தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பாகல்
15. பாலை
எம் வெங் காமம் இயைவது ஆயின்,
மெய்ம் மலி பெரும் பூண், செம்மற் கோசர்
கொம்மைஅம் பசுங் காய்க் குடுமி விளைந்த
பாகல் ஆர்கைப் பறைக் கட் பீலித்
5
தோகைக் காவின் துளுநாட்டு அன்ன,
வறுங் கை வம்பலர்த் தாங்கும் பண்பின்
செறிந்த சேரிச் செம்மல் மூதூர்,
அறிந்த மாக்கட்டு ஆகுகதில்ல
தோழிமாரும் யானும் புலம்ப,
10
சூழி யானைச் சுடர்ப் பூண் நன்னன்
பாழி அன்ன கடியுடை வியல் நகர்ச்
செறிந்த காப்பு இகந்து, அவனொடு போகி,
அத்த இருப்பை ஆர் கழல் புதுப் பூத்
துய்த்த வாய, துகள் நிலம் பரக்க,
15
கொன்றை அம் சினைக் குழற்பழம் கொழுதி,
வன் கை எண்கின் வய நிரை பரக்கும்
இன் துணைப் படர்ந்த கொள்கையொடு ஒராங்கு
குன்ற வேயின் திரண்ட என்
மென் தோள் அஞ்ஞை சென்ற ஆறே!
மகட்போக்கிய தாய்சொல்லியது. - மாமூலனார்
156. மருதம்
முரசுடைச் செல்வர் புரவிச் சூட்டும்
மூட்டுறு கவரி தூக்கியன்ன,
செழுஞ் செய் நெல்லின் சேயரிப் புனிற்றுக் கதிர்
மூதா தின்றல் அஞ்சி, காவலர்
5
பாகல் ஆய்கொடிப் பகன்றையொடு பரீஇ,
காஞ்சியின் அகத்து, கரும்பு அருத்தி, யாக்கும்
தீம் புனல் ஊர! திறவதாகக்
குவளை உண்கண் இவளும் யானும்
கழனி ஆம்பல் முழுநெறிப் பைந் தழை,
10
காயா ஞாயிற்றாக, தலைப்பெய,
'பொய்தல் ஆடிப் பொலிக!' என வந்து,
நின் நகாப் பிழைத்த தவறோ பெரும!
கள்ளும் கண்ணியும் கையுறையாக
நிலைக் கோட்டு வெள்ளை நால்செவிக் கிடாஅய்
15
நிலைத்துறைக் கடவுட்கு உளப்பட ஓச்சி,
தணி மருங்கு அறியாள், யாய் அழ,
மணி மருள் மேனி பொன் நிறம் கொளலே?
தலைமகளை இடத்து உய்த்துவந்த தோழி தலைமகனை வரைவு கடாயது.-ஆவூர் மூலங்கிழார்
177. பாலை
'தொல் நலம் சிதையச் சாஅய், அல்கலும்,
இன்னும் வாரார்; இனி எவன் செய்கு?' எனப்
பெரும் புலம்புறுதல் ஓம்புமதி சிறு கண்
இரும் பிடித் தடக் கை மான, நெய் அருந்து
5
ஒருங்கு பிணித்து இயன்ற நெறி கொள் ஐம்பால்
தேம் கமழ் வெறி மலர் பெய்ம்மார், காண்பின்
கழை அமல் சிலம்பின் வழை தலை வாடக்
கதிர் கதம் கற்ற ஏ கல் நெறியிடை,
பைங் கொடிப் பாகற் செங் கனி நசைஇ,
10
கான மஞ்ஞைக் கமஞ்சூல் மாப் பெடை
அயிர் யாற்று அடைகரை வயிரின் நரலும்
காடு இறந்து அகன்றோர் நீடினர் ஆயினும்,
வல்லே வருவர்போலும் வெண் வேல்
இலை நிறம் பெயர ஓச்சி, மாற்றோர்
15
மலை மருள் யானை மண்டுஅமர் ஒழித்த
கழற் கால் பண்ணன் காவிரி வடவயின்
நிழற் கயம் தழீஇய நெடுங் கால் மாவின்
தளிர் ஏர் ஆகம் தகை பெற முகைந்த
அணங்குடை வன முலைத் தாஅய நின்
20
சுணங்கிடை வரித்த தொய்யிலை நினைந்தே.
பிரிவிடை வேறுபட்ட தலைமகளைத் தோழி வற்புறுத்தியது. - செயலூர் இளம் பொன்சாத்தன் கொற்றனார்
255. பாலை
உலகு கிளர்ந்தன்ன உரு கெழு வங்கம்
புலவுத் திரைப் பெருங் கடல் நீர் இடைப் போழ,
இரவும் எல்லையும் அசைவு இன்று ஆகி,
விரை செலல் இயற்கை வங்கூழ் ஆட்ட,
5
கோடு உயர் திணி மணல் அகன் துறை, நீகான்
மாட ஒள் எரி மருங்கு அறிந்து ஒய்ய,
ஆள் வினைப் பிரிந்த காதலர் நாள் பல
கழியாமையே, அழி படர் அகல,
வருவர்மன்னால் தோழி! தண் பணைப்
10
பொரு புனல் வைப்பின் நம் ஊர் ஆங்கண்,
கருவிளை முரணிய தண் புதல் பகன்றை
பெரு வளம் மலர அல்லி தீண்டி,
பலவுக் காய்ப் புறத்த பசும் பழப் பாகல்
கூதள மூதிலைக் கொடி நிரைத் தூங்க,
15
அறன் இன்று அலைக்கும் ஆனா வாடை
கடி மனை மாடத்துக் கங்குல் வீச,
'திருந்துஇழை நெகிழ்ந்து பெருங் கவின் சாய,
நிரை வளை ஊருந் தோள்' என,
உரையொடு செல்லும் அன்பினர்ப் பெறினே.
பிரிவிடை வேறுபட்ட தலைமகள், ஆற்றாமை மீதூரத், தோழிக்குச் சொல்லியது. -மதுரை மருதன் இளநாகனார்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 18:17:07(இந்திய நேரம்)