தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Agananooru

பாயிரம்

நின்ற நீதி, வென்ற நேமி,
பழுது இல் கொள்கை, வழுதியர் அவைக்கண்,
அறிவு வீற்றிருந்த செறிவுடை மனத்து
வான் தோய் நல் இசைச் சான்றோர் குழீஇ,
அருந் தமிழ் மூன்றும் தெரிந்த காலை,
ஆய்ந்த கொள்கைத் தீம் தமிழ்ப் பாட்டுள்,
நெடியவாகி அடி நிமிர்ந்து ஒழுகிய
இன்பப் பகுதி இன் பொருட் பாடல்,
நானூறு எடுத்து நூல் நவில் புலவர்,
களித்த மும்மதக் களிற்றியானை நிரை,
மணியொடு மிடைந்த அணி கிளர் பவளம்,
மேவிய நித்திலக் கோவை, என்றாங்கு,
அத்தகு பண்பின் முத் திறம் ஆக
முன்னினர் தொகுத்த நல் நெடுந் தொகைக்குக்
கருத்து எனப் பண்பினோர் உரைத்தவை நாடின்,
அவ் வகைக்கு அவைதாம் செவ்விய அன்றி,
அரியவையாகிய பொருண்மை நோக்கி,
கோட்டம் இன்றிப் பாட்டொடு பொருந்தத்
தகவொடு சிறந்த அகவல் நடையால்,
கருத்து இனிது இயற்றியோனே பரித் தேர்
வளவர் காக்கும் வளநாட்டுள்ளும்
நாடு எனச் சிறந்த பீடு கெழு சிறப்பின்,
கெடல் அருஞ் சிறப்பின், இடையள நாட்டுத்
தீது இல் கொள்கை மூதூருள்ளும்,
ஊர் எனச் சிறந்த சீர்கெழு மணக்குடிச்
செம்மை சான்ற தேவன்
தொன்மை சான்ற நன்மையோனே.

இத் தொகைக்குக் கருத்து அகவலால் பாடினான் இடையள நாட்டு மணக்குடியான் பால்வண்ண தேவனான வில்லவதரையன்.

நெடுந்தொகை நானூறும் கருத்தினொடு முடிந்தன. இவை பாடின கவிகள் நூற்று நாற்பத்தைவர்.

இத் தொகைப் பாட்டிற்கு அடி அளவு சிறுமை பதின்மூன்று; பெருமை முப்பத்தொன்று. தொகுப்பித்தான் பாண்டியன் உக்கிரப் பெருவழுதி. தொகுத்தான் மதுரை உப்பூரிகுடிகிழான் மகனாவான் உருத்திரசன்மன் என்பான்.

‘வண்டுபடத் ததைந்த கண்ணி’ என்பது முதலாக, ‘நெடு வேள் மார்பின்’ என்பது ஈறாகக் கிடந்த பாட்டு நூற்றிருபதும் ‘களிற்றியானை நிரை’ எனப்படும். இப்பெயர் காரணத்தால் பெற்றது. இது பொருட் காரணமாகக் கொள்க.

‘நாம் நகை உடையம்’ என்பது முதலாக, ‘நாள் வலை முகந்த கோள் வலைப் பரதவர்’ என்பது ஈறாகக் கிடந்த பாட்டு நூற்றெண்பதும் ‘மணிமிடை பவளம்’ எனப்படும். இதுவும் காரணப் பெயர், என்னை? செய்யுளும் பொருளும் ஒவ்வாமையால்.

‘வறனுறு செய்தி’ என்பது முதலாக, ‘நகை நன்று அம்ம தானே அவனொடு’ என்பது ஈறாகக் கிடந்த பாட்டு நூறும், ‘நித்திலக் கோவை’ எனப்படும்; செய்யுளும் பொருளும் ஒக்கும் ஆகலான்.

 
வியம் எல்லாம் வெண் தேர் இயக்கம்; கயம் மலர்ந்த
தாமரை ஆறாகத் தகைபெறீஇ, காமர்
நறு முல்லை நான்காக நாட்டி, வெறி மாண்ட
எட்டும் இரண்டும் குறிஞ்சியா, குட்டத்து
இவர் திரை பத்தா, இயற்பட யாத்தான்,
தொகையில் நெடியதனைத் தோலாச் செவியான்
வகையின் நெடியதனை வைப்பு.
 
 
 
ஒன்று, மூன்று, ஐந்து, ஏழ், ஒன்பான், பாலை; ஓதாது
நின்றவற்றின் நான்கு நெறி முல்லை; அன்றியே,
ஆறாம் மருதம்; அணி செய்தல் ஐ-இரண்டு;
கூறாதவை குறிஞ்சிக் கூற்று.
 
 
 
பாலை வியம் எல்லாம்; பத்தாம் பனி நெய்தல்;
நாலு நளி முல்லை; நாடுங்கால், மேலையோர்
தேரும் இரண்டு, எட்டு, இவை குறிஞ்சி; செந்தமிழின்
ஆறு மருதம்-அகம்.

 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 19:54:38(இந்திய நேரம்)