தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

P20223l1-3.1 அருளிச்செயல்

3.1 அருளிச்செயல்
சங்க காலத்தில் நிலவிய திருமால் வழிபாடு ஆழ்வார்களின்
காலத்தில் (கி.பி. ஆறு முதல் எட்டாம் நூற்றாண்டு முடிய)
உயர்நிலையடைந்தது. திருமாலைப் பரம்பொருளாகக் கொண்டு
ஆழ்வார்கள் அருளிய பாசுரங்கள், அருளிச்செயல் எனவும்
திவ்வியப்பிரபந்தம்
எனவும் வழங்கப் படுகின்றன.
ஆழ்வார் என்னும் சொல்லுக்கு, ‘இறைவனுடைய கல்யாண
குணங்களாகிய அமுதவெள்ளத்தில் ஆழ்ந்து ஈடுபடுவோர்’
என்பது பொருளாகும். (கல்யாண குணங்கள் = மிகவுயர்ந்த
போற்றத்தக்கப் பண்புகள்) ‘வேறொன்றில் கண்வையாதே பகவத்
குணங்களில் ஆழங்கால் பட்டு இருந்தமையால் இவர்களுக்கு
ஆழ்வார்கள் என்று பெயராயிற்று’. (பகவத் குணங்கள் =
தெய்வீகப் பண்புகள்)

நம்மாழ்வார் இறையருளில் ஆழங்காற்பட்ட நிலையை,
பாலாழி நீகிடக்கும் பண்பையாம் கேட்டேயும்
காலாழும்; நெஞ்சழியும்; கண்சுழலும்

என்று      பெரிய     திருவந்தாதிப்பாசுரம் ஒன்றில்
குறிப்பிட்டுள்ளார். மேலும்     இறைவனை இன்பத்திரு
வெள்ள
மாகவும் இதில் தாம் மூழ்கி எழுந்ததாகவும் அவர் பாடிய
இடங்களைத் திருவாய்மொழியிற் காணலாம். இறைவனாகிய
மணமிக்க பொய்கையில் ‘நீராட விருப்பமுள்ளவர்கள் வாருங்கள்’
(நீராடப் போதுவீர் போதுமினோ) என்று திருப்பாவையில்
ஆண்டாள் அழைப்பு விடுப்பதும், அதற்கேற்ப, அப்பன்
திருவருள் மூழ்கினன்
(8-9-5) என்று நம்மாழ்வார்
குறிப்பிடுவதும் இங்குச் சுட்டிக் காட்டத்தக்கன. இவை யாவும்
இறைமைக்குணங்களில்     ஆழ்ந்திருந்த     அனுபவத்தையே
பேசுகின்றன. இவற்றைக் கருதியே அவர்கள் ஆழ்வார்கள்
எனப்பட்டனர் போலும்.

இவ்வாறன்றி “இறைவனுடைய     வடிவழகில் ஈடுபட்டு
அழுந்தினவர்கள் ஆதலின் ஆழ்வார்கள் என்று பெயர்
பெற்றனர் என்றும், மக்கள்படும் துக்கத்தைக் கண்டு பொறாமல்
அத்துக்கத்தில் அழுந்தினவர்கள் ஆதலின் ஆழ்வார்கள்
என்னும் பெயர் ஏற்பட்டது என்றும்” இச்சொல்லுக்குப்
பலவகையாகப் பொருள் கூறுவதும் உண்டு.

இவ்வாழ்வார்கள் பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார்,
பேயாழ்வார், திருமழிசையாழ்வார்,     நம்மாழ்வார்,
மதுரகவியாழ்வார், குலசேகராழ்வார், பெரியாழ்வார்,
ஆண்டாள்,         தொண்டரடிப்பொடியாழ்வார்,
திருப்பாணாழ்வார், திருமங்கையாழ்வார்
எனப் பன்னிருவர்
ஆவர். இவர்களுள் முதல் மூவரும் காலத்தால் முந்தியவர்கள்
ஆதலின் முதலாழ்வார்கள் எனப்படும். ஆழ்வார்களுள்
பதினொருவர் மட்டுமே     இறைவனைப் பாடியுள்ளனர்.
மதுரகவியாழ்வார் திருமாலைப் பாடவி்ல்லை. நம்மாழ்வாரையே
அவர் தம்முடைய ஞானாசிரியராக ஏற்றுக்கொண்டு போற்றிப்
பாடியிருக்கின்றார். நம்மாழ்வாரையன்றித் தேவுமற்றறியேன்
என்பது அவர் பாசுரம். (தேவு = தெய்வம்)


பொய்கை
யாழ்வார்


பூதத்தாழ்வார்


பேயாழ்வார்


திருமழிசை
யாழ்வார்


நம்மாழ்வார்

மதுரகவி
யாழ்வார்

குலசேகராழ்
வார்

பெரியாழ்வார்

ஆண்டாள்

தொண்டரடிப்
பொடி
யாழ்வார்

திருப்
பாணாழ்வார்

திருமங்கை
யாழ்வார்

ஆழ்வார்களின் எண்ணிக்கையில் ஆண்டாள், மதுரகவி
ஆகிய இருவரையும் சேர்க்காது பதின்மர் எனக்கொள்ளும்
வழக்கும் உண்டு. ‘ஆண்டாள் ஏனைய ஆழ்வார்கள் போலன்றித்
திருமாலைக் கணவராக வரிக்கும் பேறு பெற்றவராதலின் அவர்
ஆழ்வார்களுள் ஒருவராகச் சேர்த்துக் கணக்கிடப் பெறவில்லை;
மதுரகவியோ திருமாலைப் பாடாமல் நம்மாழ்வாரிடம் மட்டுமே
பக்தி பாராட்டியதால், அவரும் ஆழ்வார்கள் வரிசையில்
சேர்க்கப்பெறவில்லை’. இவ்வாறு     கூறப்பட்ட போதிலும்
ஆழ்வார்கள்     பன்னிருவர்
     என்னும்     வழக்கே
நிலைபெற்றுவிட்டது.
ஆழ்வார் பன்னிருவரும் பாடிய அருட்பாசுரங்களின்
எண்ணிக்கை நாலாயிரமாகும். இவற்றை நாதமுனிகள் (கி.பி. 813-
18) என்னும் பெரியார் அரும்பாடுபட்டுத் தொகுத்தளித்ததாகக்
குருபரம்பரை
என்னும் நூல் கூறுகின்றது. பாசுரங்களின்
எண்ணிக்கையும்     தெய்வத்தன்மையும்     நோக்கி
நாலாயிரத்திவ்வியப் பிரபந்தம்
என்று இத்தொகுப்புக்குப்
பெயர் ஏற்பட்டது.

எனினும் ஆழ்வார்களின் பிரபந்தங்களை அருளிச்செயல்
எனக்குறிப்பதே     முன்னைய     வழக்காயிருந்தது.
மணவாளமாமுனிகள் உபதேசரத்தினமாலையில் அருளிச்செயல்
என்றே குறிப்பிடுகின்றார்.
ஆழ்வார்கள் வாழி : அருளிச்செயல்வாழி :
ஆழ்வார்கள் சீர்மை அறிவார் ஆர்?
அருளிச்செயலை அறிவார் ஆர்?

என்பன அவர் கூற்றுகள். ஆழ்வார்களைக் குறிப்பிட்டு, அவர்தம்
படைப்புகள் பற்றிக் கூறும் போதெல்லாம், அருளிச்செயல்
என்றே அவர் பாடுதல் காணலாம்.

ஆசார்ய ஹிருதயம் என்னும் நூல் அருளிச்செயல்
என்பதனோடு, திவ்வியப்பிரபந்தம் என்னும் பெயராலும்
ஆழ்வார்களின் பிரபந்தங்களைக் குறிப்பிடுகிறது.

நாளடைவில் ஆழ்வார்களின்     தமிழ்ப் பாசுரங்களை,
திவ்வியப் பிரபந்தம்
என்னும் வடமொழிப்பெயர் கொண்டு
அழைப்பதே     நிலைபெற்றுவிட்டது.      ஆறாயிரப்படி
குருபரம்பரை, கோயிலொழுகு
     போன்ற நூல்களில்
திவ்வியப்பிரபந்தம்
என்னும் பெயர் காணப்படுகின்றது.
பிரபந்தம் என்னும் சொல் நன்றாகக் கட்டப்பட்டது என்னும்
பொருளில் நூலைக் குறிப்பதாகும். அதனோடு திவ்வியம்
என்னும் அடை சேர்ந்து, திவ்வியப்பிரபந்தம் ஆயிற்று.
திவ்வியம்
என்னும் சொல் தெய்வீகமான பொருள்களைக்
குறிக்கப் பயன்பட்டுள்ளது. வைணவ நெறியில் இறைவன்
எழுந்தருளியுள்ள தலங்கள் திவ்வியதேசம் எனப் பெயர்
பெறுகின்றன. இறைவனால் மயர்வற மதிநலம் (மயக்கம் நீங்கிய
அறிவுச் செல்வம்) அருளப்பெற்ற தெய்வப்புலவர்களான
ஆழ்வார்கள் திவ்விய சூரிகள் என்று சிறப்பிக்கப்படுகின்றனர்.
எனவே     அவர்களாற்     பாடப்பெற்ற பிரபந்தங்களும்
திவ்வியப்பிரபந்தங்கள்
ஆயின. இன்று நாடறிந்த பெயர்
நாலாயிரத்திவ்வியப் பிரபந்தம்
என்பதே. ஆழ்வார்களின்
பிரபந்தங்களை தமிழ்மாலைகள் எனவும், சந்தமிகு தமிழ்மறை
எனவும் பதின்மர்கலை எனவும் குறிப்பதுண்டு.


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 22:09:57(இந்திய நேரம்)