Primary tabs
தமிழ் இலக்கணம் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி
என்று ஐந்து வகைப்படும். இவற்றுள் எழுத்து, சொல், யாப்பு,
அணி ஆகிய நான்கு இலக்கணங்கள் பிற
மொழிகளிலும் உள்ளன.
ஆனால் பொருள் இலக்கணம் தமிழ் மொழியில் மட்டுமே என்பது
அறியத்தக்கதாகும்.
மேற்காட்டிய ஐந்து இலக்கணங்களையும் ஒருங்கே கூறும்
வகையில் தொல்காப்பியம் அமைந்துள்ளது. ஐந்து
இலக்கணங்களையும் கூறுகின்ற, முழுமையாகக் கிடைத்துள்ள
பழைய இலக்கண நூல் இஃது ஒன்றே
ஆகும்.
எழுத்து, சொல் என்னும் இரண்டு இலக்கணங்களைக் கூறும்
நன்னூல்; யாப்பு இலக்கணம் பற்றிக் கூறும் யாப்பருங்கலம்,
யாப்பருங்கலக் காரிகை; அணி இலக்கணம் பற்றிக் கூறும்
தண்டியலங்காரம்; புறப்பொருள் இலக்கணம் பற்றிக் கூறும்
புறப்பொருள் வெண்பா மாலை; அகப்பொருள் பற்றிக் கூறும்
நம்பியகப் பொருள் முதலானவை பிற்காலத்தில் தோன்றிய
இலக்கண நூல்களில் சிலவாகும்.
நம்பியகப் பொருள், அகப்பொருள் இலக்கணம் பற்றி
எடுத்துரைக்கும் நூல் ஆகும். இந்நூலின் ஆசிரியர் நாற்கவிராச
நம்பி. ஆசிரியர் பெயருடன் (நம்பி) இந்நூல் கூறும் இலக்கணப்
பொருளையும் (அகப்பொருள்) சேர்த்து நம்பியகப் பொருள் என்று
அழைக்கப்படுகிறது. இந்நூலுக்கு
அகப்பொருள் விளக்கம் என்றும்
பெயர் உண்டு. இந்நூலுக்கு இலக்கியமாக தஞ்சைவாணன் கோவை
என்ற நூல் இயற்றப்பட்டது என்பர்.
நம்பியகப் பொருள், சிறப்புப் பாயிரத்துடன் தொடங்குகிறது.
இந்நூல் ஐந்து இயல்களாகப்
பகுக்கப்பட்டுள்ளது. அவை:
அகத்திணையியலில் 116 சூத்திரங்களும்
(நூற்பாக்களும்)
களவியலில் 54 சூத்திரங்களும் வரைவியலில் 29 சூத்திரங்களும்
கற்பியலில் 10 சூத்திரங்களும் ஒழிபியலில் 43 சூத்திரங்களும் ஆக
மொத்தம் 252 சூத்திரங்கள் இடம் பெற்றுள்ளன.
அகப்பொருள் விளக்கம் என்ற நூலை எழுதியவர் இவர்.
உய்ய வந்தான் என்பவரின் மைந்தர் என்றும் சமண சமயத்தவர்
என்றும் கூறுவர்; வடமொழி, தென்மொழி இரண்டிலும் வல்லவர்;
ஆசுகவி, மதுரகவி, சித்திரக்கவி, வித்தாரக்கவி ஆகிய நான்கு
கவிகளிலும் வல்லவர் என்பதால் நம்பி என்ற இயற்பெயருடன்
நாற்கவிராச என்ற அடைமொழி சேர்ந்து நாற்கவிராச நம்பி என்று
அழைக்கப்பட்டார்; அந்நூலைப் பாண்டியன் குலசேகரன்
அவையில் அரங்கேற்றினார். இவர் கி.பி.14ஆம் நூற்றாண்டில்
வாழ்ந்தவர் என்பர்.