தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

ஈயல்
8. குறிஞ்சி
ஈயல் புற்றத்து ஈர்ம் புறத்து இறுத்த
குரும்பி வல்சிப் பெருங் கை ஏற்றை
தூங்கு தோல் துதிய வள் உகிர் கதுவலின்,
பாம்பு மதன் அழியும் பானாட் கங்குலும்,
5
அரிய அல்லமன் இகுளை! 'பெரிய
கேழல் அட்ட பேழ்வாய் ஏற்றை
பலா அமல் அடுக்கம் புலாவ ஈர்க்கும்
கழை நரல் சிலம்பின்ஆங்கண், வழையொடு
வாழை ஓங்கிய தாழ் கண் அசும்பில்,
10
படு கடுங் களிற்றின் வருத்தம் சொலிய,
பிடி படி முறுக்கிய பெரு மரப் பூசல்
விண் தோய் விடரகத்து இயம்பும் அவர் நாட்டு,
எண் அரும் பிறங்கல் மான் அதர் மயங்காது,
மின்னு விடச் சிறிய ஒதுங்கி, மென்மெல,
15
துளி தலைத் தலைஇய மணி ஏர் ஐம்பால்
சிறுபுறம் புதைய வாரி, குரல் பிழியூஉ,
நெறி கெட விலங்கிய, நீயிர், இச் சுரம்,
அறிதலும் அறிதிரோ?' என்னுநர்ப் பெறினே.
தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழிக்குச் சொல்லுவாளாய்த் தலைமகள்சொல்லியது. - பெருங்குன்றூர் கிழார்.
394. முல்லை
களவும் புளித்தன; விளவும் பழுநின;
சிறு தலைத் துருவின் பழுப்பு உறு விளைதயிர்,
இதைப் புன வரகின் அவைப்பு மாண் அரிசியொடு,
கார் வாய்த்து ஒழிந்த ஈர் வாய்ப் புற்றத்து
5
ஈயல் பெய்து அட்ட இன் புளி வெஞ் சோறு
சேதான் வெண்ணெய் வெம் புறத்து உருக,
இளையர் அருந்த, பின்றை, நீயும்
இடு முள் வேலி முடக் கால் பந்தர்,
புதுக் கலத்து அன்ன செவ் வாய்ச் சிற்றில்,
10
புனை இருங் கதுப்பின் நின் மனையோள் அயர,
பாலுடை அடிசில் தொடீஇய, ஒரு நாள்,
மா வண் தோன்றல்! வந்தனை சென்மோ
காடு உறை இடையன் யாடு தலைப்பெயர்க்கும்
மடி விடு வீளை வெரீஇ, குறு முயல்
15
மன்ற இரும் புதல் ஒளிக்கும்
புன்புல வைப்பின் எம் சிறு நல் ஊரே.
இரவுக்குறித் தலைமகளை இடத்து உய்த்து வந்து, தோழி தலைமகனை வரைவு கடாயது. - நன்பலூர்ச் சிறுமேதாவியார்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 19:33:58(இந்திய நேரம்)