தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

5.3 சதகத்தின் பாடுபொருள்

5.3 சதகத்தின் பாடுபொருள்

இந்த நூலில் உள்ள பாடுபொருளைக் கருத்து
அடிப்படையில் ஏழாகப் பிரிக்க இயலும். கீழேயுள்ள
வரைபடம் அதைச் சுட்டுவதைப் பாருங்கள்.

C01245d3.gif (6821 bytes)


5.3.1 இல்லறத்தின் சிறப்பு

இல்லறம் பற்றிய செய்திகளை இச்சதகம் விவரித்துள்ளது.
கற்பின் மேன்மை, புதல்வர் பெருமை, விருந்தோம்பல் முதலிய
இல்லற நெறிகள் போற்றப்பட்டுள்ளன.

தண்டலையார் சோழவள நாட்டில் மௌனமாய்ப்
பெருந்தவம் செய்த சௌபரி என்ற முனிவர், பற்றற்ற
நிலையை விட்டு நீங்கி மீளவும் இல்லறத்தை விரும்பி
வாழ்ந்தார்; திருவள்ளுவர் போன்று மனைவி வாசுகியுடன்
இல்லற வாழ்வை நடத்தி நின்றார். அதனால் இல்லற வாழ்வே
சிறப்பானது ஆகும். துறவற வாழ்வும் பிறர் பழித்தல்
இல்லாயின் அழகியது ஆகும். இதனைப்

புல்லறிவுக்கு எட்டாத தண்டலையார் வளம்தழைத்த
பொன்னி நாட்டில்
சொல்லற மாதவம்புரியும் சௌபரியும் துறவறத்தைத்
துறந்து மீண்டான்
நல்லறமாம் வள்ளுவர்போல் குடிவாழ்க்கை
மனைவியுடன்
நடத்தி நின்றால்
இல்லறமே பெரியதாகும் துறவறமும் பழிப்பின்றேல்
எழிலது ஆமே

(தண்.சத. 5)

(புல்லறிவு = அற்ப அறிவு, பொன்னி நாடு = சோழநாடு,
சௌபரி
= ஒரு முனிவர்)

என்ற பாடல் விவரிக்கும். சௌபரி முனிவர் மீன்களின்
வாழ்க்கையைக் கண்டு மீண்டும் இல்லறத்தை ஏற்றுள்ளார்.
துறவறத்திலிருந்து இல்லறம் மேற்கொண்டதால் இல்லறமே
சிறப்பானதாகும் என்று புலவர் கூறியுள்ளார். இல்லறம் புரியும்
மகளிர் கற்புடன் திகழவேண்டும் என்பதைப் புலவர்
வலியுறுத்திக் கூறியுள்ளார். இதற்காகக் கற்புடை மகளிரின்
புராணக் கதைகளை மேற்கோள்களாகக் காட்டியுள்ளார்.

முக்கண்ணராகிய சிவன் உறையும் தண்டலையார் நாட்டில்
கற்புடைய மகளிரின் பெருமையைச் சொல்ல முடியுமோ?
நெருப்பை ஒத்தவளாகிய சீதை அந்நெருப்பையே குளிரச்
செய்தாள். தன்னிடம் தகாத வார்த்தை பேசிய வேடனை
எரித்தவள் தமயந்தி. மும்மூர்த்திகளைக் குழந்தைகளாக்கிப்
பால் கொடுத்தவள் அநசூயை. சூரியன் உதிப்பதைத்
தடுத்தவள் நளாயினி. முனிவர்களின் சாபம் கற்புடை மகளிரை
அணுகாது என்பதைக் ‘’கொக்கென்று நினைத்தனையோ
கொங்கணவா’’ என்று கூறி மெய்ப்பித்தவள் ஒரு பெண்.
இதனைப் பின்வரும் பாடல் விளக்கும்,

முக்கணர் தண்டலைநாட்டில் கற்புடை மங்கையர்
மகிமை
மொழியப் போமோ
ஒக்கும்எரி குளிரவைத்தாள் ஒருத்தி வில்வேடனை
எரித்தாள்
ஒருத்தி மூவர்
பக்கம்உற அமுதுஅளித்தாள் ஒருத்தி எழுபரி
தடுத்தாள்
ஒருத்தி பண்டு
கொக்கெனவே நினைத்தனையோ கொங்கணவா
என்றே ஒருத்தி
கூறினாளே

(தண்.சத. 6)

(முக்கணர் = சிவன், எழுபரி = சூரியன், கொங்கணவர் =
முனிவர்)

இவ்வாறாகக் கற்புடை மகளிரின் வாழ்க்கை நிகழ்ச்சிகளைக்
கூறுவதன் மூலம் இல்லற மகளிர்க்குக் கற்பு நெறி
வலியுறுத்தப்பட்டுள்ளதை அறிய முடிகின்றது.

5.3.2 நன்மக்கட்பேறு

இல்லறத்தின் பெரும்பயனாக நன்மக்கள் பேறு
சுட்டப்பட்டுள்ளது. பொற்சபையில் நடம் புரியும் தண்டலை
ஈசனே! நன்மை பயக்கும் பிள்ளை ஒன்று பெற்றால் அக்குலம்
முழுவதும் நலம் பெறும். அவ்வாறு அல்லாமல் அறிவு
இல்லாத பிள்ளை ஒரு நூறு பெற்றாலும் நலமாவது உண்டோ?
ஆண்டுதோறும் பன்றி பல குட்டி போட்டாலும் என்ன பயன்
உண்டாகும்? யானை கன்று ஒன்று ஈன்றதனால் சிறந்த பயன்
உண்டாகும்.

ஒரு பிள்ளை பெற்றாலும் நல்ல பிள்ளையாகப் பெறுவதே
மக்கட்பேறு என்று புலவர் வலியுறுத்துகிறார். பயன் இல்லாத
பலரைப் பெறுவது வீண் என்பதைப் பன்றி, யானை பழமொழி
மூலம் விளக்கி உள்ளார்.

5.3.3 விருந்தோம்பற் பண்பு

இல்லறத்தாரின் தலையாய கடமைகளில் ஒன்றாகிய
விருந்தோம்பலைப் புலவர் வலியுறுத்திக் கூறியுள்ளார்.
தண்டலையார் வளநாட்டில் இல்வாழ்க்கை நடத்துவோர்
நல்லோர் ஆவார். விருந்தினர் ஒருவர் ஆகிலும் இல்லாமல்
உண்ட பகல், பகல் ஆகுமோ என்று இல்லறத்தாரை
வினவுகின்றார். சுற்றத்தினராய் வந்த விருந்தினர்க்கு மரியாதை
செய்து அனுப்பி மேலும் இன்னும் பெரியோர் எங்கே என்று
வருவிருந்தினரை எதிர்பார்த்து     உண்பதே சிறந்த
இல்லறமாகும். விருந்து இல்லாது உண்ணுகின்ற உணவு
மருந்தாகும். இதனைத்

திருஇருந்த தண்டலையார் வளநாட்டில்
இல்வாழ்க்கை
செலுத்தும் நல்லோர்
ஒருவிருந்தாகிலும் இன்றி உண்டபகல் பகலாமோ
உறவாய் வந்த
பெருவிருந்துக்கு உபசாரம் செய்துஅனுப்பி
இன்னம்எங்கே
பெரியோர் என்று
வருவிருந்தோடு உண்பதல்லால் விருந்தில்லாது
உணுஞ்சோறு
மருந்து தானே

(தண்.சத. 9)

என்று புலவர் விவரித்துள்ளார்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 09:09:08(இந்திய நேரம்)