தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

4.1 குறள் வெண்பாவின் இனம்

4.1 குறள் வெண்பாவின் இனம்

வெண்பாவிற்குரிய இனங்கள்

(1)
குறள் வெண்பாவின் இனம்
(2)
பிறவெண்பாக்களின் இனம் என இருவிதங்களாக
வகைப்படுத்தப்படுகின்றன.

இங்கு முதலில் குறள் வெண்பாவின் இனங்களைப்
பார்ப்போம்.

  • குறள் வெண்பாவின் இனங்கள்

  • குறள் வெண் செந்துறை
    குறள் தாழிசை

    ஆகிய இரண்டும் ஆகும்.

    4.1.1 குறள் வெண்செந்துறை

    (1)
    இது இரண்டு அடியாக வரும்.
    (2)
    இரண்டடியும் அளவொத்திருக்கும்.     அதாவது
    அடிதோறும் சீர் எண்ணிக்கை சமமாக இருக்கும்.
    (3)
    விழுமிய (சிறந்த) பொருளும் ஒழுகிய (தடையின்றி
    வருகின்ற) ஓசையும் பெற்று வரும்.

    (எடுத்துக்காட்டு)

    ஆர்கலி உலகத்து மக்கட் கெல்லாம்
    ஓதலிற் சிறந்தன்று ஒழுக்க முடைமை

    (முதுமொழிக் காஞ்சி - 1)

    (ஆர்கலி = கடல்)


    இது இரண்டடிகளைக் கொண்டது. ஒவ்வோர் அடியிலும் 4
    சீர்களைப் பெற்று அளவொத்து வந்துள்ளது. உலகில் வாழும்
    மக்களுக்குக் கல்வியை விடச் சிறந்தது ஒழுக்கம் என்ற சிறந்த
    பொருளைக் கொண்டுள்ளது. படிக்கும் போதே இதன் ஓசை
    தடையில்லாத இனிய ஓசை என்பதை உணர்வீர்கள். இவ்வாறு
    வருவதால் இது குறள்வெண் செந்துறை ஆகும்.

    4.1.2 குறள்தாழிசை

    (1)
    இது இரண்டு அடியாய் வரும்.
    (2)
    நான்குக்கு மேற்பட்ட பல சீர்களால் வரும்.
    (3)
    ஈற்றடி குறைந்து வரும்.

    (எ.கா)

    நண்ணு வார்வினை நைய நாடொறு நற்ற வர்க்கர
    சாய ஞானநற்
    கண்ணி னானடி யேயடை வார்கள் கற்றவரே.

    (நண்ணுவார் = நெருங்குவார்; நாடொறும் = நாள்தோறும்;
    நற்கண்ணினான்
    = அருகதேவன்)

    இது இரண்டடியால் ஆன பாடல். முதலடியில் 8 சீர்கள்
    உள்ளன. ஈற்றடி அதைவிடக் குறைந்து 5 சீர்கள் பெற்று
    வந்துள்ளது. ஆகவே இது குறள்தாழிசை ஆகும்.

    குறள் வெண்பா இரண்டடிகளால் ஆனது. அதன்
    இனங்களாகிய குறள்வெண் செந்துறையும் குறள் தாழிசையும்
    இரண்டடிகளால்
    ஆனவை. குறள் தாழிசை முதலடியை விட
    இரண்டாமடி குறுகியுள்ளது. இவ்வினங்கள் குறள்வெண்பாவின்
    இனங்களாக வகுக்கப்பட்ட காரணங்களை இப்போது புரிந்து
    கொண்டிருப்பீர்கள்.

    Tags   :

    புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 03:01:13(இந்திய நேரம்)