தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

கொள்
37. பாலை
மறந்து, அவண் அமையார் ஆயினும், கறங்கு இசைக்
கங்குல் ஓதைக் கலி மகிழ் உழவர்
பொங்கழி முகந்த தா இல் நுண் துகள்,
மங்குல் வானின், மாதிரம் மறைப்ப,
5
வைகு புலர் விடியல் வை பெயர்த்து ஆட்டி,
தொழிற் செருக்கு அனந்தர் வீட, எழில் தகை
வளியொடு சினைஇய வண் தளிர் மாஅத்துக்
கிளி போல் காய கிளைத் துணர் வடித்து,
புளிப்பதன் அமைத்த புதுக் குட மலிர் நிறை
10
வெயில் வெரிந் நிறுத்த பயில் இதழ்ப் பசுங் குடை,
கயம் மண்டு பகட்டின் பருகி, காண் வர,
கொள்ளொடு பயறு பால் விரைஇ, வெள்ளிக்
கோல் வரைந்தன்ன வால் அவிழ் மிதவை
வாங்கு கை தடுத்த பின்றை, ஓங்கிய
15
பருதிஅம் குப்பை சுற்றி, பகல் செல,
மருதமர நிழல், எருதொடு வதியும்
காமர் வேனில்மன் இது,
மாண் நலம் நுகரும் துணை உடையோர்க்கே!
தலைமகள் தோழிக்கு வன்புறை எதிர் அழிந்து சொல்லியது; பிரிவுணர்த்திய தோழி சொல்லியதூஉம் ஆம்.-விற்றூற்று மூதெயினனார்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 18:41:53(இந்திய நேரம்)