்டிக்
காலினால் நடனம் செய்தாள்
(அபசி நஜாசா ராஜாவுக்கு நிருபம்
அனுப்பின படலம் 36:145)
(எயிறு = பல், முகை = மொட்டு, குழல் = கூந்தல், துப்பு = பவளம், களம் = கழுத்து)
இந்தப் பாடலில் கடலில் உள்ள பொருள்களைப் பெண்ணின் உறுப்புகளாக உருவகம் செய்து பாடியிருப்பது கவிஞரின் கவிதைத் திறமையை வெளிப்படுத்துகிறது. அலையைக் கடலின் கையாகவும், காற்றைக் காலாகவும் காட்டிப் பெண் நடனம் செய்வதாகப் பாடும் புலவரின் கவிநயமும் சிறப்பாக உள்ளது.