Primary tabs
 இரா.பி.சேதுப்பிள்ளையின் மேடைப் பேச்சு ஒவ்வொன்றும்
 மேன்மை மிகு உரைநடைப் படைப்பாக அமைந்தது. அவரின்
 அடுக்குமொழித் தமிழுக்கு அகிலம் எங்கும் 
 அன்பான
 வரவேற்பும், ஆர்வம் மிகுந்த பாராட்டும்
 கிடைத்தன.
 
 
 டாக்டர். இரா.பி. சேதுப்பிள்ளை அவர்களின் 
 உரைநடை
 நூல்கள் இருபதுக்கும்     மேற்பட்ட 
 எண்ணிக்கையில்
 அடங்குவன. அவற்றில் சில நூல்களின் பெயர்களை இங்குக்
 காண்பது பொருத்தமாக இருக்கும். அவை பின்வருமாறு :
 
 
 சேதுப்பிள்ளையின் நூல்களுள் பலவும் அவர் 
 தமிழக
 வானொலி நிலையங்களில் ஆற்றிய இலக்கியப் பொழிவுகளின்
 தொகுப்புக்களாகும். இன்னும் சில நூல்கள் அவர் தமிழகத்தின்
 பல்வேறு இலக்கிய அமைப்புகளில் ஆற்றிய 
 இலக்கியச்
 சொற்பொழிவுகளின் தொகுப்புக்களாக அமைந்தவை. எனவே
 அவரது உரைநடை மேடைப் பேச்சின் 
 இயல்பினில்
 அமைந்ததாக உள்ளது. ஆதலின் அவரது எழுத்தும்பேச்சும்
 வேறுபாடின்றி அமைந்துள்ளன. இலக்கிய 
 அமைப்புகளில்
 அவர் ஆற்றிய எழுச்சி மிகுந்த பொழிவுகளே 
 இனிய
 உரைநடையாக வடிவம் பெற்றன.
 
 
 இரா.பி. சேதுப்பிள்ளையின் படைப்புகள் ஒவ்வொன்றும்
 பைந்தமிழின் அழகைப்     பலருக்கும் 
 எடுத்துரைக்கும்
 தன்மையன. எனவே ஒவ்வொரு படைப்பும் உயர்ந்த பரிசுக்கு
 உரியதாகும். சேதுப்பிள்ளையின் படைப்புகளைத் தமிழகம்
 விரும்பி ஏற்றது. படித்தவர்கள் பாராட்டினர். இனிமைத் தமிழை
 விரும்பியோர்க்கு அவரது     நூல்கள் 
 இன்னமுதாய்த்
 தித்தித்தன. எனினும் அரசு அளிக்கும் விருதும் வேண்டிய
 ஒன்று அல்லவா! சேதுப்பிள்ளையின் ‘தமிழின்பம்’ என்னும்
 நூலுக்கு இந்திய அரசு அளிக்கும் சாகித்ய அக்காதமியின்
 பரிசுவழங்கப்பட்டது. இது இரா.பி. சேதுப்பிள்ளையின் தமிழ்
 உரைநடைக்குக் கிடைத்த தக்கதொரு 
 பெருமையாகக்
 கொள்ளலாம்.
 
 
 சேதுப்பிள்ளையின்  உரையின் 
 சிறப்பைத் தமிழகம்
 நன்கறிந்ததும் அவருக்குப் பாராட்டுகள் குவிந்தன. இலக்கிய
 அமைப்புகளும் அறிஞர் பெருமக்களும் சேதுப்பிள்ளையின்
 தமிழுக்குத் தங்கள் பாராட்டுகளைத் தெரிவித்த வண்ணம்
 இருந்தனர்.
 
 கவியோகி எனப் போற்றப்படும் சுத்தானந்த 
 பாரதியார்
 இரா.பி. சேதுப்பிள்ளையைச் “செந்தமிழுக்குச் சேதுப்பிள்ளை”
 என்று அழைத்துப் பாராட்டினார். 
 சேதுப்பிள்ளையின்
 பேச்சாற்றலைப் பாராட்டித் தருமபுர ஆதீனம் ‘சொல்லின்
 செல்வர்’ என்னும் விருது வழங்கியது. சென்னைப் பல்கலைக்
 கழகம் சேதுப்பிள்ளைக்கு ‘டாக்டர்’ பட்டம் வழங்கியது.
 
 
 ‘செந்தமிழைச் செழுந்தமிழாக்க வேண்டும்’ 
 என்ற தம்
 முயற்சியால் உரைநடைக்குப் புதுப் 
 பொலிவு தந்த
 சேதுப்பிள்ளைக்கு வழங்கப்பட்ட பட்டங்களும் விருதுகளும்
 ஏற்புடையவை ஆகும். மாணவர்களே ! இந்தக் கருத்தை
 நீங்களும் ஒப்புவீர்கள் அல்லவா?
 
 அடுத்ததாக நாம்     
 சேதுப்பிள்ளை உரைநடையில்
 காணப்படும் இலக்கிய நயங்களைக் காண முற்படுவோம்.
						
						