தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்


யா

37. பாலை
நசை பெரிது உடையர்; நல்கலும் நல்குவர்;
பிடி பசி களைஇய பெருங் கை வேழம்
மென் சினை யாஅம் பொளிக்கும்
அன்பின-தோழி!-அவர் சென்ற ஆறே.
தோழி, 'கடிது வருவர்' என்று, ஆற்றுவித்தது. - பாலை பாடிய பெருங்கடுங்கோ

198. குறிஞ்சி
யாஅம் கொன்ற மரம் சுட்ட இயவில்
கரும்பு மருள் முதல பைந் தாட் செந் தினை
மடப் பிடித் தடக்கை அன்ன பால் வார்பு,
கரிக் குறட்டு இறைஞ்சிய செறிக் கோட் பைங் குரல்
படுகிளி கடிகம் சேறும்; அடுபோர்
எஃகு விளங்கு தடக் கை மலையன் கானத்து
ஆரம் நாறும் மார்பினை,
வாரற்கதில்ல; வருகுவள் யாயே.
தோழி குறியிடம் பெயர்த்துக் கூறியது. - கபிலர்

224. பாலை
கவலை யாத்த அவல நீள் இடைச்
சென்றோர் கொடுமை எற்றி, துஞ்சா
நோயினும் நோய் ஆகின்றே-கூவற்
குரால் ஆன் படு துயர் இராவில் கண்ட
உயர்திணை ஊமன் போலத்
துயர் பொறுக்கல்லேன், தோழி நோய்க்கே.
பிரிவிடை 'இறந்துபடும்' எனக் கவன்ற தோழி கேட்பக் கிழத்தி உரைத்தது.- கூவன் மைந்தன்

232. பாலை
உள்ளார்கொல்லோ?-தோழி!-உள்ளியும்,
வாய்ப் புணர்வு இன்மையின் வாரார்கொல்லோ?-
மரற்புகா அருந்திய மா எருத்து இரலை,
உரற்கால் யானை ஒடித்து உண்டு எஞ்சிய
யாஅ வரி நிழல், துஞ்சும்
மா இருஞ் சோலை மலை இறந்தோரே.
பிரிவிடைத் தோழி வற்புறுத்தியது. - ஊண்பித்தை

255. பாலை
பொத்து இல் காழ அத்த யாஅத்துப்
பொரி அரை முழுமுதல் உருவ குத்தி,
மறம் கெழு தடக் கையின் வாங்கி, உயங்கு நடைச்
சிறு கட் பெரு நிரை உறு பசி தீர்க்கும்
தட மருப்பு யானை கண்டனர்-தோழி!-
தம் கடன் இறீஇயர் எண்ணி, இடம்தொறும்
காமர் பொருட்பிணிப் போகிய
நாம் வெங் காதலர் சென்ற ஆறே.
'இடைநின்று மீள்வர்' எனக் கவன்ற கிழத்தியைத் தோழி வற்புறுத்தியது.- கடுகு பெருந் தேவன்

307. பாலை
வளை உடைத்தனையது ஆகி, பலர் தொழ,
செவ் வாய் வானத்து ஐயெனத் தோன்றி,
இன்னாப் பிறந்தன்று, பிறையே; அன்னோ,
மறந்தனர்கொல்லோ தாமே-களிறு தன்
உயங்குநடை மடப்பிடி வருத்தம் நோனாது,
நிலை உயர் யாஅம் தொலையக் குத்தி,
வெண் நார் கொண்டு, கை சுவைத்து, அண்ணாந்து,
அழுங்கல் நெஞ்சமொடு முழங்கும்
அத்த நீள் இடை அழப் பிரிந்தோரே?
பிரிவிடைக் கடுஞ்சொற் சொல்லிய தோழிக்குக் கிழத்தி உரைத்தது.- கடம்பனூர்ச் சாண்டிலியன்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 09:13:54(இந்திய நேரம்)