Primary tabs
 பல்லவர்கள் குடைவரை மரபினைத் தோற்றுவித்த சற்றுப்
 பின்னர்தான் பாண்டியர்கள் 
 குடைவரைகளைத் தொடங்கினர்.
 என்றாலும் எண்ணிக்கையில் பல்லவர்களைப் பாண்டியர்
 விஞ்சிவிட்டனர். பாண்டிய நாட்டில் பாண்டிய மன்னர் 
 மற்றும் 
 அரச பரம்பரையினரால் வெட்டுவிக்கப்பட்ட குடைவரைகள்
 சுமார் அறுபது உள்ளன. பாண்டிய நாட்டில் முதலில் தோன்றிய
 குடைவரை திருநெல்வேலி மாவட்டம் மலையடிக் குறிச்சி
 என்னும்
 ஊரில் உள்ளது. இது சேந்தன் செழியன் என்னும்
 பாண்டிய
 மன்னனால் தோற்றுவிக்கப் பட்டதாகும்.
 
 பாண்டியர்களின் குடைவரைகளில் பல்லவர்கள் படைத்தது
 போன்ற புராணக்கதை உணர்த்தும் சிற்பத் தொகுதிகள்
 இடம்பெறவில்லை. தனித்தனிச் சிற்பங்களே பெரும்பாலும்
 இடம்பெற்றுள்ளன. ஐந்து கடவுள் வணக்கமான “பஞ்சாயதனம்”
 எனும் அமைப்பில் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில்
 சிவன், திருமால், கணபதி, முருகன், துர்க்கை ஆகிய
 இறையுருவங்கள்     இடம்பெற்றுள்ளன.     ஆறு கடவுள்
 
 வணக்கமான “சண்மதம்” என்னும் மரபும் பின்பற்றப்பட்டு
 இறையுருவங்கள் படைக்கப்பட்டுள்ளன. இம்மரபில் சிவன்,
 திருமால், கணபதி,
 முருகன், துர்க்கை அல்லது சூரியன், பிரம்மா
 ஆகிய உருவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சில குடைவரைகளில்
 இவ்விரு மரபும் இணைந்த 
 நிலையில் இறையுருவங்கள்
 அமைக்கப்பட்டுள்ளன.
 
 இனிப் பாண்டியர்களின் குடைவரைகளில் சிறப்பான
 சிலவற்றைப் பற்றிக் காணலாம்
 
 
 ஒத்தக் கடை (ஒற்றைக் கடை) மதுரைக்கருகே அமைந்துள்ள ஊர் 
 ஆகும். அவ்வூரின் அருகே உள்ள ஆனை மலையில் இரு
 குடைவரைகள் உள்ளன. ஒன்று நரசிங்கப் பெருமாள் கோயில்.
 மற்றொன்று லாடன் கோயில் எனப்படும் முருகன் கோயில். 
 
 
இது கி.பி. 770 ஆம் ஆண்டு ஜடில பராந்தகநெடுஞ்சடையனது
காலத்தில் அவனுடைய அமைச்சராகிய மாறன் காரியால்
தொடக்கப்பட்டு இடையில் அவர் மறைந்தபடியால் அவர் தம்பி
மாறன் எயினனால் முடிக்கப்பட்டது. இதன்கண் கருவறையில்
நரசிம்மர் யோக நிலையில் அமர்ந்த கோலத்தில் யோகப்
பட்டையுடன் அழகுறக் காணப்படுகின்றார்.
இரு முழங்கால்களையும் இணைக்கும் துணியாலான இணைப்பு
யோகப் பட்டை எனப்படும், நான்கு கரங்களுடன்
படைக்கப்பட்டுள்ள இச்சிற்பத்தில் பின்னிரு கைகள் சங்கு
சக்கரத்துடனும் முன்னிரு கைகள் அபய வரத முத்திரையிலும்
வடிவமைக்கப் பட்டுள்ளன. இது ஐந்தடி உயரப் புடைப்புச்
சிற்பம் ஆகும்.
பராந்தக மாறன் சடையன் காலத்தைச் சேர்ந்த லாடன்
கோயில் எனப்படும் முருகன் கோயில் கருவறையில் முருகனும்
தேவயானையும் அமர்ந்த கோலத்தில் காட்சியளிக்கின்றனர். இதில்
முருகன் முப்புரி நூலும் போர்த் தெய்வங்கள் அணியும் சன்ன
வீரம் என்னும் அணிகலனும் அணிந்துள்ளான். தேவயானை
கையில் மலர்ச் செண்டு தாங்கியபடி சற்றுச் சாய்ந்த நிலையில்
அமர்ந்த கோலத்தில் காட்சியளிக்கிறாள். கருவறையின்
வெளிச்சுவரில் பூத கணங்கள் நேர்த்தியாகச் செதுக்கப்பட்டுள்ளன.
அவைகளை அடுத்து முருகனுடைய சேவல் கொடியும் வாகனமான
மயிலும் இடம் பெற்றுள்ளன. கோட்டங்களில் (சுவரில் மாட
அமைப்பில் குடையப்பட்ட இடம்) வலப்புறம் ஒரு பக்தனும்,
இடப்புறம் கோயிலைக் கட்டுவித்ததாகக் கருதப்படும்
பட்டக்குறிச்சி சோமாசியார் என்னும் அந்தணரும்,
காணப்படுகின்றனர். சோமாசியாருக்கருகே பாண்டிய மன்னன்
அவரை மண்டியிட்டு வணங்குவது போலச் செதுக்கப்பட்டுள்ளான்.

முருகன் கோயில்

 முருகனது அறுபடை வீடுகளுள் ஒன்றாகக் கருதப்படுவது
 திருப்பரங்குன்றம் முருகன் கோயில் 
 ஆகும். உண்மையிலேயே 
 சிவபெருமானுக்காக இது கி.பி. 773 ஆம் ஆண்டு ஜடில பராந்தக
 நெடுஞ்சடையனின் தளபதியான சாத்தன் கணபதியால்
 வெட்டப்பட்ட குடைவரைக் கோயிலாகும். பின்னர் இக்கோயில்
 முருகனுடைய 
 கோயிலாக மாறிவிட்டது.
 
 
 திருப்பரங்குன்றம் முருகன் கோயில்
 இக்குடைவரைக் கோயில் இரட்டைக் கருவறை அமைப்புடைய
 கோயிலாகும். இரட்டைக் கருவறை 
 என்பது எதிரெதிராக இரண்டு 
 கருவறைகள் கொண்ட அமைப்பு. ஒன்று சிவனுக்குரியது;
 மற்றொன்று திருமாலுக்குரியது. இத்தகைய 
 இரட்டைக் கருவறை
 அமைப்பு பல்லவர், முத்தரையர் போன்ற எந்த அரச மரபினரும்
 செய்யாத, பாண்டியர்கள் மட்டுமே உருவாக்கிய அமைப்பாகும்.
 திருச்சி கீழ்க்குடைவரையும், சொக்கம் பட்டிக் குடைவரையும்
 இரட்டைக் கருவறை அமைப்புடையவை ஆகும்.
 
 திருப்பரங்குன்றம் குடைவரையில் கிழக்கு நோக்கிய சிவனது
 கருவறையில் சிவலிங்கமும் 
 பின் சுவரில் சோமாஸ்கந்தர் புடைப்பு
 உருவமும் இடம் பெற்றுள்ளன. இக்கருவறைக்கு எதிரே மேற்கு
 நோக்கிய கருவறையில் திருமாலின் அமர்ந்த கோலச் சிற்பம்
 இடம்பெற்றுள்ளது. இவ்விரு கருவறைகளுக்கு இடையே உள்ள
 மண்டபத்தின் பின் சுவரில் மூன்று மாடக் குழிகள் வெட்டப்பட்டு
 அவற்றில் நடுவில் துர்க்கையும் வலப்பக்கம் முருகனும்
 இடப்பக்கம்
 கணபதியும் புடைப்பு உருவங்களாகச் 
 செதுக்கப்பட்டு
 உள்ளனர். ஐந்து 
 கடவுளர் இக்குடைவரையில் இடம்
 பெற்றுள்ளதால் ‘பஞ்சாயதன’ 
 மரபுப்படி இங்குச் சிற்பங்கள்
 அமைக்கப் பட்டுள்ளதாகக் கூறுவர். சிவனது கருவறை வெளிச்
 சுவரில் அமைந்துள்ள சிவனது சதுர
 தாண்டவச் சிற்பம் அரிய
 சிற்பமாகும். முயலகன் மீது அவர் 
 ஆடுகின்ற நடனத்தைப்
 பார்வதி தேவி நந்தியின் மீது சாய்ந்து
 கொண்டு பார்த்து
 மகிழ்கிறாள். திருமாலும், பிரம்மாவும்
 சிவ நடனத்தைக் காண்பது
 போன்றும், சிவ கணங்கள்
 இசைக் கருவிகளை மீட்டி இசையை
 எழுப்புவது போன்றும்
 அமைத்துள்ளான் சிற்பி.
 
 திருமாலது கருவறை வெளிச் சுவரில் நரசிம்மர், பூவராகர்,
 வைகுண்ட நாதர் ஆகியோரின் 
 புடைப்பு உருவங்கள்
 அமைந்துள்ளன.
 திருப்பரங்குன்றம் குடைவரையில் காணப்படும்
 அனைத்துச்
 சிற்பங்களும் கலையழகு மிக்கவையாகும்.
 
 சிவனது கருவறையில் இடம்பெறும் சோமாஸ்கந்தர்
 புடைப்பு உருவம் பல்லவர்களால் பல இடங்களில் 
 செதுக்கப்பட்ட
 சிற்பமாகும். ஆனால்     பாண்டிர்களின் குடைவரைகளில்
 திருப்பரங்குன்றம் குடைவரையில் மட்டுமே அச்சிற்பம்
 இடம்பெற்றுள்ளது. பிற குடைவரைகளில் இடம் 
 பெறவில்லை.
 
 காரைக்குடிக்கு அருகில் உள்ள  பிள்ளையார் பட்டிக்
 குடைவரைக்    
 கோயில்தான்      தமிழகத்தில் 
 தோன்றிய
 குடைவரைகளிலேயே 
 முதன்முதலாகத் தோன்றியது என்ற
 கருத்தும் உண்டு.     பல்லவர்கள் 
 குடைவரை மரபைத்
 தொடங்குவதற்கு முன்னர், கி.பி. ஐந்தாம் 
 நூற்றாண்டிலேயே 
 இக்குடைவரை தோற்றுவிக்கப் பட்டதென 
 இக்கோயிலில் 
 இடம்
 பெற்றுள்ள கல்வெட்டின் எழுத்து அமைப்பை
 வைத்துக் கூறுவர்.
 
 
 பிள்ளையார் பட்டிக் குடைவரைக் கோயில்
 இக்குடைவரை சிவன் கோயில்     ஆகும். பின்னர்
 இக்கோயில் பிள்ளையார் வழிபாட்டுக்கு உரிய கோயிலாக
 மாறிவிட்டது. குடைவரையின் கருவறையில் இன்றும் சிவலிங்கம்
 இடம்பெற்று உள்ளதைக் காணலாம். புடைப்பு உருவமாகப்
 பிள்ளையார்
 இடம்பெற்றுள்ள முக மண்டபத்தையே கருவறையாகக்
 கொண்டு 
 பிற்காலத்தில் கட்டுமானக் கோயில் மண்டபங்கள்
 கட்டப்பட்டுள்ளன. சுமார் 6 அடிக்கு மேல் அமர்ந்த
 திருக்கோலமாக, இரண்டு கரங்களுடனும் பூணூல் இன்றியும்
 எளிமையாகக் காணப்படும் 
 பிள்ளையார் பட்டிக் கற்பக விநாயகர்
 சிற்பமே பாண்டியரது குடைவரையில் இடம்பெறும் கணபதி
 சிற்பங்களில் பழமையானதாக இருக்க முடியும். ஆடை
 அணிகளின்
 தன்மை, முகப்பொலிவு, தலைக்கோலம், கையில்
 லிங்கத்தை
 ஏந்தியுள்ள சிறப்பு இவை இதன் பழமையைக் காட்டும்.
 முற்காலப்
 பாண்டியர்களின் 
 சிற்பப் படைப்புகளில் எளிமைக்கும்
 அழகுக்கும்
 சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குவது இச்சிற்பம்.
 
 திருமாலும் பிரம்மனும் சிவனின் அடி, முடிகளைக் காண
 முயன்று தோற்ற நிகழ்வைக் காட்டும் 
 இலிங்கோத்பவர் (அடிமுடி
 காணா அண்ணல்) புடைப்புச் சிற்பம், இவ்வகைச் சிற்பத்தின்
 முன்னோடியாகும். இதனை முதன் முதலில் படைத்த பெருமை
 பாண்டியர்களுக்கே உரியது.
 
 காரைக்குடிக்கு அருகே உள்ள குன்றக்குடியில் அமைந்துள்ள
 குடைவரையில் 
 கருடாந்திக விஷ்ணு, எண்கர நடராஜர்,
 இலிங்கோத்பவர், ஹரிஹரர், துர்க்கை மற்றும் துவார 
 பாலகர்
 ஆகிய புடைப்புச் சிற்பங்கள் அமைந்துள்ளன. இங்குச்
 சிவபெருமான் நடனமாடுவதைத் திருமால் கருடனின் மீது
 சாய்ந்தபடி கண்டு மகிழ்கிறார். இதனைத் திருப்பரங்குன்றம்
 குடைவரையில், சிவபெருமானது சதுர தாண்டவத்தை நந்தியின்
 மீது 
 சாய்ந்தபடி பார்வதி இரசிக்கும் காட்சிக்கு இணையாகக்
 கருதலாம். திருமாலின் கையில் ஒரு கண் காட்டப்பட்டுள்ளது.
 சிவனைத்
 திருமால் ஆயிரத்து எட்டுத் தாமரை மலர்களால்
 அர்ச்சிக்கும்
 போது சிவபெருமான் ஒருமலரை ஒளித்து வைத்தார்.
 அப்போது திருமால் தனது
 தாமரை போன்ற கண்ணைப் பிடுங்கி
 மலராக 
 அர்ச்சித்தாராம். அதனைப் பாராட்டிச் சிவபெருமான்
 திருமாலுக்குச் சக்கர 
 ஆயுதத்தை அளித்ததாகக் கூறப்படும்
 புராணத்தை ஒட்டி 
 இச்சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. இங்குத்
 திருமால் சாய்ந்திருக்கும் 
 கருடன் சிறு பையன் போன்று
 காட்டப்பட்டு இருப்பதும், அவர் 
 கைகள் இரண்டையும்
 கட்டிக்கொண்டு பணிந்து காணப்படுவதும் 
 பார்த்து ரசிக்க
 வேண்டிய ஒன்றாகும். 
 மேலும் இங்குத் துவார
 பாலகர்களில்
 ஒருவருக்குக் கொம்பு காட்டப்பட்டுள்ளது
 சிறப்புடையதாகும்.
 
 இக்குடைவரையும் சிற்பங்களும் கி.பி.எட்டு அல்லது ஒன்பதாம்
 நூற்றாண்டைச் 
 சார்ந்தவை ஆகும்.
 
 சிவனுக்கும் திருமாலுக்குமாக அமைக்கப்பட்ட இரட்டைக்
 கருவறை அமைப்புடைய பாண்டியரின் மற்றுமொரு குடைவரை
 இது. கீழ்க்குடைவரையில் உள்ள சிவன் கருவறையில் இலிங்கம்
 வைப்பதற்கான பள்ளம் மட்டுமே உண்டு. திருமால் கருவறையில்
 திருமாலின் நின்ற கோலம் செதுக்கப்பட்டுள்ளது. அதன்கீழ்
 இருவர் (அரசன் அரசி) மண்டியிட்டு வணங்குவது போலச்
 செதுக்கப்பட்டுள்ளனர். இச்சிற்பம் புடைப்புச் சிற்பமன்று;
 திருப்பரங்குன்றக் கருவறைகளில் இடம்பெறும் சிவலிங்கம் 
 மற்றும்
 வைகுண்ட நாதர் சிற்பம் போலத் தனித்த, அதே சமயம்
 
 குடைவரையுடன் சேர்ந்த சிற்பமாகும்.
 
 முக மண்டபத்தின் பின் சுவரில் கணபதி, பிரம்மா, முருகன்,
 சூரியன்,     துர்க்கை     ஆகியோருடைய சிற்பங்கள்
 புடைப்பு உருவங்களாகச் செதுக்கப் பட்டுள்ளன. இதில்
 துர்க்கையின் 
 அருகே ஒருவர் தன் தலையை அறுத்து
 “நவகண்டம்” கொடுக்க 
 முற்படுகிறார். இது மகாபலிபுரத்தில்
 உள்ள திரௌபதி இரத 
 நவகண்டச் சிற்பத்தோடு ஒத்துள்ளது.
 இக்குடைவரையில் சிவன், 
 விஷ்ணு கருவறைகளுக்கு முன்
 இரண்டிரண்டு துவார
 பாலகர் சிற்பங்களும், பிற இறையுருவங்கள்
 இடம்பெறும் இடத்தின் 
 இருமருங்கிலும் இரு துவார 
 பாலகரும்,
 குடைவரையின் முகப்பில்
 இருவரும் என எட்டுத் துவார பாலகர்
 சிற்பங்கள் இடம்பெற்றுள்ளன. 
 பாண்டியர் குடைவரைகளில்
 எட்டுத் துவார பாலகர் இடம்பெறும் 
 குடைவரை இது
 ஒன்றாகத்தான் 
 இருக்க முடியும்.
 
திருநெல்வேலி மாவட்டம் சொக்கம்பட்டி என்னும் ஊருக்கு
அருகில் உள்ள பேச்சிப்பாறையில் இக்குடைவரை
அமைந்துள்ளது. இக்குடைவரை இரட்டைக் கருவறை அமைப்பு
உடையதாகும். இதில் சிவன் கருவறையில் சிற்பங்கள் இல்லை.
திருமால் கருவறையில் சிற்பம் செதுக்குவதற்கான கல் மட்டும்
உள்ளது. அக்கல்லின் கீழ்ப்பகுதியில் அரசனும் அரசியும்
மண்டியிட்டு வணங்குவது போன்ற புடைப்புச் சிற்பம் செதுக்கப்
பட்டுள்ளது. ஆனால் திருமால் உருவம் செதுக்கப் படவில்லை.
மேலும் சொக்கம்பட்டி குடைவரை முக மண்டபத்தின் பின்
சுவரில் திருப்பரங்குன்றம் குடைவரையில் இருப்பது போல
மூன்று மாடக் குழிகள் வெட்டப் பட்டுள்ளன. ஆனால் அவற்றில்
சிற்ப உருவங்கள் செதுக்கப் படவில்லை. இவற்றையெல்லாம்
நோக்கும் பொழுது சொக்கம்பட்டி குடைவரை திருச்சி
கீழ்க்குடைவரை, திருப்பரங்குன்றம் குடைவரை ஆகிய இரு
குடைவரைகளின் இணைவாகத் தோன்றுகிறது. மேலும்
சொக்கம்பட்டி குடைவரையானது முழுமையாகச் செதுக்கப் படாத
குடைவரையாகும். இக்குடைவரையின் முன்பகுதியில் இரண்டு
ஆண் பெண் உருவங்கள் செதுக்கப் பட்டுள்ளன. இவர்கள்
இளவரசன், இளவரசி போலக் காணப்படுகின்றனர். ஆண் சிற்பம்
ஒரு கையில் வாள், மற்றொரு கையில் மலர் தாங்கியுள்ளது.
பெண் சிற்பம் மலர் ஏந்தி நிற்கிறது. இளவரசனின் மகுடத்தை
மூன்று தலைப் பாம்பு அழகு செய்கிறது. இவ்விரண்டு புடைப்புச்
சிற்பங்களும் மிக அழகாகச் செதுக்கப் பட்டுள்ளன. கருவறைகளின்
இருமருங்கிலும் துவார பாலகரது புடைப்பு உருவங்கள் அழகுடன்
திகழ்கின்றன. குடைவரையின் முகப்பில் பூத கணங்கள் பல
பல்வேறு விதமான நிலைகளில் சிறு சிறு உருவங்களாகப்
படைக்கப் பட்டுள்ளன.
பாண்டியர்களால் செதுக்கப்பட்ட குடைவரைகள் பல
இருப்பினும் கலையியல் நோக்கில் முக்கியத்துவம் பெற்ற
சிற்பங்கள் அமைந்த குடைவரைகளைப் பற்றி மட்டும் மேலே
கண்டோம். பாண்டியரது குடைவரை மரபு கி.பி. ஒன்பதாம்
நூற்றாண்டுடன் முடிவடைந்து விட்டது. அதன்பின் அவர்கள்
கட்டுமானக் கோயில்களில் அதிகக் கவனம் செலுத்தினர்.