Primary tabs
பால் என்றால் பிரிவு என்று பொருள். உலகில் உள்ள பொருள்கள் அனைத்தையும் திணை அடிப்படையில் இரு பிரிவுகளாகப் பிரிக்கலாம். அவை,
1) உயர்திணைப் பால் 2) அஃறிணைப் பால்
என்பவை ஆகும்.
2.2.1 உயர்திணைப் பால்
உயர்திணைப் பிரிவினரைக் குறிப்பது உயர்திணைப்பால் எனப்படும். உயர்திணைப் பாலாக மூன்று இடம்பெற்றுள்ளன. அவை,
1) ஆண் பால் 2) பெண் பால் 3) பலர் பால்
ஆண்பால்
உயர்திணைப் பொருள்களில் ஆண்களைக் குறிப்பது ஆண்பால் எனப்படும்.
(எ.கா) வளவன், செழியன்
பெண்பால்
உயர்திணைப் பொருள்களில் பெண்களைக் குறி்ப்பது பெண்பால் எனப்படும்.
(எ.கா) யாழினி, மாலினி
பலர்பால்
(எ.கா) மக்கள், ஆண்கள், பெண்கள்
இந்த எடுத்துக்காட்டுகளில் மக்கள் என்னும் சொல் ஆண், பெண்களில் பலரைக் குறிக்கிறது.
ஆண்கள் என்னும் சொல் ஆண்களில் பலரைக் குறி்க்கிறது.
பெண்கள் என்னும் சொல் பெண்களில் பலரைக் குறிக்கிறது.
2.2.2 அஃறிணைப் பால்
அஃறிணைப் பொருள்களைக் குறிப்பது அஃறிணைப் பால் எனப்படும். அவை,
1) ஒன்றன் பால் 2) பலவின் பால்
ஒன்றன் பால்
அஃறிணைப் பொருள்களில் ஏதேனும் ஒன்றைக் குறிப்பது ஒன்றன் பால் எனப்படும்.
(எ.கா) கல், மரம்
பலவின் பால்
அஃறிணைப் பொருள்களில் பலவற்றைக் குறிப்பது பலவின்பால் எனப்படும்.
(எ.கா) அவை, வீடுகள், மாடுகள்
உயர்திணைப் பால், அஃறிணைப் பால் ஆகிய இரண்டையும் சேர்த்துப் பால்களின் எண்ணிக்கை ஐந்து.
1) ஆண்பால் 2) பெண்பால் 3) பலர்பால் 4) ஒன்றன் பால் 5) பலவின் பால்
என்பவை ஆகும்.
2.2.3 மதிப்புப்பன்மை
பெரியோரில் ஒருவரை அவன் என்று கூறுதல் பொருந்தாது என்று அவர் என்று பலர்பாலில் குறிப்பிடுவது உண்டு. இதை மதிப்புப்பன்மை என்று குறிப்பிடுகிறோம்.
(எ.கா) ஆசிரியர் வந்தார்
ஓர் ஆசிரியனை, மதிப்புக் கருதி ஆசிரியர் என்று பலர்பாலில் குறிப்பிடுகிறோம்.
பல ஆசிரியரைப் பலர்பாலில் குறிப்பிடுவதற்கு ஆசிரியர்கள் என்று தற்காலத்தில் குறிப்பிடுவதும் உண்டு.
ஆண் பெண் பலர் என முப்பாற்று உயர்திணை
(நன்னூல் : 262)
ஆண்பால், பெண்பால், பலர்பால் என்னும் மூன்றும் உயர்திணைக்கு உரியவை என்னும் நூற்பாவும்,
ஒன்றே பல என்று இருபாற்று அஃறிணை
(நன்னூல் : 263)
ஒன்றன் பால், பலவின் பால் என்னும் இரண்டும் அஃறிணைக்கு உரியவை என்னும் நூற்பாவும் ஐந்து பால்கள் பற்றிய செய்தியைத் தெரிவிக்கின்றன.
2.2.4 பேடியும் அலியும்
ஆண்களில் ஆண் தன்மையை விட்டுப் பெண்தன்மையை விரும்புபவர் பேடி என்று குறிப்பிடுவார்கள். பெண்களில் பெண் தன்மையை விட்டு ஆண்தன்மையை விரும்புவோரை அலி என்று குறிப்பிடுவார்கள். இவ்விரு வகையினரையும் குறிக்கும் பொதுச்சொல் 'பேடு' என்பது.
ஆண் தன்மை குறைந்து பேடி என்று குறிப்பிடப்பட்டவர்கள் பெண்பால் என்னும் பிரிவில் அடங்குவர். பெண் தன்மை குறைந்து ஆண் தன்மை மிகுந்து அலி என்று குறிப்பிடப்பட்டவர்கள் ஆண்பால் என்னும் பிரிவில் அடங்குவர்.
ஆண்பால், பெண்பால் என்னும் இரண்டு பால்களும் உயர்திணைக்கு உரியன. இந்த உயர்திணைப்பாலில் குறிப்பிடாமல் பேடி, அலி ஆகியோரை அஃறிணையாகக் குறிப்பிடுவதும் உண்டு.
இக்காலத்தில் இருவகைப் பேடுகளையும் 'அலி' எனும் சொல்லால் குறிக்கின்றனர். (எ.டு)
பெண்மை விட்டு ஆண் அவாவுவ பேடு ஆண்பால்
ஆண்மை விட்டு அல்லது
அவாவுவ பெண்பால்
இருமையும் அஃறிணை அன்னவும் ஆகும்
(நன்னூல் : 264)
என்னும் நூற்பா, பேடி, அலி ஆகியோருக்கு உரிய பால்களைத் தெரிவிக்கிறது.
2.2.5 இருபால் பொதுப்பெயர்
ஆண்பால், பெண்பால் ஆகிய இரண்டுக்கும் பொதுவாய் வரும் பெயர்கள் இருபால் பொதுப் பெயர் எனப்படும்.
வில்லி, பேதை, ஊமை, கவிஞர் முதலான பெயர்கள் இரண்டு பாலுக்கும் பொதுவாய் வரும்.
(எ.கா) அவன் வில்லி அவள் வில்லி அவன் பேதை அவள் பேதை அவன் ஊமை அவள் ஊமை அவன் கவிஞர் அவள் கவிஞர்
2.2.6 பால் பகா அஃறிணைப் பெயர்கள்
ஒன்றன் பால், பலவின் பால் என்னும் இரண்டும் அஃறிணைக்கு உரிய பால்கள் என்று முன்பே படித்தோம். சில அஃறிணைப் பெயர்களை ஒன்றன் பாலா, பலவின் பாலா என்று அறிய இயலாது. அவற்றுடன் சேர்ந்துவரும் வினைச்சொல்லைக் கொண்டே அவை ஒன்றன் பாலா, பலவின் பாலா என்று அறிய முடியும்.
பறவை, மரம், பனை முதலியவை பால்பகா அஃறிணைப் பெயர்கள் ஆகும்.
(எ.கா)
பறவை வந்தது பறவை வந்தன
மரம் வளர்ந்தது மரம் வளர்ந்தன
பனை நின்றது பனை நின்றன.
மேலே குறிப்பிடப்பட்ட பெயர்களை, ஒருமைக்கும் பன்மைக்கும் ஒன்றாகவே பயன்படுத்துகிறோம்.
தற்காலத்தில் பேசும்போதும் எழுதும்போதும் மேலே காணும் பெயர்களைப் பன்மையில் குறிப்பிடும்போது பன்மைக்குரிய `கள்’ விகுதி சேர்த்துப் பயன்படுத்துவதும் உண்டு.
பயில்முறைப் பயிற்சி - 2
பின்வரும் பெயர்களில் ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால் பெயர்களைத் தனித்தனியே பிரித்து எழுதுக.
திருமால், சரசுவதி, பிரம்மன், சிவன், இலக்குமி, கடவுளர், மக்கள், ஆண்கள், பறவைகள், புறா, பருந்து, எருது, நிலங்கள், தென்னை, பனை, வேம்பு, கண்ணன், வளவன், இயக்கி, இயக்குநர், கிளி, ஆந்தை, மலர்கள், செடிகள், விலங்குகள், சிங்கம், மலை, ஆறு, கடல், ெE்சி, மாமல்லபுரம், கதிர்காமம்,