தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

6.1 அந்தாதி

6.1 அந்தாதி

அந்தாதி என்பது அந்தம், ஆதி ஆகிய இரு சொற்களால்
ஆன வடமொழித் தொடர் ஆகும். இத்தொடரில் உள்ள
அந்தம் என்பது 'முடிவு' என்றும் ஆதி என்பது 'முதல்'
என்றும் பொருள்படும். முடிவை முதலாகப் பெற்று அமைவது
அந்தாதி ஆகும். ஒரு செய்யுளின் இறுதியில் உள்ள
எழுத்தோ, அசையோ, சீரோ, அடியோ அடுத்து வரும்
செய்யுளின் முதலாக அமையும்படி பாடுவது அந்தாதி ஆகும்.
அந்தாதி குறைந்தது இரண்டு அடிகளுக்கும் அல்லது இரண்டு
செய்யுட்களுக்கும் இடையே காணப்படுவது. இரண்டு
அடிகளுக்கு இடையே அமைவதை அந்தாதித் தொடை
என்றும் இரண்டு செய்யுட்களுக்கு இடையே அமைவதை
அந்தாதிச் செய்யுள் என்றும் கூறுவர். தமிழ் இலக்கியப்
பரப்பில் அந்தாதித் தொடை அமைப்பே அந்தாதிச்
செய்யுள்
அமைப்பிற்கு வழி காட்டியது எனலாம். அந்தாதி
அமைப்பு, மனப்பாடம் செய்வதற்கும் எளிதாக நினைவு
கொள்வதற்கும் ஏற்றதாக அமைந்திருப்பதால் புலவர்களால்
அதிக அளவில் பாராட்டப்பட்டுள்ளது.

6.1.1 அந்தாதியின் தோற்றம்

சங்க இலக்கியங்களிலேயே அந்தாதி அமைப்பு உண்டு.
பதிற்றுப்பத்து நான்காம் பத்தினை இதற்குச் சான்றாகக்
கூறலாம். பல சிற்றிலக்கியங்களின் தோற்றத்திற்குக் காரணராக
விளங்கிய பக்தி இயக்கப் புலவர்களே அந்தாதி
இலக்கியத்தின் தோற்றத்திற்கும் காரணம் ஆகி உள்ளனர்.
இன்று கிடைக்கும் அந்தாதி இலக்கியங்களுள் காலத்தால்
முற்பட்டது, காரைக்கால் அம்மையார் பாடிய 'அற்புதத்
திருவந்தாதி'
ஆகும். பதினோராம் திருமுறையை 'அந்தாதி
மாலை' என்று கூறும் வழக்கு உண்டு. அவ்வாறு கூறுவதற்கு
அத்திருமுறையில்     எட்டு அந்தாதி இலக்கியங்கள்
அமைந்திருப்பது காரணமாகின்றது.


6.1.2 அந்தாதி முறைப்பாடல்கள்

மாணிக்கவாசகர் திருவாசகத்தில் திருச்சதகம், நீத்தல்
விண்ணப்பம், கோயில் மூத்த திருப்பதிகம். கோயில்
திருப்பதிகம், குழைத்த பத்து, யாத்திரைப் பத்து ஆகிய
பகுதிகளை அந்தாதி முறையில் பாடியுள்ளார். திருமூலர்,
திருமந்திரத்தில்
பல பாடல்களை     அந்தாதியாக
அமைத்துள்ளார். நம்மாழ்வார் பாடிய திருவாய்மொழி
ஆயிரம்     பாடல்களும்     அந்தாதித் தொடையால்
அமைந்துள்ளன.

சிற்றிலக்கிய     வகைகளில் இரட்டைமணிமாலை,
அட்டமங்கலம், நவமணிமாலை, ஒருபா ஒருபது, இருபா
இருபது, மும்மணிக்கோவை, மும்மணி மாலை, நான்மணி
மாலை, கலம்பகம்
ஆகியன அந்தாதித்து முடியும்
நிலையியைத் தம் இலக்கணமாகக் கொண்டு உள்ளன.

6.1.3 புகழ்பெற்ற அந்தாதிகள்

புகழ்பெற்ற அந்தாதி நூல்கள் சிலவற்றை இங்கே தெரிந்து
கொள்ளுங்கள் நண்பர்களே!

1)
திருக்கருவைப் பதிற்றுப்பத்து அந்தாதி

இந்நூலை இயற்றியவர் அதிவீரராம பாண்டியர்
ஆவார். கரிவலம் வந்த நல்லூரில் எழுந்தருளி
இருக்கும் சிவபெருமான் மீது இந்த அந்தாதி பாடப்
பெற்றுள்ளது.
2)
திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி

இந்நூலைத் துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள்
இயற்றியுள்ளார். திருச்செந்தூர் முருகனின் திருவருள்
இந்நூலுள் புகழப்பட்டுள்ளது.
3)
சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி

இந்த இரண்டு நூல்களையும் கம்பர் இயற்றியதாக
அறிய முடிகின்றது.     திருமால் அடியவராகிய
சடகோபரைத் தலைவராகக் கொண்டு சடகோபர்
அந்தாதி அமைந்துள்ளது. சடகோபரே நம்மாழ்வார்
என்று அழைக்கப்பெற்றார். கல்விக் கடவுள் கலைமகள்
(சரஸ்வதி) மேல் பாடப்பெற்ற சரஸ்வதி அந்தாதி.
4)
திருவரங்கத்து அந்தாதி

மணவாள தாசர் என்று அழைக்கப்படும் பிள்ளைப்
பெருமாள் அய்யங்கார் திருவரங்கத்து அந்தாதியை
இயற்றி உள்ளார். திருவரங்க நாதனின் அருட்செயல்கள்
இந்நூலில் இடம் பெற்றுள்ளன.

6.1.4 அந்தாதி வகைகள

பாட்டியல் நூல்கள் அந்தாதியின் வகைகளைச் சுட்டி
உள்ளன. அந்தாதி இலக்கியங்களை அந்தாதி எனும் பெயரால்
பாட்டியல் நூலார் குறிப்பிடவில்லை. அந்தாதி வகைகளின்
பெயரைத்தான் குறிப்பிட்டுள்ளனர். பன்னிரு பாட்டியல்
இதனை அந்தாதித் தொகை என்று குறிப்பிட்டுள்ளது.
சிற்றிலக்கியங்களுள் அந்தாதி வகைகளாக ஒலியந்தாதி,
பதிற்றுப் பத்தந்தாதி, நூற்றந்தாதி, கலியந்தாதி ஆகியன
தென்படுகின்றன. இவை அல்லாமல் கலித்துறை அந்தாதி,
கலியந்தாதி, வெண்பா அந்தாதி, ஆகியவற்றிற்கும்
பாட்டியல்கள் இலக்கணம் வகுத்துள்ளன. இவை தவிர வேறு
சில அந்தாதி வகைகளும் காணப்படுவதாகக்
குறிப்பிடுகின்றனர்.

c01246d1.gif (4238 bytes)
c01246d2.gif (3801 bytes)

பாட்டியல் நூல்கள் காட்டிய அந்தாதிகள் தவிர மேலும் பல
புதிய வகை அந்தாதிகள் காணப்படுகின்றன. செய்யுள் வகை,
பாடல்களின் எண்ணிக்கை, அவற்றில் அமைந்த அணி
நலன்கள், பாடல்களை உச்சரிக்கும் செயல் முறைகள்
ஆகியவற்றின் அடிப்படையில்     அவை பல்வேறு
வகையினவாகப் பெருகி உள்ளன.

c01246d3.gif (3740 bytes)

6.1.5 அந்தாதியின் பொருள் வகைப்பாடு

அந்தாதி இலக்கியங்கள் தலங்கள், தல இறைவன்,
சான்றோர்கள், தொண்டர்கள், புலவர்கள், வள்ளல்கள்,
முதன்மைபெற்ற     நிகழ்ச்சிகள் முதலியன     குறித்து
அமைந்தனவாக உள்ளன. பக்திப் பெருக்கினை உணர்த்துவதே
பெரும்பான்மை அந்தாதிகளின் குறிக்கோள் எனலாம். சில
அந்தாதிகள் அகத்திணைத் துறைகளைக் கொண்டும்
விளங்குகின்றன.     சான்றுக்குத்      திருவிடைமருதூர்
அந்தாதி
யைக் கூறலாம். திருக்கருவைப் பதிற்றுப்பத்து
அந்தாதி
யினைக் குட்டித் திருவாசகம் என்று கூறுவர்.
கயிலைபாதி காளத்திபாதி அந்தாதி
யில் இரு தலங்களின்
மேன்மை போற்றப்பட்டுள்ளது. அம்மை பாதி அப்பன்
பாதி அந்தாதி
யில் பாட்டுடைத் தலைவர் இருவர் ஆவார்.
தண்டபாணி சுவாமிகளின் குருநாதன் அந்தாதியில்
'அருளுக்கு ஏங்குதல்' எனும் ஒரு பொருண்மையே எல்லாப்
பாடல்களிலும் காணப்படுகின்றது.

1.
அந்தாதி என்றால் என்ன? அதன் பொருளை
விளக்குக.
2.
முதல் அந்தாதியாகக் கருதப்படும் அந்தாதி எது?
3.
அந்தாதியாக அமையும் சிற்றிலக்கிய வகைகள்
நான்கினைச் சுட்டுக.
4.
புகழ்பெற்ற அந்தாதி நூல்களுள் நான்கினைச் சுட்டுக.
5.
அந்தாதியின் பொருள் வகைப்பாட்டைக் கூறுக.



Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 09:10:17(இந்திய நேரம்)