தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

ஓமை
3. பாலை
இருங் கழி முதலை மேஎந்தோல் அன்ன
கருங் கால் ஓமைக் காண்பு இன் பெருஞ் சினைக்
கடியுடை நனந்தலை, ஈன்று இளைப்பட்ட,
கொடு வாய்ப் பேடைக்கு அல்குஇரை தரீஇய,
5
மான்று வேட்டு எழுந்த செஞ் செவி எருவை
வான் தோய் சிமைய விறல் வரைக் கவாஅன்,
துளங்கு நடை மரையா வலம் படத் தொலைச்சி,
ஒண் செங் குருதி உவற்றி உண்டு அருந்துபு,
புலவுப் புலி துறந்த கலவுக் கழி கடு முடை,
10
கொள்ளை மாந்தரின் ஆனாது கவரும்
புல் இலை மராஅத்த அகன் சேண் அத்தம்,
கலம் தரல் உள்ளமொடு கழியக் காட்டி,
பின் நின்று துரக்கும் நெஞ்சம்! நின் வாய்
வாய்போல் பொய்ம்மொழி எவ்வம் என் களைமா
15
கவிர் இதழ் அன்ன காண்பு இன் செவ் வாய்,
அம் தீம் கிளவி, ஆய் இழை, மடந்தை
கொடுங் குழைக்கு அமர்த்த நோக்கம்
நெடுஞ் சேண் ஆர் இடை விலங்கும் ஞான்றே?
முன் ஒரு காலத்து, நெஞ்சினால் பொருள் வலிக்கப்பட்டுப் பிரிந்தான், தலைமகன்; பிரிந்து இடைச் சுரத்தினின்று அவள் நலம் நயந்து மீளலுற்ற நெஞ்சினைக் கழறிப்போய், பொருள் முடித்து வந்த தலைமகன், பின்னும் பொருள் வலிக்கப்பட்ட நெஞ்சிற்குச் சொல்லிச் செலவழுங்கியது.
- எயினந்தை மகனார் இளங்கீரனார்.
5. பாலை
அளி நிலை பொறாஅது அமரிய முகத்தள்,
விளி நிலை கொள்ளாள், தமியள், மென்மெல,
நலம் மிகு சேவடி நிலம் வடுக் கொளாஅ,
குறுக வந்து, தன் கூர் எயிறு தோன்ற
5
வறிது அகத்து எழுந்த வாய் அல் முறுவலள்,
கண்ணியது உணரா அளவை, ஒண்ணுதல்,
வினை தலைப்படுதல் செல்லா நினைவுடன்
முளிந்த ஓமை முதையல்அம் காட்டு,
பளிங்கத்து அன்ன பல் காய் நெல்லி,
10
மோட்டு இரும் பாறை, ஈட்டு வட்டு ஏய்ப்ப,
உதிர்வன படூஉம் கதிர் தெறு கவாஅன்,
மாய்த்த போல மழுகு நுனை தோற்றி,
பாத்தியன்ன குடுமிக் கூர்ங் கல்,
விரல் நுதி சிதைக்கும் நிரை நிலை அதர,
15
பரல் முரம்பு ஆகிய பயம் இல், கானம்
இறப்ப எண்ணுதிர் ஆயின் "அறத்தாறு
அன்று" என மொழிந்த தொன்றுபடு கிளவி
அன்ன ஆக' என்னுநள் போல,
முன்னம் காட்டி, முகத்தின் உரையா,
20
ஓவச் செய்தியின் ஒன்று நினைந்து ஒற்றி,
பாவை மாய்த்த பனிநீர் நோக்கமொடு,
ஆகத்து ஒடுக்கிய புதல்வன் புன் தலைத்
தூ நீர் பயந்த துணை அமை பிணையல்
மோயினள் உயிர்த்த காலை, மா மலர்
25
மணி உரு இழந்த அணி அழி தோற்றம்
கண்டே கடிந்தனம், செலவே ஒண்டொடி
உழையம் ஆகவும் இனைவோள்
பிழையலள்மாதோ, பிரிதும் நாம் எனினே!
பொருள்வயிற் பிரியக் கருதிய தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லிச் செலவழுங்கியது. - பாலை பாடிய பெருங்கடுங்கோ
21. பாலை
'மனை இள நொச்சி மௌவல் வால் முகைத்
துணை நிரைத்தன்ன, மா வீழ், வெண் பல்,
அவ் வயிற்று, அகன்ற அல்குல், தைஇத்
தாழ் மென் கூந்தல், தட மென் பணைத் தோள்,
5
மடந்தை மாண் நலம் புலம்ப, சேய் நாட்டுச்
செல்லல்' என்று, யான் சொல்லவும், ஒல்லாய்,
வினை நயந்து அமைந்தனைஆயின், மனை நகப்
பல் வேறு வெறுக்கை தருகம் வல்லே,
எழு இனி, வாழி, என் நெஞ்சே! புரி இணர்
10
மெல் அவிழ் அம் சினை புலம்ப, வல்லோன்
கோடு அறை கொம்பின் வீ உகத் தீண்டி,
மராஅம் அலைத்த மண வாய்த் தென்றல்,
சுரம் செல் மள்ளர் சுரியல் தூற்றும்,
என்றூழ் நின்ற புன் தலை வைப்பில்,
15
பருந்து இளைப்படூஉம் பாறு தலை ஓமை
இருங் கல் விடரகத்து, ஈன்று இளைப்பட்ட,
மென் புனிற்று அம் பிணவு பசித்தென, பைங் கட்
செந்நாய் ஏற்றை கேழல் தாக்க,
இரியற் பிணவல் தீண்டலின், பரீஇச்
20
செங் காய் உதிர்ந்த பைங் குலை ஈந்தின்
பரல் மண் சுவல முரண் நிலம் உடைத்த
வல் வாய்க் கணிச்சி, கூழ் ஆர், கோவலர்
ஊறாது இட்ட உவலைக் கூவல்,
வெண் கோடு நயந்த அன்பு இல் கானவர்
25
இகழ்ந்து இயங்கு இயவின் அகழ்ந்த குழி செத்து,
இருங் களிற்று இன நிரை, தூர்க்கும்
பெருங் கல் அத்தம் விலங்கிய காடே.
பொருள் வலிக்கப்பட்டுப் பிரிந்த தலைமகன் இடைச் சுரத்துநின்று மீளலுற்ற நெஞ்சினைக் கழறியது. - காவன்முல்லைப் பூதனார்
117. பாலை
மௌவலொடு மலர்ந்த மாக் குரல் நொச்சியும்,
அவ் வரி அல்குல் ஆயமும், உள்ளாள்,
ஏதிலன் பொய்ம்மொழி நம்பி, ஏர் வினை
வளம் கெழு திரு நகர் புலம்பப் போகி,
5
வெருவரு கவலை ஆங்கண், அருள்வர,
கருங் கால் ஓமை ஏறி, வெண் தலைப்
பருந்து பெடை பயிரும் பாழ் நாட்டு ஆங்கண்,
பொலந்தொடி தெளிர்ப்ப வீசி; சேவடிச்
சிலம்பு நக இயலிச் சென்ற என் மகட்கே
10
சாந்து உளர் வணர் குரல் வாரி, வகைவகுத்து;
யான் போது துணைப்ப, தகரம் மண்ணாள்,
தன் ஓரன்ன தகை வெங் காதலன்
வெறி கமழ் பல் மலர் புனையப் பின்னுவிட,
சிறுபுறம் புதைய நெறிபு தாழ்ந்தனகொல்
15
நெடுங் கால் மாஅத்து ஊழுறு வெண் பழம்
கொடுந் தாள் யாமை பார்ப்பொடு கவரும்
பொய்கை சூழ்ந்த, பொய்யா யாணர்,
வாணன் சிறுகுடி வடாஅது
தீம் நீர்க் கான்யாற்று அவிர்அறல் போன்றே?
மகட் போக்கிய செவிலித்தாய் சொல்லியது. - .........
191. பாலை
அத்தப் பாதிரித் துய்த் தலைப் புது வீ
எரி இதழ் அலரியொடு இடை பட விரைஇ,
வண் தோட்டுத் தொடுத்த வண்டு படு கண்ணி,
தோல் புதை சிரற்று அடி, கோலுடை உமணர்
5
ஊர் கண்டன்ன ஆரம் வாங்கி,
அருஞ் சுரம் இவர்ந்த அசைவு இல் நோன் தாள்
திருந்து பகட்டு இயம்பும் கொடு மணி, புரிந்து அவர்
மடி விடு வீளையொடு, கடிது எதிர் ஓடி,
ஓமை அம் பெருங் காட்டு வரூஉம் வம்பலர்க்கு
10
ஏமம் செப்பும் என்றூழ் நீள் இடை,
அரும் பொருள் நசைஇ, பிரிந்து உறை வல்லி,
சென்று, வினை எண்ணுதிஆயின், நன்றும்,
உரைத்திசின் வாழி என் நெஞ்சே! 'நிரை முகை
முல்லை அருந்தும் மெல்லிய ஆகி,
15
அறல் என விரிந்த உறல் இன் சாயல்
ஒலி இருங் கூந்தல் தேறும்' என,
வலிய கூறவும் வல்லையோ, மற்றே?
தலைமகன் தன் நெஞ்சிற்குச் செலவு அழுங்கியது. - ஒரோடோகத்துக் கந்தரத்தனார்
223. பாலை
'பிரிதல் வல்லியர், இது, நத் துறந்தோர்
மறந்தும் அமைகுவர்கொல்?' என்று எண்ணி,
ஆழல் வாழி, தோழி! கேழல்
வளை மருப்பு உறழும் முளை நெடும் பெருங் காய்
5
நனை முதிர் முருக்கின் சினை சேர் பொங்கர்,
காய் சினக் கடு வளி எடுத்தலின், வெங் காட்டு
அழல் பொழி யானையின் ஐயெனத் தோன்றும்
நிழல் இல் ஓமை நீர் இல் நீள் இடை,
இறந்தனர்ஆயினும், காதலர் நம்வயின்
10
மறந்து கண்படுதல் யாவது புறம் தாழ்
அம் பணை நெடுந் தோள் தங்கி, தும்பி
அரியினம் கடுக்கும் சுரி வணர் ஐம்பால்
நுண் கேழ் அடங்க வாரி, பையுள் கெட,
நன் முகை அதிரல் போதொடு, குவளைத்
15
தண் நறுங் கமழ் தொடை வேய்ந்த, நின்
மண் ஆர் கூந்தல் மரீஇய துயிலே?
பிரிவிடை வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறுத்தியது. - பாலை பாடிய பெருங்கடுங்கோ
297. பாலை
பானாட் கங்குலும், பெரும் புன் மாலையும்,
ஆனா நோயொடு அழி படர்க் கலங்கி,
நம்வயின் இனையும் இடும்பை கைம்மிக,
என்னை ஆகுமோ, நெஞ்சே! நம் வயின்
5
இருங் கவின் இல்லாப் பெரும் புன் தாடி,
கடுங்கண், மறவர் பகழி மாய்த்தென,
மருங்குல் நுணுகிய பேஎம் முதிர் நடுகல்,
பெயர் பயம் படரத் தோன்று குயில் எழுத்து
இயைபுடன் நோக்கல்செல்லாது, அசைவுடன்
10
ஆறு செல் வம்பலர் விட்டனர் கழியும்
சூர் முதல் இருந்த ஓமை அம் புறவின்,
நீர் முள் வேலிப் புலவு நாறு முன்றில்,
எழுதியன்ன கொடி படு வெருகின்
பூளை அன்ன பொங்கு மயிர்ப் பிள்ளை,
15
மதி சூழ் மீனின், தாய் வழிப்படூஉம்
சிறுகுடி மறவர் சேக் கோள் தண்ணுமைக்கு
எருவைச் சேவல் இருஞ் சிறை பெயர்க்கும்
வெரு வரு கானம், நம்மொடு,
'வருவல்' என்றோள் மகிழ் மட நோக்கே?
பொருள்வயிற் போகாநின்ற தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - மதுரை மருதன் இளநாகனார்
369. பாலை
கண்டிசின் மகளே! கெழீஇ இயைவெனை:
ஒண் தொடி செறித்த முன்கை ஊழ் கொள்பு,
மங்கையர் பல பாராட்ட, செந் தார்க்
கிள்ளையும் தீம் பால் உண்ணா; மயில் இயல்
5
சேயிழை மகளிர் ஆயமும் அயரா;
தாழியும் மலர் பல அணியா; கேழ் கொளக்
காழ் புனைந்து இயற்றிய வனப்பு அமை நோன் சுவர்ப்
பாவையும் பலி எனப் பெறாஅ; நோய் பொர,
இவை கண்டு, இனைவதன்தலையும், நினைவிலேன்,
10
கொடியோள் முன்னியது உணரேன், 'தொடியோய்!
இன்று நின் ஒலி குரல் மண்ணல்' என்றதற்கு,
எற் புலந்து அழிந்தனளாகி, தற் தகக்
கடல்அம் தானை கை வண் சோழர்,
கெடல் அரு நல் இசை உறந்தை அன்ன,
15
நிதியுடை நல் நகர்ப் புதுவது புனைந்து,
தமர் மணன் அயரவும் ஒல்லாள், கவர்முதல்
ஓமை நீடிய உலவை நீள் இடை,
மணி அணி பலகை, மாக் காழ் நெடு வேல்,
துணிவுடை உள்ளமொடு துதைந்த முன்பின்
20
அறியாத் தேஎத்து அருஞ் சுரம் மடுத்த
சிறியோற்கு ஒத்த என் பெரு மடத் தகுவி,
'சிறப்பும் சீரும் இன்றி, சீறூர்
நல்கூர் பெண்டின் புல் வேய் குரம்பை
ஓர் ஆ யாத்த ஒரு தூண் முன்றில்
25
ஏதில் வறு மனைச் சிலம்பு உடன் கழீஇ,
மேயினள்கொல்?' என நோவல் யானே.
மகட் போக்கிய செவிலி சொல்லியது. - நக்கீரர்
397. பாலை
என் மகள் பெரு மடம் யான் பாராட்ட,
தாய் தன் செம்மல் கண்டு கடன் இறுப்ப,
முழவு முகம் புலரா விழவுடை வியல் நகர்,
மணன் இடையாகக் கொள்ளான், 'கல் பகக்
5
கண மழை துறந்த கான் மயங்கு அழுவம்
எளியவாக, ஏந்து கொடி பரந்த
பொறி வரி அல்குல் மாஅயோட்கு' எனத்
தணிந்த பருவம் செல்லான், படர்தரத்
துணிந்தோன்மன்ற துனை வெங் காளை
10
கடும் பகட்டு ஒருத்தல் நடுங்கக் குத்தி,
போழ் புண் படுத்த பொரி அரை ஓமைப்
பெரும் பொளிச் சேயரை நோக்கி, ஊன் செத்து,
கருங் கால் யாஅத்துப் பருந்து வந்து இறுக்கும்
சேண் உயர்ந்து ஓங்கிய வான் உயர் நெடுங் கோட்டுக்
15
கோடை வெவ் வளிக்கு உலமரும்
புல் இலை வெதிர நெல் விளை காடே.
மகட் போக்கிய செவிலித்தாய் சொல்லியது. - கயமனார்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 17:46:02(இந்திய நேரம்)