தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

3.3 முக்கூடற்பள்ளு

3.3 முக்கூடற் பள்ளு

தமிழ்நாட்டில் வளமான ஒரு பகுதி திருநெல்வேலி
மாவட்டம். திருநெல்வேலியை 'நெல்லை' என்றும் கூறுவர்.
இதோ தாமிரபரணி ஆற்றைக் காணுங்கள். திருநெல்வேலிக்கு
வடகிழக்கே சித்திரா நதி, கோதண்டராம நதி ஆகிய இரு
நதிகளும் தாமிரபரணி ஆற்றில் கலக்கும் இடம் முக்கூடல்
என்று அழைக்கப்பட்டது. இவ்வூரில் எழுந்து அருளி
இருக்கும் அழகர் என்னும் தெய்வத்தின் மீது பாடப்பட்டதே
முக்கூடற் பள்ளு ஆகும்.

நண்பர்களே! இதுவரை பள்ளு இலக்கியம் பற்றிய
பொதுவான செய்திகளைப் பார்த்தோம். இனி முக்கூடற் பள்ளு
பற்றிச் சிறப்பு நிலையில் செய்திகளை அறிய இருக்கிறோம்.

  • பெயர்க் காரணம்



  • முக்கூடற் பள்ளு என்பது இடத்தால் பெற்ற பெயர்
    ஆகும். முக்கூடல் இன்று சீவலப்பேரி எனக் குறிக்கப்படுகிறது.
    பாண்டியன் மாறவர்மன் ஸ்ரீீவல்லபன் கி.பி. 12- ஆம்
    நூற்றாண்டில் தன் பெயரில் ஓர் ஏரி கட்டினான். அது
    ஸ்ரீவல்லபன் ஏரி எனப்பெயர் பெற்றது. இதனால் இவ்வூர்
    சீவலப்பேரி என வழங்கப்படுகிறது. இங்கு மூவேந்தர்
    கல்வெட்டுக்களுடன் கூடிய தொன்மையான திருமால் கோயில்
    உள்ளது. இங்குக் கோயில் கொண்டிருக்கும் திருமாலை
    'அழகர்' என்றும் 'செண்டு அலங்காரர்' என்றும் முக்கூடற்
    பள்ளு புகழ்ந்து போற்றுகின்றது.

  • காலம்



  • இந்நூலின் காலம் கி.பி. 17-ஆம் நூற்றாண்டு எனலாம்.
    காவை வடமலைப் பிள்ளையன், ஆறை அழகப்ப முதலியார்,
    திருமலைக் கொழுந்துப் பிள்ளையன் ஆகிய செல்வர்கள்
    முக்கூடற் பள்ளில் பாராட்டப்பட்டுள்ளனர். இவர்களின் காலம்
    கி.பி. 1676 முதல் கி.பி. 1682 வரை ஆகும். எனவே முக்கூடற்
    பள்ளுவின் காலத்தை 17-ஆம் நூற்றாண்டு என்று
    கணக்கிடலாம்.

  • ஆசிரியர்



  • இந்நூலின் ஆசிரியர் பெயரை அறிய முடியவில்லை.
    புலவர் பெயரை அறிய முடியாவிட்டாலும்     அப்புலவர்
    இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் ஆகிய முத்தமிழையும்
    நன்கறிந்த கவிஞர் என்பதைப் பாடல்கள் புலப்படுத்தி
    உள்ளன.

  • நூலின் தன்மை



  • பாத்திரங்கள் நாடகத் தன்மையுடன் அறிமுகப்படுத்தப்
    படுகின்றன.     மேலும் உரையாடல் வழியே கதை
    நிகழ்த்தப்படுகின்றது. இந்நூல் இயல், இசை, நாடகம் கலந்த
    முத்தமிழ் நூல் என்று கூறுவது மிகையாகாது.

    சிறந்த சந்த நயமும் நாட்டுப்புறவியல் கூறுகளும் வளமான
    கற்பனைகளும், உவமைகளும் நிறைந்து முக்கூடற் பள்ளு
    விளங்குகிறது. நண்பர்களே! இந்நூலின் சிறப்புகள் பற்றி இனி
    அறிய இருக்கிறீர்கள்.

    Tags   :

    புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 09:06:44(இந்திய நேரம்)