தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

ஆளி
252. குறிஞ்சி
இடம் படுபு அறியா வலம் படு வேட்டத்து
வாள் வரி நடுங்கப் புகல்வந்து, ஆளி
உயர் நுதல் யானைப் புகர் முகத்து ஒற்றி,
வெண் கோடு புய்க்கும் தண் கமழ் சோலைப்
5
பெரு வரை அடுக்கத்து ஒரு வேல் ஏந்தி,
தனியன் வருதல் அவனும் அஞ்சான்;
பனி வார் கண்ணேன் ஆகி, நோய் அட,
எமியேன் இருத்தலை யானும் ஆற்றேன்;
யாங்குச் செய்வாம்கொல் தோழி! ஈங்கைத்
10
துய் அவிழ் பனி மலர் உதிர வீசித்
தொழில் மழை பொழிந்த பானாட் கங்குல்,
எறி திரைத் திவலை தூஉம் சிறு கோட்டுப்
பெருங் குளம் காவலன் போல,
அருங் கடி அன்னையும் துயில் மறந்தனளே?
தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழிக்குச் சொல்லுவாளாய், தலைமகள் சொல்லியது. - நக்கண்ணையார்
381. பாலை
ஆளி நல் மான் அணங்குடை ஒருத்தல்
மீளி வேழத்து நெடுந்தகை புலம்ப,
ஏந்தல் வெண் கோடு வாங்கி, குருகு அருந்தும்
அஞ்சு வரத் தகுந ஆங்கண், மஞ்சு தப,
5
அழல் கான்று திரிதரும் அலங்கு கதிர் மண்டிலம்
நிழல் சூன்று உண்ட நிரம்பா நீள் இடை,
கற்று உரிக் குடம்பைக் கத நாய் வடுகர்
வில் சினம் தணிந்த வெருவரு கவலை,
குருதி ஆடிய புலவு நாறு இருஞ் சிறை
10
எருவைச் சேவல் ஈண்டு கிளைத் தொழுதி,
பச்சூன் கொள்ளை சாற்றி, பறை நிவந்து,
செக்கர் வானின் விசும்பு அணி கொள்ளும்
அருஞ் சுரம் நீந்திய நம்மினும், பொருந்தார்
முனை அரண் கடந்த வினை வல் தானை,
15
தேன் இமிர் நறுந் தார், வானவன் உடற்றிய
ஒன்னாத் தெவ்வர் மன் எயில் போல,
பெரும் பாழ் கொண்ட மேனியள், நெடிது உயிர்த்து,
வருந்தும்கொல்? அளியள் தானே சுரும்பு உண,
நெடு நீர் பயந்த நிரை இதழ்க் குவளை
20
எதிர் மலர் இணைப் போது அன்ன, தன்
அரி மதர் மழைக் கண் தெண் பனி கொளவே!
தலைமகன் இடைச் சுரத்துத் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - மதுரை இளங்கௌசிகனார்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 18:53:44(இந்திய நேரம்)