தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

3.5 மருட்பா

3.5 மருட்பா

மருள் = மயக்கம், கலப்பு. மருட்பா = கலப்புப் பா. முதலில்
வெண்பா அடிகளும் பின்னர் ஆசிரிய அடிகளும் கலந்தமைவது.

  • மருட்பாவின் வகைகள்

  • 1. புறநிலை வாழ்த்து
    2. கைக்கிளை
    3. வாயுறை வாழ்த்து
    4. செவியறிவுறூஉ

    என மருட்பா நான்கு வகைப்படும். பாடலில் அடங்கியுள்ள
    கருத்தின் அடிப்படையில் இப்பாகுபாடு அமைந்துள்ளது.

    மருட்பாவில்,

    ஒரு தலைவனை ‘நீ வழிபடும் தெய்வம் உன்னைக்காக்க, நீ
    பழியற்ற செல்வத்தோடு மேலும் மேலும் சிறந்து வாழ்வாயாக’
    என வாழ்த்தினால் அது புறநிலை வாழ்த்து மருட்பா ஆகும்.

    கைக்கிளைக் காதல் (ஒருதலைக் காதல்) பாடப்பட்டால் அது
    கைக்கிளை மருட்பா
    எனப்படும்.

    ஒரு மெய்ப்பொருளை மருட்பாவில் அமைத்துப் பாடினால்
    அது வாயுறை வாழ்த்து மருட்பா ஆகும்.

    ‘உயர்ந்தோரிடம் பணிவாக நடந்துகொள்’ என அறிவுரை
    கூறும் பொருள் அமைந்தால் அது செவியறிவுறூஉ மருட்பா
    ஆகும்.

    இங்குப் புறநிலை     வாழ்த்து    
    மருட்பாவுக்கு ஓர் எடுத்துக்காட்டுக்
    காணலாம்.

    (எ.டு)
    தென்றல் இடைபோழ்ந்து தேனார் நறுமுல்லை
    முன்றில் முகைவிரியும் முத்தநீர்த் தண்கோளுர்க்
    குன்றமர்ந்த கொல்லேற்றான் நிற்காப்ப என்றும்
    தீரா நண்பின் தேவர்
    சீர்சால் செல்வமொடு பொலிமதி சிறந்தே

    பாடல் பொருள்;
    ’தலைவனே! தென்றல் வீசுவதால் முல்லை
    மலர்கின்ற நீர்வளமிக்க கோளூரில் குன்றின்
    மீது கோயில் கொண்ட சிவன் உன்னைக்
    காக்க, என்றும் நீ தேவர்களின் செல்வம்
    போன்ற வளமான செல்வத்தைப் பெற்றுச்
    சிறந்து திகழ்வாயாக!’

    இப்பாடலில் புறநிலை வாழ்த்து அமைந்திருப்பதை
    இப்போது கண்டீர்கள். பாடல் அமைப்பில் முதல் மூன்றடிகளும்
    வெண்டளை அமைந்து     வெண்பாவுக்குரிய அடிகளாக
    இருப்பதையும் இறுதி இரண்டடிகள் ஆசிரியத்தளை அமைந்து
    ஆசிரிய அடிகளாக இருப்பதையும் காணலாம். இவ்வாறு
    அமைந்திருப்பதால் இது புறநிலை வாழ்த்து மருட்பா ஆகும்.

    Tags   :

    புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 03:00:08(இந்திய நேரம்)