தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

காயா
14. முல்லை
'அரக்கத்து அன்ன செந் நிலப் பெரு வழி,
காயாஞ் செம்மல் தாஅய், பல உடன்
ஈயல் மூதாய் வரிப்ப, பவளமொடு
மணி மிடைந்தன்ன குன்றம் கவைஇய
5
அம் காட்டு ஆர் இடை, மடப் பிணை தழீஇ,
திரி மருப்பு இரலை புல் அருந்து உகள,
முல்லை வியன் புலம் பரப்பி, கோவலர்
குறும் பொறை மருங்கின் நறும் பூ அயர,
பதவு மேயல் அருந்து மதவு நடை நல் ஆன்
10
வீங்கு மாண் செருத்தல், தீம் பால் பிலிற்ற,
கன்று பயிர் குரல, மன்று நிறை புகுதரும்
மாலையும் உள்ளார்ஆயின், காலை
யாங்கு ஆகுவம்கொல்? பாண!' என்ற
மனையோள் சொல் எதிர் சொல்லல்செல்லேன்,
15
செவ்வழி நல் யாழ் இசையினென், பையென,
கடவுள் வாழ்த்தி, பையுள் மெய்ந் நிறுத்து,
அவர் திறம் செல்வேன் கண்டனென், யானே
விடு விசைக் குதிரை விலங்கு பரி முடுக,
கல் பொருது இரங்கும் பல் ஆர் நேமிக்
20
கார் மழை முழக்கு இசை கடுக்கும்,
முனை நல் ஊரன், புனை நெடுந் தேரே.
பாணன் தனக்குப் பாங்காயினார் கேட்பச் சொல்லியது. - ஒக்கூர் மாசாத்தனார்
108. குறிஞ்சி
புணர்ந்தோர் புன்கண் அருளலும் உணர்ந்தோர்க்கு
ஒத்தன்றுமன்னால்! எவன்கொல்? முத்தம்
வரைமுதல் சிதறிய வை போல், யானைப்
புகர் முகம் பொருத புது நீர் ஆலி
5
பளிங்கு சொரிவது போல் பாறை வரிப்ப,
கார் கதம்பட்ட கண் அகன் விசும்பின்
விடுபொறி ஞெகிழியின் கொடி பட மின்னி,
படு மழை பொழிந்த பானாட் கங்குல்,
ஆர் உயிர்த் துப்பின் கோள் மா வழங்கும்
10
இருளிடைத் தமியன் வருதல் யாவதும்
அருளான் வாழி, தோழி! அல்கல்
விரவுப் பொறி மஞ்ஞை வெரீஇ, அரவின்
அணங்குடை அருந் தலை பை விரிப்பவைபோல்,
காயா மென் சினை தோய நீடிப்
15
பல் துடுப்பு எடுத்த அலங்கு குலைக் காந்தள்
அணி மலர் நறுந் தாது ஊதும் தும்பி
கை ஆடு வட்டின் தோன்றும்
மை ஆடு சென்னிய மலைகிழவோனே.
தலைமகன் சிறைப்புறத்தானாக, தலைமகட்குச் சொல்லுவாளாய், தோழி சொல்லியது. - தங்கால் பொற்கொல்லனார்
133. பாலை
'குன்றி அன்ன கண்ண, குரூஉ மயிர்,
புன் தாள், வெள்ளெலி மோவாய் ஏற்றை
செம் பரல் முரம்பில் சிதர்ந்த பூழி,
நல் நாள் வேங்கை வீ நன்கனம் வரிப்ப,
5
கார் தலைமணந்த பைம் புதற் புறவின்,
வில் எறி பஞ்சியின் வெண் மழை தவழும்
கொல்லை இதைய குறும் பொறை மருங்கில்,
கரி பரந்தன்ன காயாஞ் செம்மலொடு
எரி பரந்தன்ன இலமலர் விரைஇ,
10
பூங் கலுழ் சுமந்த தீம் புனற் கான் யாற்று
வான் கொள் தூவல் வளி தர உண்கும்;
எம்மொடு வருதல் வல்லையோ மற்று?' எனக்
கொன் ஒன்று வினவினர்மன்னே தோழி!
இதல் முள் ஒப்பின் முகை முதிர் வெட்சி
15
கொல் புனக் குருந்தொடு கல் அறைத் தாஅம்
மிளை நாட்டு அத்தத்து ஈர்ஞ் சுவற் கலித்த
வரி மரற் கறிக்கும் மடப் பிணைத்
திரிமருப்பு இரலைய காடு இறந்தோரே.
'பிரிவிடை ஆற்றாளாயினாள்' எனக் கவன்ற தோழிக்குத், தலைமகள், 'ஆற்றுவல்' என்பது பட, சொல்லியது. - உறையூர் மருத்துவன் தாமோதரனார்
304. முல்லை
இரு விசும்பு இவர்ந்த கருவி மா மழை,
நீர் செறி நுங்கின் கண் சிதர்ந்தவை போல்,
சூர் பனிப்பன்ன தண் வரல் ஆலியொடு
பரூஉப் பெயல் அழி துளி தலைஇ, வான் நவின்று,
5
குரூஉத் துளி பொழிந்த பெரும் புலர் வைகறை,
செய்து விட்டன்ன செந் நில மருங்கில்,
செறித்து நிறுத்தன்ன தெள் அறல் பருகி,
சிறு மறி தழீஇய தெறிநடை மடப் பிணை,
வலம் திரி மருப்பின் அண்ணல் இரலையொடு,
10
அலங்கு சினைக் குருந்தின் அல்கு நிழல் வதிய,
சுரும்பு இமிர்பு ஊத, பிடவுத் தளை அவிழ,
அரும் பொறி மஞ்ஞை ஆல, வரி மணல்
மணி மிடை பவளம் போல, அணி மிகக்
காயாஞ் செம்மல் தாஅய், பல உடன்
15
ஈயல் மூதாய் ஈர்ம் புறம் வரிப்ப,
புலன் அணி கொண்ட கார் எதிர் காலை,
'ஏந்து கோட்டு யானை வேந்தன் பாசறை
வினையொடு வேறு புலத்து அல்கி, நன்றும்
அறவர்அல்லர், நம் அருளாதோர்' என,
20
நம் நோய் தன்வயின் அறியாள்,
எம் நொந்து புலக்கும்கொல், மாஅயோளே?
பாசறைக்கண் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - இடைக்காடனார்
374. முல்லை
மாக் கடல் முகந்து, மாதிரத்து இருளி,
மலர் தலை உலகம் புதைய, வலன் ஏர்பு,
பழங்கண் கொண்ட கொழும் பல் கொண்மூ,
போழ்ந்த போலப் பல உடன் மின்னி,
5
தாழ்ந்த போல நனி அணி வந்து,
சோர்ந்த போலச் சொரிவன பயிற்றி,
இடியும் முழக்கும் இன்றி, பாணர்
வடி உறு நல் யாழ் நரம்பு இசைத்தன்ன
இன் குரல் அழி துளி தலைஇ, நல் பல
10
பெயல் பெய்து கழிந்த பூ நாறு வைகறை,
செறி மணல் நிவந்த களர் தோன்று இயவில்,
குறு மோட்டு மூதாய் குறுகுறு ஓடி,
மணி மண்டு பவளம் போல, காயா
அணி மிகு செம்மல் ஒளிப்பன மறைய,
15
கார் கவின் கொண்ட காமர் காலை,
செல்க, தேரே நல் வலம் பெறுந!
பெருந் தோள், நுணுகிய நுசுப்பின்,
திருந்துஇழை, அரிவை விருந்து எதிர்கொளவே!
பாசறை முற்றிய தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது. - இடைக்காடனார்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 17:47:14(இந்திய நேரம்)