தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Paripadal

பரிபாடல்

முகவுரை

பரிபாடல் என்பது பாட்டு வகைகளுள் ஒன்று. இதன் இயல்பைத் தொல்காப்பியம் நன்கு விவரித்துள்ளது. உறுதிப் பொருள் நான்
கனுள் இன்பத்தையே பொருளாகக் கொண்டு, மலைவிளையாட்டு, புனல் விளையாட்டு முதலியன பற்றி இப்பாடல் வரும் என்பர்
பேராசிரியர். இது இசைப்பாவாகும்.இவ் வகைப் பாடல்களால் அமைந்ததொகை நூலும்'பரிபாடல்' என்றே வழங்கி வந்துள்ளது.'இன்
இயல் மாண் தேர்ச்சி இசை பரிபாடல்' என்று இத் தொகையில் அமைந்த பாடல் ஒன்றில் வரும் வரியும் (11:137) இதன் அமைதியைப்
புலப்படுத்துகின்றது.'பரிபாட்டு' எனவும் இது வழங்கும்.

சங்கத்தார் தொகுத்த பரிபாடல்கள் 70 என்பது இறையனாரகப் பொருள் உரையாலும் (சூ.1), தொல்காப்பியப் பொருளதிகாரத்தின்
பேராசிரியர் உரையாலும் (செய்யு. சூ. 149) தெரிய வருகிறது. இப் பாடல்களில் யார் யாரைக் குறித்து எத்தனை பாடல்கள் இருந்தன
என்பதைப் பின்வரும் செய்யுள் வெளியிட்டுள்ளது.

   திருமாற்கு இரு-நான்கு; செவ்வேட்கு முப்பத்
   தொரு பாட்டு; காடுகாட்கு ஒன்று; - மருவினிய
   வையை இருபத்தாறு; மா மதுரை நான்கு என்ப-
   செய்ய பரிபாடல் திறம்.

காடுகாள் என்றது காளியை. 'காடுகாட்கு' என்பதற்குப் பதில் 'கார்கோளுக்கு' என்றும் பாடபேதம் உண்டு. கார்கோள் என்பது
கடல். அந்த ஒரு பாடல் காளியைப் பற்றியதா? கடலைப் பற்றியதா? என்று இப்பொழுது அறிய வழியில்லை.

    இவற்றுள் இப்பொழுது நமக்குப் பிரதிகளில் கிடைப்பன முதலிலிருந்து 22 பாடல்களே. எஞ்சியவை இறந்துபட்டன.எனினும்,
பழைய உரைகளிலிருந்தும், புறத்திரட்டுத் தொகை நூலிலிருந்தும் 2 முழுப் பாடல்களும், சில பாடல்களின் உறுப்புகளும்
தெரியவருகின்றன. இவை 'பரிபாடல்-திரட்டு' என்னும் தலைப்பில் நூலிறுதியில் சேர்க்கப்பெற்றுள்ளன. 22 பாடல்களில் 6 திருமாலுக்கு
ம், 8 முருகனுக்கும், 8 வையைக்கும் உரியனவாயுள்ளன. பரிபாடல் திரட்டில் உள்ள 2 முழுப்பாடல்களுள் ஒன்று திருமாலைப் பற்
றியும், மற்றொன்று வையையைப் பற்றியும் அமைந்தவை. பாடற் பகுதிகளுள் சில மதுரையையும் வையையையும் குறித்தன. ஒரு சில
உறுப்புகள் இன்னவற்றைச் சார்ந்தவை என்று தெரியக் கூடவில்லை.

   இந் நூலைத் தொகுத்தார், தொகுப்பித்தார், பெயர் ஒன்றும் அறியக்கூடவில்லை. தொகுத்த பாடல்களின் அடிவரையறை பற்றிய
குறிப்பும் கிடைக்கவில்லை. பரிபாடலின் சிற்றெல்லை 25 அடி என்றும், பேரெல்லை 400 அடி என்றும், தொல்காப்பியர் வரையறுத்
துள்ளனர். ஒவ்வொரு பாடலின் முடிவிலும் துறை, இயற் றிய ஆசிரியர் பெயர், இசை வகுத்தோர் பெயர், பண்ணின் பெயர்,பற்றிய
பழங் குறிப்புகள் உள்ளன. ஆயினும், பிரதிகளின் சிதைவினால் முதற் பாடலுக்கும் 22ஆம் பாடலுக்கும் இக் குறிப்புகள் கிடைக்கவில்
லை. 13ஆம் பாடலுக்கு இசை வகுத்தோர் பெயர் காணப்படவில்லை. முதற் பாடலில் அராகமாக வருகின்ற 14 ஆம் வரி முதல் 28
ஆம் வரி வரையிலுள்ள பகுதி தெளிவின்றி உள்ளது. இப் பகுதியில் பொருள் வரையறை செய்வதற்குப் பிரதிகளின் உதவியும் பழைய
உரையின் உதவியும் கிடைக்கவில்லை. இவ்வாறே ஏனைய பாடல்கள் சிலவற்றிலும் ஒருசில இடங்கள் உள்ளன.

   22 பாடல்களில் 'கடவுள் வாழ்த்து'ப் பொருளில் வந்தவை 14. ஏனைய எட்டுப் பாடல்களும் வையையைப் பற்றியன. இந்த எட்
டிலும் அகப்பொருள் பற்றி எழுதப் பெற்ற பழைய கருத்துகளும் உள்ளன. இந் நூற் செய்யுட்கள் மிக நீண்டனவாய் இருப்பதால்,
பாடல்களின் இடையிடையே, கருத்து விளங்கும் வகையில் தலைப்புகள் புதுவதாக இப்பதிப்பில் அமைக்கப் பெற்றுள்ளன.

   முதலில் அமைந்த 11 பாடல்களின் (2-12) பண் பாலை யாழ்;அடுத்து வரும் ஐந்து பாடல்களின் (13-17) பண் நோதிறம். அதன்
பின்னருள்ள நான்கு பாடல்களின் (18-21) பண் காந்தாரம்.இவ் வகைப் பண் வரிசையில் பாடல்கள் அமைந்துள்ளமையை நோக்கினால்,
தேவாரப் பாடல்களைப் போல், பரிபாடலும் பண்முறை பற்றித் தொகுக்குப் பெற்று, பாடகர்களால் பாடப் பெற்று வந்தன
என்று கருத இடமுண்டு.

     எழுதினர் பிழைப்பும் எழுத்துரு ஒக்கும்
          பகுதியின் வந்த பாடகர் பிழைப்பும்

என வரும் உரைச் சிறப்புப் பாயிரப் பகுதியும் இவை பண்ணோடு பாடப் பெற்றமையை வலியுறுத்தும்.

   இந் நூலுக்கு உரை வகுத்தவர் பரிமேலழகர்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 12:45:40(இந்திய நேரம்)