Primary tabs
கேசவனார்
14. செவ்வேள்
முருகனது குன்றில் கார்காலத் தன்மை மிகுதல்
கார் மலி கதழ் பெயல் தலைஇ, ஏற்ற
நீர் மலி நிறை சுனை பூ மலர்ந்தனவே;
தண் நறுங் கடம்பின் கமழ் தாது ஊதும்
வண்ண வண்டு இமிர் குரல் பண்ணை போன்றனவே;
அடியுறைமகளிர் ஆடும் தோளே,
நெடு வரை அடுக்கத்து வேய், போன்றனவே;
வாகை ஒண் பூப் புரையும் முச்சிய
தோகை ஆர் குரல், மணந்து தணந்தோரை,
'நீடன்மின் வாரும்' என்பவர் சொல் போன்றனவே;
நாள் மலர்க் கொன்றையும் பொலந் தார் போன்றன;
மெல் இணர் வேங்கை வியல் அறைத் தாயின,
அழுகை மகளிர்க்கு உழுவை செப்ப;
நீர் அயல் கலித்த நெரி முகைக் காந்தள்
வார் குலை அவிழ்ந்த வள் இதழ் நிரைதொறும்,
விடு கொடிப் பிறந்த மென் தகைத் தோன்றிப்
பவழத்து அன்ன செம் பூத் தாஅய்,
கார் மலிந்தன்று, நின் குன்று.
முருகனைப் புகழ்ந்து போற்றுதல்
போர் மலிந்து,
சூர் மருங்கு அறுத்த சுடர் படையோயே!
கறை இல் கார் மழை பொங்கி அன்ன
நறையின் நறும் புகை நனி அமர்ந்தோயே!
அறு முகத்து ஆறு இரு தோளால் வென்றி
நறு மலர் வள்ளிப் பூ நயந்தோயே!
கெழீஇக் கேளிர் சுற்ற, நின்னை
எழீஇப் பாடும் பாட்டு அமர்ந்தோயே!
பிறந்த ஞான்றே, நின்னை உட்கிச்
சிறந்தோர் அஞ்சிய சீர் உடையோயே!
இரு பிறப்பு, இரு பெயர், ஈர நெஞ்சத்து,
ஒரு பெயர், அந்தணர் அறன் அமர்ந்தோயே!
விண்ணப்பம்
அன்னை ஆகலின், அமர்ந்து யாம் நின்னை,
துன்னித் துன்னி, வழிபடுவதன் பயம்
இன்னும் இன்னும் அவை ஆகுக
தொன் முதிர் மரபின் நின் புகழினும் பலவே!
பருவம் கண்டு அழிந்த தலைமகள் கேட்ப, முருகவேளைப்
பரவுவாளாய், 'இப் பருவத்தே தலைமகன் வரும்' என்பதுபடத்
தோழி வற்புறுத்தியது.
கேசவனார் பாட்டு
இசையும் அவர்
பண் நோதிறம்