தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்


அடும்பு

243. நெய்தல்
மான் அடி அன்ன கவட்டிலை அடும்பின்
தார் மணி அன்ன ஒண் பூக் கொழுதி,
ஒண் தொடி மகளிர் வண்டல் அயரும்
புள் இமிழ் பெருங் கடற் சேர்ப்பனை
உள்ளேன்-தோழி!-படீஇயர், என் கண்ணே.
வன்புறை எதிர் அழிந்து சொல்லியது. - நம்பி குட்டுவன்

248. நெய்தல்
அது வரல் அன்மையோ அரிதே; அவன் மார்பு
உறுக என்ற நாளே குறுகி,
ஈங்கு ஆகின்றே-தோழி!-கானல்
ஆடு அரை புதையக் கோடை இட்ட
அடும்பு இவர் மணற் கோடு ஊர, நெடும் பனை
குறிய ஆகும் துறைவனைப்
பெரிய கூறி யாய் அறிந்தனளே.
வரைவு நீட்டித்தவழி, ஆற்றாளாகிய கிழத்தியைத் தோழி ஆற்றுவித்தது. - உலோச்சன்

349. நெய்தல்
'அடும்பு அவிழ் அணி மலர் சிதைஇய மீன் அருந்தி,
தடந் தாள் நாரை இருக்கும் எக்கர்த்
தண்ணம் துறைவற் தொடுத்து, நம் நலம்
கொள்வாம்' என்றி-தோழி!-கொள்வாம்;
இடுக்கண் அஞ்சி இரந்தோர் வேண்டிய
கொடுத்து 'அவை தா' எனக் கூறலின்,
இன்னாதோ, நம் இன் உயிர் இழப்பே?
பரத்தைமாட்டுப் பிரிந்து வந்த தலைமகன் கேட்கும் அண்மையனாக, தோழிக்குக் கிழத்தி கூறியது. - சாத்தன்.

401. நெய்தல்
அடும்பின் ஆய் மலர் விரைஇ, நெய்தல்
நெடுந் தொடை வேய்ந்த நீர் வார் கூந்தல்
ஓரை மகளிர் அஞ்சி, ஈர் ஞெண்டு
கடலில் பரிக்கும் துறைவனொடு, ஒரு நாள்,
நக்கு விளையாடலும் கடிந்தன்று,
ஐதே கம்ம, மெய் தோய் நட்பே!
வேறுபாடு கண்டு இற்செறிக்கப்பட்ட தலைமகள், தன்னுள்ளே சொல்லியது. - அம்மூவன்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 09:15:23(இந்திய நேரம்)