தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

இதல்(கவுதாரி, காடை)
133. பாலை
'குன்றி அன்ன கண்ண, குரூஉ மயிர்,
புன் தாள், வெள்ளெலி மோவாய் ஏற்றை
செம் பரல் முரம்பில் சிதர்ந்த பூழி,
நல் நாள் வேங்கை வீ நன்கனம் வரிப்ப,
5
கார் தலைமணந்த பைம் புதற் புறவின்,
வில் எறி பஞ்சியின் வெண் மழை தவழும்
கொல்லை இதைய குறும் பொறை மருங்கில்,
கரி பரந்தன்ன காயாஞ் செம்மலொடு
எரி பரந்தன்ன இலமலர் விரைஇ,
10
பூங் கலுழ் சுமந்த தீம் புனற் கான் யாற்று
வான் கொள் தூவல் வளி தர உண்கும்;
எம்மொடு வருதல் வல்லையோ மற்று?' எனக்
கொன் ஒன்று வினவினர்மன்னே தோழி!
இதல் முள் ஒப்பின் முகை முதிர் வெட்சி
15
கொல் புனக் குருந்தொடு கல் அறைத் தாஅம்
மிளை நாட்டு அத்தத்து ஈர்ஞ் சுவற் கலித்த
வரி மரற் கறிக்கும் மடப் பிணைத்
திரிமருப்பு இரலைய காடு இறந்தோரே.
'பிரிவிடை ஆற்றாளாயினாள்' எனக் கவன்ற தோழிக்குத், தலைமகள், 'ஆற்றுவல்' என்பது பட, சொல்லியது. - உறையூர் மருத்துவன் தாமோதரனார்
387. பாலை
திருந்துஇழை நெகிழ்ந்து, பெருந் தோள் சாஅய்,
அரி மதர் மழைக் கண் கலுழச் செல்வீர்!
வருவீர் ஆகுதல் உரைமின் மன்னோ
பூக் கண் பறைந்த புன் தலைச் சிறாஅரொடு
5
அவ் வரி கொன்ற கறை சேர் வள் உகிர்ப்
பசை விரல் புலைத்தி நெடிது பிசைந்து ஊட்டிய
பூந் துகில் இமைக்கும், பொலன் காழ் அல்குல்,
அவ் வரி சிதைய நோக்கி, வெவ் வினைப்
பயில் அரில் கிடந்த வேட்டு விளி வெரீஇ,
10
வரிப் புற இதலின் மணிக் கட் பேடை
நுண் பொறி அணிந்த எருத்தின், கூர் முட்
செங் கால், சேவல் பயிரும் ஆங்கண்,
வில் ஈண்டு அருஞ் சமம் ததைய நூறி,
நல் இசை நிறுத்த நாணுடை மறவர்
15
நிரை நிலை நடுகல் பொருந்தி, இமையாது,
இரை நசைஇக் கிடந்த முது வாய்ப் பல்லி
சிறிய தெற்றுவதுஆயின், 'பெரிய
ஓடை யானை உயர்ந்தோர்ஆயினும்,
நின்றாங்குப் பெயரும் கானம்
20
சென்றோர்மன்' என இருக்கிற்போர்க்கே.
தலைமகளது குறிப்பு அறிந்து, தோழி தலைமகனைச் செலவு அழுங்கச் சொல்லியது. - மதுரை மருதன் இளநாகனார்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 19:33:45(இந்திய நேரம்)